Monday, December 31, 2012

துன்பங்களைத் துரத்தி விரட்டும் தூமாவதீ தேவி



சமகா வித்யா தேவியரில் ஏழாவது தேவியாக அருள்பவள் தூமாவதீ. தூமம் எனில் புகை. காரிய வஸ்துவாய் புகை உள்ளதென்றால் அங்கே அக்னி இருக்கக் காரணமாகிறது. புகை சூழ்ந்த ஓரிடத்தில் யாரும் விரும்பி இருக்க மாட்டார்கள். ஆனால் தூமாவதீ புகை மண்டலத்தினூடே பேரறிவுடனும் பேரின்பமுடனும் பேரருளுடனும் சுத்த வைராக்ய ஸ்வரூபிணியாக இருந்து, பிரம்ம வித்யையை நாடுவோர்க்கு அருள்பாலிக்கின்றாள். முக்தியையே அருள வல்லவள் எதைத்தான் தக்கவர்க்கு அருளமாட்டாள்? தட்சப் பிரஜாபதியின் மகளான தாட்சாயணி தேவி, பரமேஸ்வரனை அழைக்காமல் தட்சன் செய்த வேள்வியின் குண்டத்தில் தன் சரீரத்தை விட்டாள்.

அதனால் அந்த குண்டத்திற்கு கௌரிகுண்டம் என பெயர் ஏற்பட்டது. தேவி வீழ்ந்த குண்டத்திலிருந்து எழுந்த புகைமண்டலமே தூமாவதீ எனும் சக்தியாகப் பிரகாசித்தது. புகை என்ற தூமத்திலிருந்து ஆவிர்பவித்ததால் இத்தேவி தூமாவதீ எனப் பெயர் பெற்றாள். பால்குன மாதம், செவ்வாய்க்கிழமை, அக்ஷய திருதியை சாயங்கால வேளையில் இத்தேவி தோன்றியருளினாள். நரைத்த தலைமுடியுடனும் வயோதிக தோற்றத்துடனும் கருத்த மேனியுடனும், நீண்ட ஒல்லியான உடலமைப்பு கொண்டவள் இத்தேவி. சீரற்ற பற்கள், வண்ண ஆடைகளோ, ஆபரண அலங்காரங்களோ இன்றி, பழைய துணியை அணிந்தவள். காகக் கொடியைக் கொண்ட முத்தூண்கள் கொண்ட ஒற்றைச் சக்கர ரதத்தில் மயானத்தில் வாசம் செய்பவள் இத்தேவி. கொடூரமான பார்வை கொண்டவள். பசி, தாகத்தால் வருந்தும் தோற்றம் கொண்டவள்.

மூன்று காகங்கள் ரதத்தை இழுக்க ஒன்று முன்னே வழிகாட்டிச் செல்ல ஒன்று பின்னே பின் தொடர்கிறது. இத்தேவியின் புறத் தோற்றத்தைக் கண்டு யாரும் விரும்பி, நெருங்கி இந்த அம்பிகையை வழிபடுவதில்லை. செல்வத்தையும், விஷய போகத்தையும் வேண்டுவோர், ஐஸ்வர்ய தேவதையான மகாலட்சுமியை அழைத்து வழிபடுவார்களா அல்லது அலக்ஷ்மியான தூமாவதீயை விரும்பி அழைப்பார்களா! மயானப் புகை சூழ்ந்துள்ளது. ஒரு விரலால் முறத்தைப் பிடித்து உமியை வீசி அகற்றுகிறாள். பதியை இழந்து விதவை திருக்கோலம் பூண்டு, பூவும் பொட்டுமின்றி அமங்கலத் தோற்றத்துடன் அரசமரத்தடியில் தனியாக வாசம் செய்யும் தேவி இவள். செல்வச் செழிப்பு, பகட்டுப் படாடோபங்களான எல்லாவித பாக்கியங்களையும் அறவே துறந்து ஒதுக்கியவளே இந்த அன்னை. மகாலட்சுமியின் மூத்த சகோதரி.

