Monday, December 31, 2012

தமிழ்நாட்டிலும் உண்டு தசரா விழா


மைசூர் தசரா விழாவுக்கு அடுத்த படியாக தென்மாநிலங்களில் தசராவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்தான். பாண்டிய மன்னர்கள் இந்த அம்மனுக்கு முத்துக்களால் மாலை அணிவித்ததால் முத்தாரம்மன் என்ற பெயர் பெற்றதாகக் கூறுவர். இக்கோயில் கருவறையில் ஞானமூர்த்தீஸ்வரர் இடதுகாலை மடித்து, வலதுகாலை தொங்கவிட்டு, வலக்கையில் செங்கோலையும், இடக்கையில் திருநீற்றுப் பாத்திரத்தையும் ஏந்தியுள்ளார். சுவாமிக்கு இடப்புறம், முத்தாரம்மன் நான்கு திருக்கரங்களுடன், வலதுகாலை மடித்து, இடதுகாலை தொங்கவிட்டு அருள்பாலிக்கிறார்.

வலப்புறம் மேற்கையில் உடுக்கை, இடப்புறம் நாகபாசம், வலதுகீழ் திருக்கையில் திரிசூலம், கீழ இடக்கையில் குங்கும பாத்திரம் ஏந்தி அருள்கிறார். இந்த ஆண்டு வருகிற 15ம்தேதி அமாவாசை அன்று கொடியேற்றத்துடன் தசரா விழா கோலாகலமாகத் தொடங்குகிறது. முதல் நாளில் துர்க்கை, இரண்டாவது நாள் தேவி விஸ்வகர்மேஸ்வரர், மூன்றாவது நாள் பார்வதி, நான்காவது நாள் பாலசுப்பிரமணியர், ஐந் தாவது நாள் நவநீத கிருஷ்ணர், ஆறாவது நாள் அம்பாள் மகிஷாசுர மர்த்தினி, ஏழாம் நாளில் ஆனந்த நடராஜர், எட்டாவது நாளில் மகாலட்சுமி, ஒன்பதாவது நாள் தேவி சரசுவதி தோற்றத்தில் காட்சியளிக்கிறாள்.

அன்று அன்னையை தரிசித்தால் கல்விச் செல்வம் கிட்டும் என்பது நம்பிக்கை. தசராவிழாவில் பக்தர்கள் விரதமிருந்து விநாயகர், சிவபெருமான், கிருஷ்ணன், முருகன், காளி, அனுமார், சிங்கம், குரங்கு, போலீஸ்காரர், ராணுவவீரர், அனுமார் போன்ற பல்வேறு வேடங்களைத் தாங்கி வலம் வருவது கண் கொள்ளா காட்சி யாக இருக்கும். தினமும் அருகில் உள்ள ஊர்களுக்குச் சென்று காணிக்கை பெற்று மகிஷாசுர வதம் நடக்கும் 10வது நாளில் அம்மனுக்கு செலுத்துவார்கள்.

பத்தாம் நாள் நள் ளிரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றபின், கடற்கரை சம்ஹார திடலில் மகிஷாசுர வதம் நடைபெறுகிறது. பின்னர் மேடையில் அம்பாள் எழுந்தருள, வாணவேடிக்கைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை வழிபட்டு செல்கிறார்கள். நினைத்த காரியம் நிறைவேறுவதால் பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

No comments:

Post a Comment