Monday, December 31, 2012

நலங்களெல்லாம் நல்கும் நவராத்திரி விரதம்



தாம்பரத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தாள் புவனேஸ்வரி. கூடவே அவளுடைய மகள்கள். ரயிலின் பெண்கள் பெட்டியில், மாம்பலத்தில் அவர்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு பெண்மணி ஏறிக் கொண்டாள். அவள் பவானி மாமிதான். மாமியின் கையிலிருந்த பை கொஞ்சம் கனமாகவே இருந்தது. ‘‘வாங்க, வாங்க’’ என்று மாமியை வரவேற்றாள் தீபா. ‘‘என்ன மாமி ஷாப்பிங்கா? ரொம்ப கனமான ஷாப்பிங் போலிருக்கே?’’
‘‘ஆமாம், நவராத்திரி வர்றது இல்லையா, ஒவ்வொரு வருஷமும் ஏதாவது புது பொம்மை வாங்கி கொலுவிலே வைப்பேன்...’’ மாமி சொன்னாள்.
‘‘அதானே பார்த்தேன். மாமியை சந்திச்சோம்னா நிச்சயமா ஏதாவது ஒரு விரதத்தைப் பத்தி நாம் தெரிஞ்சுக்க முடியும். நம்ம ஊர் வர்ற வரைக்கும் நவராத்திரியைப் பத்தி சொல்லுங்களேன் மாமி’’ கிருத்திகா கேட்டாள்.

இருக்கையில் அமர்ந்து கொண்ட மாமி, புடவைத் தலைப்பால் கழுத்தையும் குங்குமம் கலையாதபடி முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.
‘‘ஏய், சும்மாயிரு, மாமியைப் பார்த்தாலே போதும். உடனே உன் உபத்திரவம்தான்...’’ புவனேஸ்வரி மகளைக் கடிந்து கொண்டாள். ‘‘இருக்கட்டும், அவளோட ஆர்வம் அது. எனக்கும் தெரிஞ்ச விஷயங்களைச் சொல்லணும்னு ஆசை இருக்காதா என்ன?’’ மாமி அவளை சமாதானப்படுத்தினாள். ‘‘உங்களுக்குத் தெரியும், நவராத்திரின்னா ஒன்பது நாள் ஃபங்ஷன். முதல் மூணு நாள் துர்க்கையையும் அடுத்த மூணு நாள் மகாலட்சுமியையும் கடைசி மூணுநாள் சரஸ்வதியையும் வழிபடறதுதான் வழக்கம்...’’

‘‘ஆனா, அந்த மூணு தேவியர்களும் அம்பிகைதானே?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘ஆமாம். மகிஷாசுரனை அழிக்கறதுக்காக அம்பாள் உருவெடுத்தாள். எல்லா தேவர்களோட அம்சமும் பொருந்தினவளாக இருந்தாள் அவள். அசுரனை அழிக்கறதுக்கு தேவர்கள் எல்லோரும் அவங்கவங்களோட ஆயுதங்களை அம்பாளுக்குக் கொடுத்தாங்க. அந்த அசுரனை அழிக்க அம்பாள் ஒன்பது நாட்கள் தவம் இருந்தா. பத்தாவது நாள் அந்தத் தவ வலிமையாலும் ஆயுதங்கள் உதவியாலும் அசுரனை அழித்தாள். அம்பாள் தவமிருந்தாளே அந்த ஒன்பது நாட்கள்தான் நவராத்திரி. ஆனா மகாலட்சுமியாகத்தான் அம்பிகை அவதரிச்சா. மகாலட்சுமின்னா சகல லட்சணங்களும் உள்ளவள்னு அர்த்தம்.’’

