Monday, December 31, 2012

வளமான வாழ்வருளும் அன்னபூரணி



முகாசாபரூர்

கடலூர் மாவட்டத்தின் பழைய பூகோள வரைபடங்களில் விருத்தாசலம் என்றொரு ஊர் இருக்காது; பரூர் என்றுதான் இருக்கும். காரணம், பரூர்பாளையம் தான் அப்போது அந்த மாவட்டத்தில் பெரிய ஊர். பரூர் பாளையத்தின் தலைமை இடம்தான் பரூர். பாளையக்காரர்களின் நிர்வாகத்தில் அந்தப் பகுதி ஆலயங்கள் பொலிவுடன் திகழ்ந்தன. இதெல்லாம் ஒருநாள் திடீரென தலைகீழாய் மாறிப்போனது. முகாசா என்னும் இஸ்லாமிய படையெடுப்பாளனின் வருகை அந்தப் பகுதியின் முகத்தை மாற்றி விட்டது. ஆலயங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மங்கலம் பேட்டை மங்கலநாயகி அம்மன் கோயில், பரூர் வரதராஜர் கோயில் என தாக்குதலுக்கு உள்ளான கோயில்கள் ஏராளம். அதிலொன்று அன்னபூரணி உடனுறை விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்.

உளுந்தூர்பேட்டை-விருத்தாசலம் சாலையில் மங்கலம்பேட்டையிலிருந்து 8 கி.மீ. பயணத்தில், சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த இந்தக் கோயில் அமைந்துள்ள பரூர் கிராமத்தை அடையலாம். பரூர் பாளையம் இன்று முகாசாபரூர் என்று அழைக்கப்படுகிறது. ஆம்! ஆக்கிரமிப்பாளனின் பெயரை தன்னோடு இணைத்துக் கொண்டுவிட்டது. பல அரசர்களின் ஆட்சியின் கீழ் வளமாய் இருந்த இந்தப் பாளையத்தின் தலைமை இடம் இன்று முதியவனின் சருமம் சுருங்கிய முகமாய், சிதிலமடைந்த அரண்மனை மற்றும் பல கூரை வீடுகளும், சில கான்கிரீட் வீடுகளுமாய் உள்ளன. சரியான சாலை வசதிகள் கூட இல்லாத இந்த ஊர்தான் பாளையத்தின் தலைமையகமா என்ற கேள்வி எழுகிறது. அங்கே மரத்தடியில் சிதிலமான கல் சிற்பங்கள், படையெடுப்புகளால் உடைக்கப்பட்ட கடவுள் விக்ரகங்கள் நிறைய கிடக்கின்றன. கோயிலின் நுழைவாயிலை கடந்து உள்ளே செல்கிறோம்.

மிகப்பெரிய நந்தி. உள்ளே மகா மண்டபத்தில் சூரியன் சிற்பத்தையும், விநாயகர், அன்னபூரணி, சோமாஸ்கந்தர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர் ஆகியோரின் உற்சவ திருமேனிகளை தரிசித்து மகிழ்கிறோம். அர்த்த மண்டபத்தில் நின்றபடி கருவறையை தரிசிக்கிறோம். காசியில் உறையும் ஈசன் இங்கும் விஸ்வநாதேஸ்வரராய் அருள்பாலிக்கிறார். கோரக்க சித்தர் போற்றி வணங்கிய ஈசன் இவர். இவரது அருளோடு இந்த ஆலய பிராகாரத்தில் சித்தியாகியுள்ளார் கோரக்கர். இந்த பரூர் சிவனை பற்றியும், அன்னை அன்னபூரணி குறித்தும் தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளார், சித்தர். சிவராத்திரியன்று சூரியன் தன் பொன்கிரணங்களால் இந்த ஈசனை வழிபடுகிறான்.

ஐயனின் அருள் தரிசனம் பெற்று பிராகார வலம் வர, கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர், துர்க்கை ஆகியோரின் தரிசனம் கிடைக்கிறது. காட்டின் நடுவே அமர்ந்து விஸ்வநாதேஸ்வரரை கோரக்க சித்தர் வழிபடும் காட்சி, சண்டிகேஸ்வரரின் சந்நதியில் புடைப்புச் சிற்பமாய் செதுக்கப்பட்டுள்ளது. மற்றும் நவகிரக சந்நதியும், நந்தவனமும் உள்ளன. ஆலய வளாகத்தில் தனி மண்டபத்தில் கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி உள்ளது. இந்த இடத்தில் தெய்வீக அதிர்வுகளை உணரமுடிகிறது. பௌர்ணமி நாளில் இவர் சமாதி அருகே அமர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டால் எண்ணியது நடந்தேறும் என்பது பலரது அனுபவ நம்பிக்கை. அவருக்குப் பின்னால் மிகப்பெரிய விநாயகர் தனிச் சந்நதியில் அமர்ந்துள்ளார். அருகில் வள்ளி-தெய்வானை சமேத முருகனும் தனி சந்நதியில் அமர்ந்துள்ளார்.

சிவன் சந்நதிக்கு அருகிலேயே அன்னை அன்னபூரணிக்கு தனிச் சந்நதி. அன்னையின் எதிரே அழகிய நந்தி. ஆலயத்தினுள் அன்னை அமுதமயமான குளிர் கிரணங்களை வீசும் முழு நிலவு போன்று காட்சி தருகிறாள். நின்ற திருக்கோலம். அன்னைக்கு நான்கு கரங்கள். மேலிரு கரங்கள் பாசம், அங்குசம் தாங்கி இருக்க, கீழிரு கரங்கள் அபய வரத ஹஸ்தம் காட்டி ‘தன்னை சரணடைவோரின் துயரங்களை நீக்குவேன்’ என்கின்றன. அன்னையின் புன்னகையில் மனம் கரைய, துயரமும் தொலைந்து போகிறது. அன்னையிடம் தம் தகுதிக்கேற்ப நல்ல வேலைக்காக விண்ணப்பிக்கலாம்! உலக ஜீவராசிகளின் பசிப் பிணி தீர்க்கும் அன்னபூரணி, தகுந்த வேலை கிடைக்கச் செய்கிறாள் என்கிறார்கள். விஸ்வநாதேஸ்வரரின் அருளும், அன்னபூரணியின் அன்பும், கோரக்கரின் கருணையும் ததும்பி வழியும் இத்தலம் வாழ்வில் நல்ல மாற்றத்தையும் மனதில் அமைதியையும் தருகிறது. 

No comments:

Post a Comment