தன் தங்கையின் திருமணத்திற்காக திருமாலின் சொல்லை ஏற்று மாமுனிவரை மணந்து பின் அவரை இழந்து தர்மமே வடிவமான ஒற்றைச் சக்கர ரதத்தில் அமர்ந்து பவனி வருபவள். இத்தேவியின் கைகளில் ஒன்று அபய முத்திரையை தாங்கியிருக்க, மற்றொரு கை முறத்தை ஏந்தியுள்ளது. சிந்தனை என்னும் தவிட்டைப் புடைத்து ஆத்மாவான அரிசியைத் தருபவள் இவள். திருமாலின் யோக நித்திரையும் இவளே. தானியத்தில் கலந்துள்ள உமியைக் களைவது போல் நம்மில் கலந்துள்ள காம, குரோத, அகங்கார, மமகாரங்களான உமிகளை தன் கையிலுள்ள முறத்தால் புடைத்துப் போக்கி நமக்குத் தூய அறிவையும் சக்தியையும் சந்தோஷத்தையும் அருள்பவள். நம்மிடமுள்ள வேண்டாத துர்குணங்கள் உமியைப் போல் தேவியின் திருவருளால் பறந்து போகின்றன; தீவினைகள் களையப்படுகின்றன.

பத்ம புராணத்திலும் ஸ்கந்த புராணத்திலும் இத்தேவியின் தோற்றம் பற்றி பல்வேறு விதங்களாகக் கூறப்பட்டுள்ளது. தேவாசுர யுத்தம் நடைபெற்றபோது தேவர்கள் தோற்றோடினர். அவ்வாறு ஓடும்போது ததீசி முனிவரிடம் தங்கள் ஆயுதங்களைக் கொடுத்து பாதுகாத்து வரும்படி கூறினர். அவரும் அவ்வாறே அந்த ஆயுதங்களை தன் ஆசிரமத்தில் வைத்துக்கொண்டார். தோற்றோடிய தேவர்களை அழிக்கத் தேடி வந்த அசுரர்கள், ததீசி முனிவரின் ஆசிரமத்தின் அருகில் வந்தார்கள். ஆயுதங்களை அசுரர்கள் கண்டு பிடித்துவிடுவார்களோ என நினைத்த முனிவர், தன் யோக சக்தியால் அவற்றைக் கரைத்துக் குடித்து விட்டார். பின்னர் தேவர்கள் வந்து கேட்டபோது அவர் நடந்த சம்பவத்தைக் கூறினார்.

அவர்களோ, ஆயுதங்களைக் குடித்ததால் உங்கள் எலும்புகளை எங்களுக்குத் தாருங்கள், அதிலிருந்து எங்கள் ஆயுதங்களை செய்து கொள்கிறோம் என கூற, அவரும் அதற்குச் சம்மதித்து தன் உயிர் நீத்தார். அவர் எலும்புகளிலிருந்து தேவர்கள் தங்களுக்கு வேண்டிய ஆயுதங்களை செய்து கொண்டனர். ததீசி முனிவர் உயிர் விட்டதைக் கண்ட அவர் மனைவி ஸுவர்சா தன் கணவரின் மரணத்திற்குக் காரணமான தேவர்களைச் சபித்துவிட்டு தன் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்த கருவை தன் வயிற்றைக் கிழித்து வெளிப்படுத்தி அதற்கு பிப்பலாதன் என பெயர் சூட்டி ஆலமரத்தடியில் விட்டு விட்டு சமாதியில் ஆழ்ந்தாள். ருத்ரனின் அம்சமான பிப்பலாதன் பல காலம் தவம் செய்தான். தன் தந்தை தவம் செய்தபோது அவரின் தவத்திற்கு இடையூறு செய்த கோலன் எனும் அசுரனை அழிக்க ஒரு தேவியை உண்டாக்கினார். அவளே தூமாவதீ என்று ஒரு புராணம் சொல்கிறது.

இத்தேவியின் மகாமந்திரம், எட்டு அட்சரங்கள் கொண்டது. அது நமக்கு ஆன்மிக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும். அஞ்ஞானத்தை விலக்கும். அனைத்துவித சித்திகளையும் தரவல்லது. பகைவர் மீது வெற்றி, அறியாமையிருள் விலகுதல், நல்லறிவு கிட்டுதல் போன்ற அனைத்தையும் இத்தேவியின் உபாசனை மூலம் நாம் பெறலாம். இவளையே ஜ்யேஷ்டா, ஆர்த்ரபடி, மர்கடீ, கர்மடீ என்று வெவ்வேறு பெயர்களில் வழிபடுவோரும் உண்டு. புராணங்கள் இவளை ப்ராந்தி என்றும் வேதங்கள் ராக்ரி என்றும் போற்றுகின்றன. நம்முடைய மரணத்திற்கும் மறுபிறவிக்கும் இடையே உள்ள இடைவெளியை இவள் பூர்த்தி செய்வதாக தேவி வழிபாட்டில் கூறப்பட்டுள்ளது.