‘‘ஓஹோ, அப்படிப் பாத்தா மொத்தத்திலே எல்லோருமே சக்தி ஸ்வரூபம்தான்...’’ தீபா சொன்னாள். ‘‘ஆமாம். அம்பிகை மகிஷாசுரனை அழிச்சதனால, அவளுக்கு மகிஷாசுரமர்த்தினின்னு பேரு வந்தது. அதே மாதிரி ‘கம்பாசுரன்’ங்கற அசுரனை சரஸ்வதி அழிச்சா. சாதாரணமா நாலு கைகளோடதான் இருப்பா சரஸ்வதி. அசுரனை அழிக்கும்போது எட்டு கரங்கள் உடையவளாக இருந்தாள். இப்படி அசுரர்களை அழிச்சு மக்கள், தேவர்களோட பயங்களையும் அழிச்சு வெற்றியடைந்த அம்பிகை அவதரிச்சது நவராத்திரி துவக்கத்துலதான். சக்தியாக அவதரிச்ச அவ, அசுரர்களையெல்லாம் அழிச்சுட்டு சிவனோட ஐக்கியமாகி சக்தி ஸ்வரூபிணியாக ஆனது விஜயதசமி அன்னைக்கு.’’ ‘‘ஆக நவராத்திரி கொண்டாட்டத்தின் விவரம் இதுதானா?’’

‘‘ஆமாம். அதோட, இந்த நவராத்திரி விரதத்தை எப்படிக் கடைப்பிடிக்கறதுன்னு சொல்றேன்...புரட்டாசி மாசம் வளர்பிறை பிரதமை திதியிலே நவராத்திரி ஆரம்பிக்கறது...’’ ‘‘பிரதமை திதியில நல்ல விஷயம் எதையும் ஆரம்பிக்க மாட்டாங்கன்னு சொல்வாங்களே..’’ புவனேஸ்வரி தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டாள். ‘‘கரெக்ட்தான். ஆனா, நவராத்திரி அப்பதான் ஆரம்பிக்குது. பிரதமையைத் தவிர்க்கறதுக்காக அதுக்கு முந்தின நாள் அமாவாசை அன்னிக்கே சாஸ்திரத்துக்கு ஒரு பொம்மை அல்லது கலசத்தை வெச்சு நவராத்திரி கொலு பொம்மைகளை அடுக்கற வேலையைத் துவங்கிடலாம்’’ மாமி விளக்கம் கொடுத்தாள்.‘‘அப்பாடி, இப்பதான் நிம்மதியாச்சு’’, புவனேஸ்வரி ஆறுதல் அடைந்தாள்.‘‘அமாவாசை அன்னிக்குக் காலையிலேயே கொலுப்படி அமைக்கத் தயாராயிடுங்க. வீட்டை ஒட்டடை அடிச்சு, சுத்தமாகப் பெருக்கி, பளிச்சுனு வெச்சுக்கோங்க.

கொலுப்படி அமைக்கப் போற இடத்திலே சின்னதாக ஒரு கோலம் போட்டுக்கோங்க. கொலுப்படி தெற்கு தவிர மீதி மூணு திசைகள எதையாவது பார்த்தபடி இருக்கலாம். அவரவர் வசதிக்கேற்ப படிகள் 3, 5, 7ன்னு ஒற்றைப்படை எண்ணிக்கையிலே இருக்கறது நல்லது.’’ ‘‘கொலுப்படின்னே விக்கறாங்க இல்லே மாமி?’’ கிருத்திகா கேட்டாள். ‘‘ஆமாம். ஸ்லாட்டட் ஆங்கிள்னு இரும்பு சட்டங்கள், பலகைகளாக இருக்கும். இப்ப பிளாஸ்டிக்ல கூட கிடைக்குது. தனித்தனியாகப் பிரிச்சு வெச்சுக்கலாம். தேவைப்படும்போது நட், போல்ட் போட்டு முடுக்கிக்கலாம். எங்க அம்மா, வீட்ல இருக்கற பெட்டிகள், டிரம்கள்னு அடுக்கிதான் கொலு வைப்பாங்க. எங்க அப்பா கூட கத்துவார், உடுத்திக்கக்கூட மிச்சம் வைக்காம என்னோட வேஷ்டியையெல்லாம் கொலுப்படியில் விரிச்சுட்டியேன்னு. பாவம் எங்க அப்பா,’’ என்று பழைய நினைவுகளைச் சொல்லிச் சிரித்தாள், மாமி.

