தாம்பரம், : தாம்பரம் இரும்புலியூர் கரிகாலன் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (40). இவர் சொந்தமாக 3க்கு மேற்பட்ட டூரிஸ்ட் வேன்கள் வைத்துள்ளார்.
தாம்பரம் கிழக்குப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல அந்த வேன்களை வாடகைக்கு விட்டுள்ளார். பழைய பெருங்களத்தூர் பாரதி நகரை சேர்ந்த பாலாஜி (31) டிரைவராக வேலை செய்கிறார்.
கிழக்கு தாம்பரம் எம்இஎஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து, 17 மாணவர்களை அவர்களது வீட்டில் விடுவதற்கு வேனில் அழைத்து சென்றார் பாலாஜி. மேற்கு தாம்பரம் வர மேம்பால இறக்கத்தில் சென்றபோது, திடீரென வேன் இடது புறமாக கவிழ்ந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகலறிந்து போக்குவரத்து போலீஸ்காரர்கள் நாகராஜன், பத்மநாபன் ஆகியோர் வந்து, வேனில் இருந்த பள்ளி மாணவர்களை மீட்டனர். இதில் சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிரைசி (9), எம்இஎஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் கெபிஜான் (12), ஜோகனா ஜான் (7), ஸ்ரீலேகா (14), பிரதீபா (12), அனுஷ்யா பரிவீனா (10), அந்தியோ நவ்ஷியா (8), கீர்த்தனா (12) ஆகிய 8 மாணவ, மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினர்.
இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரைவர் பாலாஜியை கைது செய்தனர். உரிமையாளர் தியாகராஜனிடம் விசாரித்து வருகின்றனர்.
தகவல் அறிந்து தாம்பரம் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர், பொதுமக்கள், பள்ளி நிர்வாகிகள் மருத்துவமனையில் குவிந்தனர். கடந்த ஜூலை மாதம் பள்ளி மாணவி பஸ்சில் இருந்த ஓட்டையில் விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
விதிகளை மீறிய வேன்
டூரிஸ்ட் வேனை பள்ளி வாகனமாக பயன்படுத்தும்போது வேனின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் பள்ளி வாகனம் என்று எழுத அரசு உத்தரவிட்டுள்ளது. டிரைவர் உள்பட 13 பேர் மட்டும் ஏற்றப்பட வேண்டும். ஆனால், இந்த வேனில் 18 பேர் இருந்துள்ளனர். இது மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிரானது. ஜனவரி 1 முதல் 7ம் தேதி வரை சாலை பாதுகாப்பு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இச்சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
துரிதமாக
மீட்ட போலீசார்
பழைய தாம்பரம் பகுதியில் போக்குவரத்து பணியில் இருந்த போலீஸ்காரர்கள் நாகராஜன், பத்மநாபன் ஆகியோருக்கு மைக் மூலம் வேன் கவிழ்ந்த தகவல் கொடுக்கப்பட்டது. உடனே மின்னல் வேகத்தில் சம்பவ இடத்துக்கு வந்த பத்மநாபன் கவிழ்ந்த வேன் மீது ஏறி ஒவ்வொரு மாணவ, மாணவியாக தூக்கினார். அவர்களை கீழே இருந்தபடி நாகராஜன் இறக்கினார். கடைசியாக ஒரு மாணவியை மீட்கும்போது, பத்மநாபன் நிலைதடுமாறி வேனில் இருந்து விழுந்தார். இதில் அவருக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மூட்டு விலகியிருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
No comments:
Post a Comment