இவ்வுலகில் ஏற்படும் சுஷுப்தி, ஸ்வப்னம், ஜாக்ரத், மயக்கம், மூர்ச்சை, மறதி போன்றவற்றிற்கு இவளே காரணமாகிறாள். யோகியர்க்கு ஏற்படும் நான்காவதான துரீய நிலைக்கும் இவளே அதீத காரணமாகக் கூறப்படுகிறாள். இத்தேவியின் உபாசனையால் உயர் பதவிகளை அடையலாம். ஆகாயத்தில் சூரியனை மேகக் கூட்டங்கள் மறைப்பதைப் போல நம் ஆத்ம ஸ்வரூபத்தை அறியாமை என்ற இருள் மூடியுள்ளது. அவ்விருட்டை தூமம் அதாவது புகை என்று குறிப்பிடுவர். இத்தேவியை வழிபட அந்தப் புகை போன்ற மன இருளை அகற்றி, மேலான ஆத்ம ஞானத்தை அடையலாம் எனச் சொல்லப்பட்டுள்ளது. எதையும் தவறாகக் காட்டி, தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய சக்தி இவளுடையது.

பொதுவாக நாம் இளமையிலுள்ள அழகையே போற்றிப் பாராட்டுகிறோம். ஆனால் முதுமையிலும் அழகும் அறிவும் அருளுமுள்ள விசேஷத்தை உணருவதில்லை. இதை உணர்த்தவே பயங்கரமாக காட்சியளித்தாலும் அருட்பெருங்கருணை வடிவினளான பராசக்தி, தூமாவதீயாக அவதரித்தருளினாள். தள்ளாடும் வயதினர், விதவைகள், சமூகத்தால் ஒதுக்கப்பட்டோர் போன்றோரும் தம்மை அண்டி வந்தால் அவர்களுக்கு சரீர, மனோ, புத்தி, ஆத்ம சக்திகளை அருள்பவள் இவள். பாட்டியிடம்தான் சாப்பிடுவேன் என அடம்பிடிக்கும் பேரன் பேத்திகளைக் காணும்போது வயோதிகத்தின் சிறப்பு விளங்கும் அல்லவா? பணத்தை விட அறிவிலும் அனுபவத்திலும் திறமையிலும் அதிகமானவரை நாம் போற்றி வணங்குகிறோம்.

இந்திரனே மயங்கக்கூடிய பேரழுகுடன் பிரம்ம தேவனால் படைக்கப்பட்ட அகலிகை, வயோதிக மாமுனிவரான கௌதமரை மணந்ததால் பெருமதிப்பு பெற்று விளங்கினாள். உடலழகா, உள்ளத்துத் தவ அழகா, எதற்கு இன்றுவரை முக்கியத்துவம் இருக்கிறது? பித்ரு தேவதைகளை மகிழ்விக்க காகத்திற்கு அன்னமிடுகிறோம். ‘கா’ என்றால் மாதாவை குறிக்கும். மகாலட்சுமியையும் குறிக்கும். ‘கா’ என காகம் அழைப்பதால் அங்கு சுபிட்சமே நிலவும். அத்தகைய காகத்தின் தேரில் ஏறி காகத்தையே கொடியாகக் கொண்ட தூமாவதீ தேவி பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களையும் தருபவள்.

தூமாவதீ த்யானம்
விவர்ணா சரம்சலா துடா தீர்காச மலிம்னாம்பரா
விமுக்த குந்தலா ரூக்ஷா விதவா விரலத்விஜா
காகத்வஜ ரதாரூடா விலம்பித பயோதரா
சூர்ப ஹஸ்தாதி ரக்தாக்ஷீ த்ருதஹஸ்தா வரான்விதா
ப்ரவ்ருத்த கோணா துப்ருசம் குடிலா குடிலேக்ஷ்ணா
க்ஷுத்பிபாஸார்திதா நித்யம் பயதா கலஹாஸ்பதா
தூமாவதீ காயத்ரி ஓம் தூமாவத்யை வித்மஹே ஸம்ஹாரிண்யை தீமஹி தன்னோ: தூமா ப்ரசோதயாத்.