மற்றவர்களும் கலகலவென்று சிரித்தார்கள். மாமி தொடர்ந்தாள். ‘‘சாயங்காலமா இப்படி படிகளை அமைச்சுக்கோங்க. ஏதேனும் ஒரு பொம்மையை எடுத்து மேல் தட்டிலே வைக்கணும். அதாவது நவராத்திரி கொலு கொண்டாட்டம் ஆரம்பிச்சாச்சு. ஆச்சா, மறுநாள் பிரதமை திதியன்னிக்கு காலையிலேயே எழுந்து குளிச்சுட்டு, எல்லா பொம்மைகளையும் எடுத்துப் படிகளில் வைக்கலாம். அப்படி வைக்கும்போதே, அம்மன் ஸ்லோகங்களை சொல்லிக்கிட்டே வைக்கறது நல்லது. ‘‘சம்பிரதாயப்படி என்ன வழக்கமோ அந்த வழக்கப்படி, அதாவது உங்க குடும்ப வழக்கப்படி பொம்மைகளை வையுங்க. அழகு பண்ணுங்க.... ஒரு விஷயம். இப்படி படிகள்ல கொலு வெச்சிட்டு அடுத்தடுத்த நாட்கள்ல ஐடியாவை மாத்திகிட்டு பொம்மைகளை மாத்தி மாத்தி வைக்காதீங்க. அதுகூடாது. அதனால, முதல்லயே நல்லா பிளான் பண்ணிகிட்டு பொம்மைகளை சரியான இடத்திலே வெச்சிடுங்க...’’

‘‘அசுரனை அழிச்சு கொண்டாட்டம் நவராத்திரி சரி. இதை பொம்மைகளை வெச்சுக் கொண்டாடணும்னு எப்படி, யார் ஆரம்பிச்சாங்க?’’ தீபா கேட்டாள்.
‘‘சரியா கேட்டே...’’ மாமி அவளைப் பாராட்டினாள். மகிஷாசுரனை அம்பாள் வதம் பண்ணினாள் இல்லையா, அப்போ கடவுள்களும் தேவர்களும் அவ போரிடற அழகைப் பார்த்தார்களாம், உக்கிரமாக அவள் சண்டையிட்டதைப் பார்த்து அப்படியே பிரமிச்சுப் போய் பொம்மைகளாக உறைஞ்சு போயிட்டாங்களாம்! அதைத்தான் இப்ப நாம் கொலு பொம்மைகளாக வெச்சு அந்த சம்பவத்தை நினைவு வெச்சிக்கறோம்.’’ ‘‘அதானே பார்த்தேன்...’’ தனக்கு சரியான பதில் கிடைத்ததில் தீபாவுக்கு சந்தோஷம். ‘‘இப்படி கொலு வைக்கறதுதான் நவராத்திரி கொண்டாட்டமா மாமி?’’ கிருத்திகா கேட்டாள்.

‘‘இல்லே, அது மட்டும் இல்லே. அப்படி கொலு வைச்சப்புறம் தினம் தினம் அம்மன் ஸ்லோகங்களைச் சொல்லலாம். தினமும் சாயங்காலம் ஏதாவது சுண்டல், சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல்னு செய்து கொலு பொம்மைகளுக்கு நைவேத்தியம் செய்யலாம். விளக்கேற்றி பூஜை செய்யலாம். அன்னன்னிக்கு சாயங்காலங்கள்ல அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்களை உங்களோட வீட்டுக்கு வரவழைச்சு அவங்களுக்கு நைவேத்யப் பொருட்களையும் முடிந்தால் வேறே மங்கலப் பொருட்களையும் தரலாம்...’’ ‘‘அவங்களை ஏன் கூப்பிடணும்? நம்ம வீட்டு கொலுவைப் பார்த்து ரசிக்கவா?’’ தீபா கேட்டாள். ‘‘அதுக்கும் ஆன்மிகக் காரணம் இருக்கு’’ மாமி பதில் சொன்னாள். ‘‘கொலுவுக்குக் கூப்பிடறத்துக்காக உங்க வீட்டுப் பெண் குழந்தைகள், கன்னிப் பெண்கள் மற்றும் சுமங்கலிகள் அடுத்தவங்க வீட்டுக்குப் போறதும் அவங்க வீட்டுப் பெண்கள் உங்க வீட்டுக்கு வர்றதும், தெய்வீக நோக்கத்தைக் கொண்டதாகும். அதாவது அம்பாளே ஒவ்வொருத்தர் உருவத்திலேயும் அவங்கவங்க வீடுகளுக்கு வர்றதா ஐதீகம்...’’

