Tuesday, January 15, 2013
ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ்
ஆஸ்டியோ என்றால் எலும்பு என்று அர்த்தம். எலும்பை தாக்கும் ஆர்த்ரைடிஸ் நோய்களில் இதுவும் ஒன்று. இது பொதுவாக மூட்டுப்பிடிப்பு அல்லது மூட்டு அழற்சி என்று கூறப்பட்டாலும் இதில் மூட்டு வலியும், வீக்கமும், மூட்டை அசைக்க இயலாமையும் தான் பெரும்பான்மையாகக் காணப்படுகிறது. மூட்டு அழற்சி மிக அரிதாகத் தான் காணப்படுகிறது. வயது முதிர்ச்சியின் காரணமாக மூட்டுகளில் ஏற்படுகின்ற தேய்மானம் காரணமாக உடலின் எடையைத் தாங்குகின்ற இடுப்பு, முழங்கால், முதுகெலும்பு போன்ற எலும்புகள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன. கழுத்து, முழங்கை, விரல்கள் போன்றவைகளும் பாதிக்கப்படுவது உண்டு. ஆண்களை விடப் பெண்களே அதிகமாக மூட்டுப்பிடிப்பினால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக மாதவிலக்கு நின்ற பின்னர் இதன் பாதிப்பு அதிகரிக்கிறது.
மூட்டு எலும்பினுள் இருக்கின்ற வழுக்கிடு பொருள் கட்டிபட்டும், விரிவு விட்டும் போய்விடுகின்ற போது குருத்தெலும்பு தேய்ந்து போகிறது. இதனால் மூட்டு எலும்புகள் பாதிப்பு அடைவதுடன் தடித்தும் உருக்குலைந்தும் போகின்றன. மூட்டை அசைக்கின்ற போது மிகுந்த வேதனை ஏற்படுவதுடன் பல நேரங்களில் மூட்டை நீட்டவோ அசைக்கவோ முடியாது போவதும் உண்டு. இதனால் உறுப்புக்களின் செயல்பாடு கட்டுப்படுத்தப்படுவதுடன் அந்தப் பகுதியில் உள்ள தசைகள் நாளடைவில் சிறுத்தும் சிதைந்தும் போய்விடுகின்றன.
மூட்டுப் பிடிப்பு ஏற்படத் துவங்குகின்ற போது மூட்டுப் பகுதிகளில் வலியும், வீக்கமும், விறைப்பும் உண்டாகும். இவை தொடர்ந்து பல மாதங்கள், பல வருடங்கள் கூட இருக்கக் கூடும். சிலருக்குத் தாங்க முடியாத வேதனையில் தொடங்கிச் சில மாதங்களில் மூட்டையே சிதைத்துவிடும். அப்போது கையையோ, காலையோ முற்றிலும் நீட்ட முடியாத நிலை ஏற்படக் கூடும். அப்போது வலி மறைந்துவிடுவதும் உண்டு. சிலருக்கு மூட்டு வீக்கமும் வெளிப்படையாகத் தெரிவதில்லை, என்றாலும் மூட்டு அழற்சி ஏற்பட்டு அதனால் வலியும் நோயும் தோன்றுவதுண்டு.
பொதுவாக மூட்டுப்பிடிப்பு, மூட்டு அழற்சி போன்ற நோய்கள் ஓடியாடித் திரிகின்றவர்களையும், குனிந்து நிமிர்ந்து பணி செய்பவர்களையும் பாதிப்பதில்லை. மாறாக அதிகம் உடல் உழைப்பு இல்லாதவர்களையும் மிகு எடை கொண்டவர்களையுமே பாதிக்கிறது. அவர்களுக்கு இடுப்பு, கழுத்து, கை, கால் மூட்டுகள், கை விரல்கள் போன்ற பகுதிகள் எளிதாக இதன் தாக்குதலுக்கு ஆளாகின்றன. இதனால் அழற்சியும் வீக்கமும் ஏற்படுகிறது. இவைகளை நீட்டி, மடக்கி மேன் மேலும் அசைவிற்கு உட்படுத்துவதால் நோய் தீவிரப்படுவதுடன் சில தேவையில்லாத எலும்பு வளர்ச்சியையும் எக்ஸ் கதிர்ப்படங்களில் காண முடிகிறது.
