Monday, December 31, 2012

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய தெய்வம்...?


 

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளுக்கும் அடிப்படை இல்வாழ்க்கையாகும். `இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஏதுமில்லை' என்ற வழக்கு குடும்ப வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தைக் கூறுகிறது. திருமணம் என்ற வாயிலின் வழியாக அமையும் குடும்ப வாழ்வென்ற பயணம் தற்காலத்தில் போக்குவரத்துச் சிக்கல் போல் அமைந்துவிட்டது.

அது சந்திக்கும் பலவகை சிக்கல்களில் ஜாதக ரீதியானவை மிக முக்கியத்துவம் பெறுகின்றன. அதிலும் செவ்வாய் தோஷம் என்ற சொல் பெற்றோர்களின் காதில், காய்ச்சிய ஈயம் போல் பாய்கிறது. செவ்வாய் தோஷமென்பது பொதுவாக ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், தோஷம் எனப்படுகிறது. அது எவ்வளவு என்பதில் பல வகைக் கணக்கீடுகள் உள்ளன.

அவை யாவும் செவ்வாய் என்ற கிரகத்தின் நிலையை அது கடக்கும் ராசிகளின் சுப-அசுபத் தன்மைகளால் நிர்ணயம் செய்யப்படுகின்றன. லக்னத்திலிருந்து கணக்கீடு செய்வது போல் ராசி எனப்படும் சந்திரா லக்னத்திலிருந்தும், சுக்ரன் இருக்கும் வீட்டிலிருந்தும் செவ்வாயின் நிலையைக் கணக்கீடு செய்வதும் செவ்வாயின் தோஷ அளவுகளைக் காண உதவுகிறது.

செவ்வாயை ஜோதிடம் `மங்கள காரகன்' என்று குறிப்பிடுகிறது. மேலும் நமது மனித உடல் இயக்கத்தில் ரத்த ஓட்டத்தைக் குறிப்பிடும் கிரகம் செவ்வாயாகும். அறிவியல் ரீதியாகப் பார்ப்பதென்றால் செவ்வாய் வேறு கிரகச் சேர்க்கையின்றி லக்னத்திற்கு 2-4-7-8-12 ஆகிய இடங்களில் இருப்பவர்களது ரத்த குரூப் `ஓ' வகையில் அமைவது இயல்பாகும்.

அதிலும் வக்ர கதி பெற்றிருந்தால் அது `ஓ நெகட்டிவ்' ஆக அமைகிறது.ரத்தம் என்ற சொல், சமூக ரீதியாக, உணர்வுகளைக் குறிப்பிடக்கூடியது. இரு மணம் இணையும் திருமணத்திற்கு உணர்வுகளின் ஒருமை நிலை முக்கியமான அம்சமல்லவா? அதிலும் செவ்வாயின் தோஷ நிலைகளை ஆய்வு செய்து மணமக்களை திருமண வாழ்வில் இணைத்து வைப்பதால் பல சிக்கல்களைத் தவிர்த்து விடலாம்.

ராசி மண்டலத்தின் 12 வீடுகளிலும் செவ்வாய் ஆட்சி, உச்சம், நட்பு, சமம், பகை, நீசம் என்ற பல நிலைகளை அடைவதன் மூலம் தோஷத்தை உண்டாக்கினாலும் பிற கிரகங்களின் சேர்க்கை, பார்வை, முதலிய காரணிகளால் தோஷ நிவர்த்தியும் அடைகிறது. ஒருவரது லக்னத்திலிருந்து 2-ம் இடம் குடும்ப ஸ்தானம் ஆகும். மேலும் வாக்கு ஸ்தானமும் ஆகும்.

அந்த முக்கியமான இடத்தில் நெருப்புக் கோளான செவ்வாய் இருப்பது இல்லற வாழ்வில் முரண்பட்ட விளைவுகளை மற்ற காரணிகளின் தாக்கங்களுக்கு ஏற்ப உண்டாக்கும். 4-ம் இட செவ்வாய் உடல் நிலையில் தனது ராசியின் நிலைக்கேற்ப பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது, அது சுக ஸ்தானம் என்பதால் ஆரோக்கியம் பற்றிய கவலைகளை உண்டாக்கும். 7-ம் இடம் என்பது களத்திர ஸ்தானம்.

கணவரானால் மனைவியையும், மனைவியானால் கணவரையும் குறிப்பிடக்கூடியது. உணர்வுகளைத் தட்டி எழுப்பும் கிரகமான செவ்வாய் அதிலிருப்பது உணர்வுகளின் சமநிலையைப் பாதிக்கக் கூடியதாகும். 8-ம் இடம் ஆயுள் ஸ்தானம். ஒருவரது ஆரோக்கியத்தைப் பாதிக்கும் விஷயங்களைக் குறிப்பிடுவது.

அதில் செவ்வாய் இருப்பது அறுவை சிகிச்சை, விபத்து முதலிய விஷயங்களைக் குறிப்பிடுவதாகும். 12-ம் இடம் விரய ஸ்தானம் எனப்படும். அதில் செவ்வாயின் நிலை கட்டுப்பாடற்ற செலவினங் களையும், சக்தி நிலைகளில் தவிர்க்க இயலாத விரயங்களையும் குறிப்பிடுவதாகும்.

செவ்வாய் தோஷப்பரிகாரமாக அது நிற்கும் ராசியில் முதல் திரேக்காணத்தில் இருந்தால் தேவி வழிபாட்டாலும், இரண்டாம் திரேக்காணத்திலிருந்தால் சுப்ரமணியர் வழிபாட்டாலும், மூன்றாம் திரேக்காணத்திலிருந்தால் பிரத்யங்கிரா, நரசிம்மர் போன்ற கடவுள் வழிபாடுகளாலும் செவ்வாயின் மங்களகாரக தத்துவத்தை வெளிப்படுத்தி நலம் பல நிரம்பிய வாழ்வுதனைப் பெறலாம். ஸ்ரீ ஜானகி ராமன், சென்னை. 

No comments:

Post a Comment