Monday, December 31, 2012

மைசூரை வண்ணமயமாக்கும் தசரா கொண்டாட்டம்


நவராத்திரி வந்தாலே மைசூர் வண்ணமயமாகிவிடும். காரணம் தசரா விழா. இந்தியாவின் வடக்கு பகுதியில் ராமன், ராவணனை வெற்றிகொண்டு ராமராஜ்யத்திற்கு வெற்றிகரமாக திரும்பியதை குறிக்கும் நாளாகவும், மேற்கு வங்காளத்தில் தசரா துர்கா பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. தென் பகுதியில் இது தசரா பண்டிகை என்றே அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் கலாசார தலைநகராக விளங்கும் மைசூரில் தசரா பிரபலம். இடைக்கால விஜயநகர பேரரசின் மன்னர்கள் காலத்தில் இருந்தே தசரா பண்டிகை அங்கு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முன்பு மகிஷாபுரா என்று அழைக்கப்பட்ட நகரம் பின்னர் மைசூரு என்று மாற்றப்பட்டது. உடையார் மன்னர்கள் காலத்தில் மைசூர் அழகான பூங்காக்கள், அகலமான சாலைகள், கலைநயமிக்க கட்டிடங்கள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டன. திருவிழாக்கள் என்றால் நகரம் களைகட்டும். இதில் அரசு குடும்பத்தினருக்கு முக்கிய பங்கு உண்டு. கிருஷ்ணராஜ உடையார் 1902-1940 ஆட்சியின்போது தசரா கொண்டாட்டங்கள் உச்சநிலையை அடைந்தன. 10 நாட்களும் மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இப்போது மாநில திருவிழாவாக கர்நாடகாவில் நடத்தப்படுகிறது.

தீயசக்தியை வென்றதால் சாமுண்டீஸ்வரி தேவி, துர்கா, மகாகாளி, அம்பே போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறாள். விழா நடைபெறும் 10 நாட்களும் மைசூர் அரச சிம்மாசனம் பொதுமக்கள் பார்வைக்காக தர்பார் மண்டபத்தில் வைக்கப்படும். மலைமீதுள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தசராவின்போது அரண்மனை மற்றும் பிற கட்டிடங்கள் வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு அரச ஊர்வலம், அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுப்பு, தீபஒளி அணிவகுப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சி, திரைப்பட விழா, விளையாட்டு போட்டிகள், உணவு திருவிழா உள்ளிட்டவை நடைபெறும். சிறப்பு உணவாக எலுமிச்சை சாதம் அல்லது புளிசாதம் மற்றும் இனிப்பு கொழுக்கட்டை வழங்கப்படும். தசரா ஷாப்பிங்கும் விழாவுக்கு சிறப்பு தரும்.

No comments:

Post a Comment