‘‘அட..இது நல்லாயிருக்கே...’’ வியந்தாள் புவனேஸ்வரி. ‘‘நீ வேறேம்மா’’ தீபா அலுத்துக் கொண்டாள். ‘‘இப்பல்லாம் நவராத்திரி கொலு அழைப்பிதழ்னு கார்டு போட்டுடறாங்க. இல்லாட்டி ஃபோன் பண்ணிடறாங்க’’ தீபா சொன்னாள். ‘‘வாஸ்தவமா, அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்களோட நட்பும் தொடர்பும் வளர்ந்து ஒருவருக்கொருவர் உதவியாகவும் ஆதரவாகவும் பழகறதுக்கு இந்த மாதிரி கொண்டாட்டங்கள்லாம் ஒரு தூண்டுகோலாக அமைஞ்சிருக்கு...’’ மாமி சொன்னாள். ‘‘அப்படி வர்ற பெண்களுக்கு கண்ணாடி, சீப்பு, குங்குமச்சிமிழ், வளையல்னு மங்கலப் பொருட்களைக் கொடுக்கலாம். இதனால அப்படிக் கொடுக்கறவங்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கும்ங்கறது பெரியவங்களோட வாக்கு. இப்படிக் கொடுக்கறதை அவங்கவங்க வசதிக்கேற்ப செய்யலாம். கூட கொடுக்கறதனால கூடுதல் வளம் கிடைக்கும்னோ குறைவா கொடுக்கறதால குறைவான பலன் கிடைக்கும்னோ கணக்கில்லே.

மனசுதான் முக்கியம். உள்ளப் பூரிப்போட நம்மகிட்டேயிருந்து வாங்கிக்கிறவங்க வாழ்க்கையிலேயும் சகல சௌபாக்கியங்களும் நிறையணும்னு வேண்டிக்கலாம்...’’‘‘அதாவது நவராத்திரி ஒன்பது நாளும் இப்படிச் செய்யணும் இல்லையா?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘செய்தா நல்லது. குறிப்பாக நவராத்திரி விரதம்ங்கறது இப்படி நல்ல எண்ணங்களை வளர்த்துக்கறதுதான். அதிலும் சாயங்காலம் தினமும் கொலுவுக்கு முன்னால சின்னதாக பூஜை பண்ணிட்டு, அம்பாள்கள் அதான் அக்கம்பக்கத்துப் பெண்கள் வருகைக்காகக் காத்திருக்கலாம். உங்க வீட்லேயும் சரி, கொலு வெச்சு உங்களை அழைச்சிருக்கறவங்க வீட்லேயும் சரி, கொலுவுக்கு முன்னால உட்கார்ந்து அம்மன் ஸ்லோகங்களைச் சொல்லலாம். பொதுவாக ராகம் போட்டு கீர்த்தனைகள் பாடுவாங்க. சில வீட்ல மினி கச்சேரியே செய்வாங்க.... இனிமையான குரல் வீட்ல ஒலிச்சா அதுவே சுபிட்சம்தானே?’’