காக வாகனனான சனிபகவானும் காகக் கொடியுடைய தூமாவதீ தேவியும் பக்தர்களின் பகைவர்களுக்கு அசுபத்தை விளைவித்தும் திக்கின்றித் தம்மையே பணிபவர்க்கு உயர்ந்த சுகம் அருளிக் காக்கும் குணம் கொண்டவராவர். வயோதிகர்கள் தமக்கு இனி அழகோ, யௌவனமோ சௌந்தர்ய தேவதைகள் அருள்வரோ என்று எண்ணும்போது தம்மையொத்த வயோதிக தேவதையைக் கண்டு வணங்கி இவள் நமக்கு நிச்சயம் ஆறுதல் அளிப்பவள், காத்து ரட்சிப்பவள் என்று பூஜித்துப் பலனடைவர். வயோதிகத்திலும் பேரருளும் பேரின்பமும் உண்டு என்பதை உணர்த்துகிறாள் இத்தேவி. சமூகத்தினரால் ஒதுக்கப்பட்டவர்கள் போலவே தேவியும் திருக்கோலம் பூண்டுள்ளாள். வயோதிகத்தில், அனுபவம் காரணமாக அறிவு முதிர்ச்சியும் விவேகச் செழிப்பும் பக்குவப்பட்ட மனப்பான்மையும் இருக்கும்.

அறிய வேண்டியதையும் அடைய வேண்டியதையும் தெளிவாய் உணர்ந்து, மனோதிடத்துடனும் புத்தித் தெளிவுடனும் பேரறிவு பெற்று அதனால் பேரருளை அடைய திருவருள் புரியவே இத்தேவி வயோதிகத் திருக்கோலம் கொண்டுள்ளாள். முதிர்ந்த காயே பக்குவமடையும்போது, சுவை மிக்க பழமாகிறது. முதிர்ந்தவளும் ஞானப் பழமாய் முக்தி தர தயாராகுகிறாள். உலகில் வேறு பிற எதனாலும் பெறமுடியாத முக்தியையே அருளவல்லவள் எனில் இத்தேவியின் சக்தியை அளவிட முடியுமோ? ஞானம் பூரணமாக சித்தித்து இருக்க வேண்டுமாயின் லோக போகங்களைத் துறந்து வைராக்கியஸ்தராய் இருக்க வேண்டும். ஞான பூரணரே முக்தி வடிவினர்.
முக்தியையே தன் அடியார்களுக்கு அருளவல்லவளால், வேறு எதைத்தான் அருள முடியாது? நினைத்த மாத்திரத்தில் தானே ரதி தேவியை விட அதி சுந்தரியாகவும் இளமையாகவும் இத்தேவி மாறலாம். அதையும் தியாகம் செய்து ஞானப் பரிபக்குவமடைந்த மூதாட்டியாய் மாறி, தானே வைராக்கிய விசேஷத்தை உலகோர்க்கு நடித்துக் காட்டும் இத்தேவி, பிரம்மவித்யையை அருளும் பிரம்ம ஸ்வரூபிணி. ஊர்த்வாம்னாய தந்த்ரம் எனும் நூலில் தூமாவதீ துதி உள்ளது. அதன் பாராயண பலனில் அத்துதியை பெருங்கஷ்டத்திலும் மகா சங்கடத்திலும் பெரும் நோயாலும் அவதிப்படும்போதும் சத்ருக்களால் துன்பம் நேரும்போதும் துதித்தால் அத்துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தேவநந்தன ஸிம்ம பஹதூர் என்பவரால் இயற்றப்பட்ட ‘சாக்த ப்ரமோதம்’ எனும் அற்புத நூலின் 10வது அத்தியாயத்தில் தூமாவதீ தேவியின் கவசம், ஹ்ருதயம் மற்றும் ஸஹஸ்ரநாமங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அகாரம் முதல் க்ஷகாரம் வரையுள்ள ஐம்பத்தோரு அட்சரங்களால் ஆன துதியும் மந்த்ரமஹார்ணவம் எனும் நூலில் காணப்படுகிறது. தூமாவதி தேவியின் வழிபாடு சகல காரியசித்தி பெறவும் சத்ரு ஜெயம், காம, குரோத, லோப நாசம், பெரும் கஷ்டம், நோய், எதிரி தொந்தரவு இவற்றிலிருந்து விடுபடவும் நல்ல ஞானம், நற்பண்புகள், நற்குணங்கள், நல்லறிவு பெற்று விளங்கவும் வழிவகுக்கிறது. தூமாவதீ தேவியின் பாத கமலங்களைப் பணிந்து, நம் பாதக மலங்களை அழிப்போம்.

No comments:

Post a Comment