Monday, December 31, 2012

திருவாலங்காடு சிவன் கோயிலில் தெப்பத் திருவிழா நடந்தது


திருத்தணி: திருத்தணி அருகே திருவாலங்காட்டில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோயிலில் நேற்று மாலை தெப்பத் திருவிழா நடந்தது. வண்டார்குழலி அம்மன், காரைக்கால் அம்மையார் மற்றும் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் பல்லக்கில் ஊர்வலம் வந்தனர். தெரு வழியாக சென்றபோது வீட்டில் உள்ளவர்கள் தேங்காய், பழம் படைத்து வழிபட்டனர். நேற்று இரவு 7 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள சென்றாடுதீர்த்தக்குளத்தில் தெப்பத் திருவிழா நடத்தினர். வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி சமேதமாக தெப்பத்தில் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் போட்டனர். தெப்பத்தில், கலைமாமணி டி.கே.எஸ்.கலைவாணன் இன்னிசை கச்சேரி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக ஒன்றியக்குழு தலைவர் குணாளன், துணைத் தலைவர் நாகம்மாள் ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் கோபு, ஊராட்சி தலைவர் அமுதா அனல்சேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி மற்றும் பலர் செய்திருந்தனர். திருத்தணி ஏஎஸ்பி விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

No comments:

Post a Comment