‘‘ஏதோ சந்தர்ப்ப வசத்தால நவராத்திரி ஒன்பது நாளும் அனுசரிக்க முடியாம போய்ட்டுதுன்னா என்ன பண்றது மாமி?’’ புவனேஸ்வரி சற்றே கவலையுடன் கேட்டாள். ‘‘அதனால பரவாயில்லை. ஆனா, அஷ்டமி திதியில வர்ற சரஸ்வதி பூஜையை மட்டுமாவது கண்டிப்பாக அனுசரிக்கறது நல்லது.’’ மாமி சொன்னாள். ‘‘அந்த ஒரு நாள் கடைபிடிக்கறது ஒன்பது நாளைக்கும் கடைப்பிடிக்கறதுக்கு சமம்.’’ ‘‘சரஸ்வதிக்கு அவ்வளவு சக்தியா?’’ தீபா கேட்டாள்.
‘‘சரஸ்வதி கலைகளுக்கெல்லாம் இருப்பிடமானவள். அதனால அவளைத் தொழுது விரதம் இருந்தா சகல நன்மைகளும் கிடைக்கும். ஆகவே, புத்தகங்கள், இசைக் கருவிகள், எழுத உதவற பேனா, பென்சில் இதையெல்லாம் சரஸ்வதி பூஜையன்னிக்கு பூஜையில வெச்சு அவற்றையும் வழிபடலாம்.

அதோட நாம் தினமும் உபயோகிக்கிற கத்தி, கத்திரி மாதிரியான ஆயுதங்களையும் சிலர் வெச்சு வழிபடுவாங்க. அப்படி ஆயுதங்களை வைக்கறதுக்கு முக்கிய காரணம், அவற்றை ஆக்கபூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்தணும்னு வேண்டிக்கறதுக்காகத்தான்..’’ ‘‘விஜயதசமி, அடுத்த நாள்தானே மாமி?’’ புவனேஸ்வரி கேட்டாள். ‘‘ஆமாம். கல்வி, கலை இவற்றைக் கற்றுக்கொள்ள விஜயதசமி உகந்த நாள். நவராத்திரியோட கடைசி நாள் சரஸ்வதி பூஜை. விஜயதசமியும் அத்துடன் சேர்த்தே கொண்டாடப்படுகிறது. ஆச்சா, இப்ப நவராத்திரி கொண்டாட்டம், விரத நிறைவுக்கு வருவோம். விஜயதசமி அன்னிக்கு கொலுப்படிகள்ல இருக்கற பொம்மைகள ஏதாவது ஒண்ணைப் படுக்க வெச்சிடணும். மறுநாள் கொலுவுக்கு கற்பூர தீபாராதனை காட்டி, மங்கல ஆரத்தி எடுத்து, பூஜையை நிறைவு செய்யலாம்...’’

‘‘நவராத்திரி விரதத்தையும் பூஜையையும் அனுசரிக்கறது ரொம்ப சுலபம்தான். ஆனா அதற்கான ஏற்பாடுகளும் படிகட்டி பொம்மைகளை அடுக்கறதும் திரும்ப எல்லாத்தையும் உடைஞ்சுடாம எடுத்து அடுத்த வருஷத்துக்காக பத்திரப்படுத்தறதும்தான் பெரிய வேலையா இருக்கும் போலிருக்கு...’’ கிருத்திகா சொன்னாள்.
‘‘நீ இதுக்கே அலுத்துக்கறே, ஒவ்வொருத்தர் வீட்ல ஒவ்வொரு வருஷமும் புதுசு புதுசா பொம்மைகள் வாங்கி வருஷத்துக்கு வருஷம் கொலுப்படியிலே சேர்த்துக்கறதுன்னு வழக்கம் வெச்சிண்டிருக்காங்க. அது மட்டுமல்ல, வெறும் பொம்மைகள் மட்டுமில்லாம மலை, அருவி, பார்க், ஏர்போர்ட், கோயில், குளம்னு கூட சைடு அட்ராக்ஷன் வைக்கறவங்களும் இருக்காங்க.

சீரியல் லைட் வெச்சு அலங்காரம் பண்ணுவாங்க....’’ ‘‘ஆமாம் மாமி, நான்கூட என் ஃப்ரண்ட்ஸ் வீடுகள்ல பார்த்திருக்கேன்...’’தீபா சொன்னாள்.
‘‘இந்த நவராத்திரி விரதத்தைக் கடைபிடிக்கறதனால, தனம், தான்யம், குழந்தைப்பேறு, ஆரோக்கியம், கல்வி, செல்வம்னு சகல சௌபாக்யங்களும் கிடைக்கும்..’’ மாமி முடித்தாள்

No comments:

Post a Comment