Tuesday, January 15, 2013

பன்னீர்செல்வம் பார்க் பெயர் மாறியது எப்படி?



ஈரோடு நகரின் மையப்பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா எப்போதுமே பரபரப்பாக காணப்படும். பொதுவாக ஒரு இடத்தில் ஒரு தலைவரின் பெயரில் பூங்கா அல்லது சாலை பெயர் வைப்பதற்கு ஏதாவது ஒரு சம்பவம் காரணமாக இருக்கும். தற்போது பன்னீர்செல்வம் என அழைக்கப்படும் இடத்தில் ஒரு பூங்கா கூட கிடையாது. பன்னீர்செல்வம் சிலையும் கிடையாது. இந்த பெயர் உருவானதன் பின்னணியில் பெரிய வரலாறே உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன் அந்த பகுதிக்கு வெல்ஸ் பார்க் என்று தான் பெயர். ஈரோடு நகராட்சி தலைவராக இருந்தவர் வெல்ஸ். அப்போது அந்த பகுதியில் ஏராளமான மரங்கள் இருக்கும். மரங்களின் மத்தியில் மாலை நேரத்தில் வெல்ஸ் செல்வது வழக்கம். இதனால் வெல்ஸ் பார்க் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

ஈரோடு நகரசபை தலைவராக தந்தை பெரியார் பதவி வகித்த காலகட்டத்தில் தஞ்சாவூர் நகரசபை தலைவராக ஏ.டி பன்னீர் செல்வம் பதவி வகித்தார்.பின்னாளில் இருவரும் நீதிக்கட்சியில் இணைந்து இந்தி மொழி திணிப்பை கண்டித்து 1938ல் போராட்டம் நடந்தது. தந்தை பெரியார் இந்தி மொழி திணிப்பை எதிர்த்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சென்னை மாகான சட்டமன்ற தலைவராக இருந்த பன்னீர்செல்வமும் இந்தியை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு பன்னீர்செல்வம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது நீதிக்கட்சி சார்பில் மாநாடு ஈரோட்டில் நடந்தது.

இந்த மாநாட்டில் தந்தை பெரியாருக்கு மாலை அணிவிக்க வந்தார்கள். இதை தடுத்த பெரியார், இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறையில் உள்ள ஏ.டி.பன்னீர்செல்வத்திற்கு மாலை அணிவிப்பது போல அவரது படத்தை நாற்காலியில் வைத்து பன்னீர்செல்வம் படத்திற்கு மாலை அணிவித்த பிறகே கூட்டத்தை நடத்தினார். 1940ம்ஆண்டு மார்ச் 1ம்தேதி ஏ.டி.பன்னீர்செல்வம் கராச்சியில் இருந்து விமானத்தில் வந்தபோது திடீரென விமானம் கடலில் விழுந்தது. இந்த விபத்தில் பன்னீர்செல்வம் உயிரிழந்தார். படத்தை வைத்து மாலை அணிவித்ததன் அடையாளமாக அன்று முதல் அந்த பகுதி பன்னீர்செல்வம் பூங்கா என அழைக்கப்பட்டது. பூங்கா என்பதற்கான எந்த அடையாளமும் இப்போது அந்த இடத்தில் இல்லை.

No comments:

Post a Comment