ஆஸ்டியோஆர்த்ரைடீஸ் முதுகெலும்புள்ள அனைத்து மிருகங்களுக்கும் வரும். மீன், நீர், நிலம் இரண்டிலும் வசிக்கும் பிராணிகள், பறவைகள் – இவைகளுக்கும் ஆஸ்டியோ – ஆர்த்ரைடீஸ் உண்டாகும். மனிதர்களுக்கு, 60 வயதை தாண்டினால் இந்த வாத நோய் வரும் சந்தர்ப்பங்கள் 75 சதவிகிதமாகும்.
காரணங்கள்
முதல் காரணம் – மூட்டு தேய்மானம். முதுமையின் காரணமாக இருக்கலாம்.
மூட்டுக்களில் காணப்படும் குருத்தெலும்பில் கோலாஜென் என்ற வலுவான புரதம் உள்ளது. தவிர “ப்ரோடியோ க்ளைக்கான்ஸ்” என்ற மீளும் தன்மையுள்ள பொருட்களும் உள்ளன. இவற்றை தயாரிக்கும் செல்கள் மாறுபட்டு விபரீதமாக செயல்படும் போது ஆஸ்டியோ – ஆர்த்ரைடீஸ் வியாதி தலைதூக்குகிறது. மூட்டில் நீர் சேர்ந்து விடுகிறது. இதனால் குருத்தெலும்பின் கீழுள்ள எலும்புகளில் சிறுகுழிகள் உருவாகிவிடும். எலும்பு பலவீனமடையும். தவிர மூட்டின் ஓரங்களில் எலும்பு நுனிகள் நீண்டு, வளர்ந்து விடும். இதை ஆஸ்டியோடிபடஸ் என்பார்கள். கடைசியில் குருத்தெலும்பு சிதைந்து, மூட்டு சரியாக இயங்காமல் போகும். மூட்டில் உள்ள அனைத்து பாகங்களும் செயலிழந்து போகும்.
இதர இரண்டாந்தர காரணங்கள் – அடிபடுதல், நீரிழிவு நோய், அதீத உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், பிறவி கோளாறுகள் போன்றவை.
உழைப்பில்லா வாழ்க்கையும், அதீத உழைப்பும் காரணமாகும்.
அறிகுறிகள்
மூட்டுவலி குறிப்பாக முழங்காலில் நிற்கும் போதும், நடக்கும் போது வலி. பாதிக்கப்பட்ட பாகம் உபயோகப்படுத்தப்பட்டாலும், உடற்பயிற்சியின் போதும் வலி அதிகமாகும்.
மூட்டு வீக்கம் – சிலருக்கு இந்த அறிகுறி இருக்காது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் “விறைப்பு” தன்மை இருக்கும். தொடைகள் ‘கல் மரம்’ போல விறைத்திருக்கும்.
மூட்டில் சப்தம் சொடுக்கு போடும் போது ஏற்படும் சப்தம் போல்) கேட்கலாம். மூட்டு உடைகிறதோ என்ற பயம் ஏற்படும்! இந்த “க்ரீச்” சப்தம் ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸின் அறிகுறி.
மூட்டை அசைத்தாலே அல்லது முழங்காலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், முழங்காலை மடித்தாலே வலி ஏற்படும். ஓய்வின் போதும் வலி இருக்கும்.
ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸ் முதுகெலும்பையும் தாக்கும். எனவே முதுகு வலியும் ஒரு அறிகுறி
காலையில் மூட்டுகள் விறைத்து இருக்கும். பொழுது போக போக சரியாகும்.
இடுப்பு, உள்தொடைகள், பிட்டம் இங்கெல்லாம் வலி தோன்றலாம் குனிந்து, நிமிர சிரமமாக இருக்கும்.
சிகிச்சை முறைகள்
இஞ்சி, பெருங்காயம், மஞ்சள், பூண்டு இவை போட்டு சூடாக்கிய எண்ணையை வலி இருக்கும் மூட்டில் தடவலாம்.
ஆமவாதத்தின் பல சிகிச்சை முறைகள் இதற்கும் பொருந்தும். இதைப்பற்றிய உங்கள் ஆயுர்வேத மருத்துவர் சொல்லுவார்.
மருந்துடன், சூடு, வலி, ஜுரத்துடன் கூடிய அழற்சி, வீக்கத்திற்கு சிகிச்சை தரப்படும். எலும்புகளை வலுப்படுத்த, வாத தோஷத்தை கட்டுப்படுத்த, வலி குறைக்க, சிகிச்சைகள் தொடரும்.
குக்குலு போன்ற சிறந்த மருந்துகளில் கலவையை நெய்யுடன் பயன்படுத்தி ‘மத்ரபஸ்தி’ (குதம் வழியே மருந்தை செலுத்துதல்) செய்யப்படும். இதனால் உடல் நச்சுகள் வெளியேற்றப்படும். உடல் ஜீரணம் சீராகும். இவற்றில் இருக்கும் ‘லிபிட்’ என்ற கொழுப்பு, மூட்டுகளுக்கு எண்ணை போலாகி உராய்வை மென்மையாக்கும். உடல் பருமன் உள்ளவர்களுக்கு, நெய்க்கு பதில் எண்ணை சேர்க்கப்படும். இதற்காக மஹா நாராயண தைலம், தன்வந்திரி தைலம் இவை உதவும். ‘ஜானு வஸ்தி’யில் உடலிலிருந்து வியர்வையை பெருக்கி, வெளியேற்றும் சிகிச்சை தரப்படும். மூட்டின் மேல் இளஞ்சூடான மூலிகை தைலம் ஊற்றப்படும். இதை மூட்டின் மேல் தேங்க வைக்க, மூட்டை சுற்றி, பிசைந்த உளுந்து மாவு பற்று போட்டு, பிறகு விடப்படும். தேங்கி நிற்கும் தைலம், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மூட்டினில் உள்ளே இறங்கி, வலியையும், வீக்கத்தையும் குறைக்கும்.
இளஞ்சூடான மஹா நாராயண தைலம், ஹிங்கு திரிகுண தைலம், ஆமணக்கு எண்ணை இவைகளால் லேசாக மசாஜ் செய்து, ஒரு துணியால் கெட்டியாக சுற்றி 3-4 மணி நேரம் வைத்தால் வலி மறையும்.
சூட்டு ஒத்தடம் இதமாக இருக்கும்.
பாரஃபின் மெழுகில் பாதிக்கப்பட்ட பாகத்தை அமிழ்த்துவது ஒரு கிசிக்சை.
உடல் எடையை சீராக வைக்கவும்.
தண்ணீர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.
சில ஆலோசனைகள்
சரியான நிலையில் நிற்கவும், உட்காரவும்.
10 நிமிடங்களுக்கு மேல் நின்று கொண்டிருக்க வேண்டாம்.
குனிந்து நிமிருவதை குறைக்கவும்.
மாடிப்படிகளில் ஏறுவதை தவிர்க்கவும்.
தேவையானால் கைத்தடியை பயன்படுத்தி நடக்கவும்.
யோகா, எளிய உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.
விரல்களின் விகாரம்
விரல்கள் முடங்கி விடுவது பொதுவாக ஆமவாதத்தால் உண்டாகும். ஆனால் ஆஸ்டியோ – ஆர்த்ரைட்டீஸிலும், விரல்கள் பாதிக்கப்படலாம். ஆம வாதத்தில் முதல் தாக்குதலே விரல்களில் நிகழ்வது அதிகம். இதனால் நாட்பட்ட ஆமவாதத்தால் விரல்கள் வளைந்து விடும். விரல் நுனி உள் மடங்கி விடும். நீட்ட முடியாது. பல மாறுதல்களுடன், விரல்கள் கோணலாக மடக்க முடியாமல் போகும்.
ஹெபர்டன் நோட் எனும் கட்டிகள் விரல் நுனி மூட்டில் தோன்றும்.
பூசார்ட் நோட் விரல்களின் நடுமூட்டுகளில் கட்டிகள் தோன்றும். இந்த இரண்டு கட்டி – வீக்கங்களும் சேர்ந்து தோன்றும்.
ஆயுர்வேத மருந்துகள்
யோகராஜ் குக்குலுவுடன் த்ரிவிருத்தாதி க்வாத் கொடுக்கப்படும். பஞ்ச குண தைலம் வெளிப்பூச்சுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலே சொன்னபடி மஹாநாரயண தைலம் போன்றவையும் உபயோகமாகும்.
எலும்புகளின் கால்சியம் தேவைக்காக பால் குடிக்க வேண்டும். 2-3 தடவை ஒரு நாளைக்கு, பால் குடித்து வரவும். தயிர், பசுமை நிற காய்கறிகள், கம்பு இவைகளை உணவில் சேர்ப்பது நல்லது.
பொதுவான குறிப்புகள்
முதலில் வைத்தியரிடம் போகவும். ஏனென்றால் ஆஸ்டியோ – ஆர்த்தரைடிஸின் இன்னொரு பெயர் – சீரழிக்கும் மூட்டு நோய் – கவனிக்காமல் விட்டால் நடமாட்டம் பாதிக்கப்படும்.
பாதிக்கப்பட்ட அவயத்திற்கு ஓய்வு கொடுக்கவும்.
சூட்டு ஒத்தடம் கொடுத்துக் கொள்ளவும்.
உடல்பருமன் அதிகமாயிருந்தால் அதை குறைக்கும் வழிகளை மேற்கொள்ளவும்.
முற்றிய நிலையில், விரல்கள் விகாரமாக பின்னப்படும்.
வீட்டு வைத்தியம்
சுடுநீர் ஒத்தடம் வலியை, வீக்கத்தை குறைக்கும்.
கடுகை அரைத்து பற்றாக போட வலி குறையும்.
பாகல்காய் சாற்றையும் மூட்டிகளில் தடவலாம்.
நெல்லிக்காய் பொடி – 1 தேக்கரண்டி, வெல்லம் 1/2 கரண்டி, அரை அங்குலம் இஞ்சி, இவற்றை பசை (களிம்பு) போல் அரைத்துக் கொள்ளவும். இதை தினமும் 2 வேளை எடுத்துக் கொள்ளவும். 2 மாதங்கள் சாப்பிடவும்.
பூண்டின் 2,3 பல்களை நசுக்கி, 1 கப் பாலிலிட்டு காய்ச்சி, கால்பாகமாக குறைக்கவும். படுக்கப்போகும் முன் இதை அருந்தவும்.
ஆமணக்கு, முருங்கை, பப்பாளி, நொச்சி (விடெக்ஸ் நெகுண்டோ) – இவற்றில் எது கிடைத்தாலும் அதன் இலைகளை நசுக்கி களிம்பாக செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பற்றிடவும்.
முழங்கால் தொப்பி அணிவது நல்லது.
ஆயுர்வேத முறை
சேதமடைந்த குருத்தெலும்பை மறுபடியும் உயிர்ப்பிப்பது இயலாது. எனவே மருந்து வைத்தியத்தால் மூட்டிலும், சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்துவது தான் சாத்தியம். இதனால் குருத்தெலும்பு இன்னும் சீரழிவதை நிறுத்தலாம். ஆயுர்வேதத்தில் ‘சந்தி வாதம்’ என்றால் ஆஸ்டியோ – ஆர்த்ரைடீஸ் என்று கருதலாம். ஆனால் இந்த வார்த்தையை கவுட் ஸ்பாண்டிலைடிஸீக்கும் சில பண்டிதர்கள் பயன்படுத்துகின்றனர். வாதம் அதிகமாகி ரச தாதுவை (ஊட்டச்சத்து) குறைத்துவிடுதல் இந்த வியாதி வரும் என்கிறது ஆயுர்வேதம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment