சர்க்கரை வியாதியால் தோலுக்கு முழுமையாக ரத்தம் பாய்வதில்லை. தோல்களின் உணர்வுத்திறன் இதனால் குறைகிறது. அடிக்கடி புண்கள் ஏற்படும். நீரிழிவு புண்கள் ஆழமாக போய், ஆறுவது தாமதமாகும். பாக்டீரியாவும், ஃபங்கஸ் (Fungus) பெருகிப் பரவும். இதனால் சர்மம் சிதைகிறது. சர்க்கரை லெவல் ரத்தத்தில் அதிகமானால், வெள்ளை அணுக்கள் புண்களின் கிருமிகளை எதிர்த்துப் போராடும் சக்தியின்றி தோற்றுப் போகின்றன. வருமுன் தடுப்பது, வந்த பின் வரும் வருத்தத்தை தவிர்க்கும்.
பூஞ்சன தொற்று (Candida infections)
பிறப்புறுப்புகளை யீஸ்ட் (Yeast) (புளித்த காடி) தாக்குவது டயாபடிஸில் சர்வ சாதாரணமாகும். அரிப்புக்கு இந்த தொற்று நோய் காரணம். பெண்களுக்கு அரிப்பு, நமைச்சலுடன், வெள்ளைபடுவதும் அதிகமாகும். பல சரும உபத்திரவங்களை ஃபங்கஸ் உண்டாக்கும்.
டினியா க்ருரிஸ் (Tinea cruris) (Jock Itch) (படர் தாமரை)
பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும் இந்த அரிப்பு வெய்யிற் காலத்தில் அதிகமாக தாக்கும். பிறப்புறுப்பில் ஆரம்பித்து தொடை இடுக்குகளில் பரவும் இந்த சொறி, சினைப்புகள் சிவந்திருக்கும். வேதனையான இந்த அரிப்பு வியாதி பல தடவை உண்டாகும்.
டினியா பெடிஸ் (Tinea pedis, Athlete’s foot)
இதுவும் வேனிற்காலத்தில் அதிகமாக வரும் தோல் அரிப்பு. உடனே ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி, ட்ரைகோபைடின், அல்லது எபிடெர்மோபைடன் ஃபங்கஸால் வருவது. இந்த இரண்டு நுண்ணுயிர்களுக்கும் பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. சிறு பகுதியாக தோன்றலாம் இல்லை பாதம் முழுவதுமே புண்ணாகலாம். கொப்புளங்கள் தோன்றலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இது பாக்டீரியா தொற்றாகவும் மாறலாம்.
நக படர்தாமரை, நகச்சுற்று, நகச் சொத்தை (Nail ringworm – Tinea unguium)
ட்ரைகோபைடின் தாக்குதல் இந்த நகத்தில் ஏற்படும் சிதைவு. கால் நகங்களில், கை நகங்களை விட அதிகம் வரும். நகம் சதையை விட்டு பிரிந்து, சிதைந்து விடும்
டினியா கேபிடிஸ் (Tinea capitis), தலை படர் தாமரை
இதை தலை மண்டையில் உண்டாக்குவது ட்ரைசோபைடின் தலைமுடி பாதிக்கப்பட்டு சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அரிப்பு ஏற்படும்.
உடல் படர்தாமரை, டினியா கார்போரிஸ் (Tinea Corporis)
உடலில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும் இந்த படர்தாமரை ட்ரைகோபைடன், மைக்ரோஸ்போரம், எபிடெர்மோபையன் இவைகளால் ஏற்படும்.
வாய்ப்புண்கள்
இவை கான்டிடா (Candida) ஃபங்கஸ்களால் நீரிழிவு உள்ள சிறுவர்களை அடிக்கடி தாக்கும். இது சர்க்கரை வியாதியின் பாதிப்பு என்றே கருதப்படுகிறது.
அகான் தோசிஸ் நிக்ரிகன்ஸ் (Acanthosis nigricans)
தோல் மடிப்புகள் தடித்து கறுத்து விடும். மரு, பாலுண்ணி இவை கழுத்தின் பின்புறம், அக்குள், மார்புகளின் கீழே, அடிவயிறு பகுதிகளில் உண்டாகும். பருமன் அதிகமுள்ளவர்களை அதிகம் பாதிக்கும். நீரிழிவு வரும் முன்பே இந்த தோல் வியாதி தோன்றும். இந்த சரும வியாதி இன்சுலின் எதிர்ப்பினால் உண்டாகலாம் என்று கருதப்படுகிறது.
கொப்புளங்கள்
டயாபடிஸ் உள்ள நோயாளிகளுக்கு திடீரென்று கொப்புளங்கள் தோன்றலாம். இவை கை, கால்கள், விரல்கள், பாதம் போன்ற பகுதிகளில் தோன்றும் இவை வலியில்லாதவை, தானாகவே மறையும். இவை அபூர்வமான டயாபடிக் பாதிப்புகள்.
தவிர்க்கும் வழிகள்
கால்களை பராமரிக்கும் யோசனைகளை கடைப்பிடிக்கவும்.
பருத்தி உள்ளாடைகளை அணியவும்.
சர்ம வியாதிகள், புண்கள், காயங்கள் இவற்றின் சிகிச்சைக்கு உங்கள் டாக்டரை அணுகவும். நீங்களாக கடையில் வாங்கி. மருந்துகளை உபயோகிக்காதீர்கள்.
வறுத்த, பொரித்த உணவுகளை தவிர்க்கவும்.
வேப்ப மர இலை, ஆலமரபட்டை, துளசி, மஞ்சள் இவற்றின் பொடிகளை குளிக்கும் நீரில் கரைத்து குளிக்கலாம். இல்லை பாதிக்கப்பட்ட இடங்களை கழுவலாம்.
காயங்களை ஆற்ற, கற்றாழை, மஞ்சள் கலந்த ஆயுர்வேத களிம்புகளை பயன்படுத்தலாம்.
தினமும் நெல்லிக்காயை எடுத்துக் கொள்ளவும்.
No comments:
Post a Comment