Monday, December 31, 2012

குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கானோர் தரிசனம்


உடன்குடி: குலசேகரன்பட்டினத்தில் இன்று அதிகாலை சூரசம்ஹாரம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தசராவின் முக்கிய நாளான நேற்று காலை 6 மணி முதல் 10.30 மணி வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு 11 மணிக்கு அலங்கார பூஜையும் நடந்தது. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு முன்பாக எழுந்தருளினார். நள்ளிரவு 12.30 மணியளவில் மகிஷாசூரன் சம்ஹாரம் நடந்தது. முதலில் மகிஷாசூரன் தலையை வதம் செய்தார்.

அடுத்து சிம்ம தலையும், எருமை தலையும் வதம் செய்யப்பட்டது. அப்போது கடற்கரையில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ‘ஜெய்காளி’, ‘ஓம் காளி’ என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர். சூரசம்ஹாரம் முடிந்த தும் அம்மன் கடற்கரை மேடைக்கு வந்தார். அங்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இன்று மாலை அம்மன் கோயிலை வந்தடைந்ததும் கொடியிறக்கம் நடக்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் பல்வேறு வேடம் அணிந்த பக்தர்கள் கடலில் நீராடி வேடத்தை கலைத்தனர். காணிக்கையாக வசூலித்த பணத்தை கோயிலில் செலுத்தினர். விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment