Saturday, January 12, 2013

காமத்தை அடக்க முடியுமா..?


காமம்
   காமத்தை கை விடுங்கள் அப்போதுதான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள். ஞானிகளும் சித்தர்களும் கூட இதை தான் சொல்கிறார்கள் நமது அன்றாட வாழ்வில் அனுபவத்தில் காமம் என்ற பாலுணர்ச்சி புனிதமான சிந்தனைகள் நமக்குள் ஏற்படாமல் தடைசெய்வதை காண்கிறோம்.
நிறையே பேர் சொல்கிறார்கள் மனம் நிம்மதியில்லாமல் தவிக்கிறது தரையில் விழுந்த மீனை போல் துன்பத்தால் துடிக்கிறது அதை மாற்ற கடவுளை வணங்குகிறேன் ஒரு நிமிடம் மட்டும் ஏற்படுகின்ற இறை சிந்தனை நிம்மதியை தருகிறது மூச்சு விட காற்றியில்லாமல் தவித்தவனுக்கு தென்றல் காற்று வந்து தடவி கொடுத்தது போல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரானந்தம் இதயத்தை சூழ்கிறது ஆனால் அது ஒரே ஒரு நிமிடம் மட்டும் தான் அது நிலைக்கிறது தவிர அடுத்த நிமிடமே மனம் காம சிந்தனையில் விழுந்து விடுகிறது குளித்து முடித்தவன் கூவத்தில் விழுவது போல் சிந்தனை எங்கும் சாக்கடை நாற்றம் வீசுகிறது பழையப்படி துயர மேகங்கள் சூழ்ந்து இதைய வீட்டை இடி இடித்து மின்னல் வெட்டி நடு நடுங்க செய்கிறது ஆகவே காமத்தை ஒழிக்காத வரை மனிதனுக்கு கதி மோட்சம் இல்லை என்றுபேசுவதை அன்றாடம் கேட்கிறோம்
காமம் என்பது இவ்வளவு கொடியது என்று மனிதனுக்கு தெரிந்திருந்தாலும் கூட அவன் ஏன் மீண்டும் மீண்டும் அதையே நாடுகிறான் எத்தனை பேர் பிடித்து தடுத்தாலும் அதன் மீதே ஏன் போய் விழுகிறான் சிலர் சொல்கிறார்கள் காம உணர்வு என்பது மலம் கழிப்பது போல சிறுநீர் கழிப்பது போல ஒரு இயற்கை உந்துதல் தான் பெற்ற பிள்ளையை பறிகொடுத்தால் கதறி அழுவது எப்படி இயற்கையானதோ அப்படி தான் காமமும் அதை ஆபாசம் என்று நினைப்பதும் புனித வாழ்வுக்கு தடை என்று கருதுவதும் முட்டாள் தனமாகும் என்கிறார்கள்
இது சரியான கருத்து என்பதில் மாற்றமில்லை கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவறுதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது 
தலையை நுழைக்க விட்டால் ஒட்டகம் வீட்டுக் கூரையையே தின்றுவிடும் என்பார்கள் காம உணர்வும் சிறிய நெருப்பு துண்டாக மனதிற்குள் விழுந்து உடல் முழுவதையுமே பற்றி எரிய செய்து விடுகிறது இந்த நெருப்பில் தர்மம் ஒழுக்கம் தொண்டு போன்ற நற்பண்புகள் எல்லாம் சாம்பலாகி விடுகிறது ஆனாலும் மனது மீண்டும் மீண்டும் அந்த நெருப்பில் குளிர்காய விரும்புகிறதே அது ஏன் என்று நமது அறிவு மனம் விடாமல் கேட்கிறது
பொதுவாக மனிதர்களாகிய நாம் ஒன்று நடந்து முடிந்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போம் அல்லது நடக்கப் போவதை பற்றி கற்பனை தேரில் பறந்து கொண்டிருப்போம் நிகழ்காலத்தில் அதாவது இந்த வினாடியில் நாம் வாழுகின்ற வாழ்க்கையை மனம் ரசனையுடன் நோக்காது இதனால் தான் நாம் துன்பம் அடைந்து கொண்டே இருக்கிறோம் ஆனால் காம வசப்படும் போது காம உறவில் இடுப்படும் போது நமது மனம் கடந்த காலத்தை மறக்கிறது எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை கை விடுகிறது நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறது இப்படி நிகழ்காலத்தில் மனமானது நிலைக்கும் போது தான் நமக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஊற்றின் கதவுகள் திறந்து கொள்கிறது.
நமக்குள் இருக்கும் ஆனந்த ஊற்று திறக்கப்பட்டு அதன் ஒளிவெள்ளம் நம்மை குளிப்பாட்டுவது சில வினாடிகள் தான் ஒரு நீர்குமிழி போல கண நேரத்தில் தோன்றி கண நேரத்தில் மறைந்து விடுகிறது அதற்கு காரணம் நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுகிறது இந்த உண்மை நமக்கு தெரிவதில்லை அதனால் தான் காமம் என்பதுஅளப்பரிய சந்தோசத்தை தரக்குடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம் காமம் மட்டுமல்ல எந்த செயலை நாம் செய்தாலும் அதில் நமது மனது ஆழ்ந்து விடுமானால் அதுவே நாம் தேடுகின்ற இன்பத்தை தரவல்லது இந்த உண்மை பலருக்கு தெரிவதில்லை அதனால் தான் காம சேற்றில் காலமெல்லாம் மூழ்கிகிடக்கிறார்கள்
காமத்தில் கிடைகின்ற சுகமானது வெளிப்பொருளால் அல்லது மற்ற பாலின உடலால் உறவால் கிடைப்பது இல்லை அது நமக்குள்ளேயே மறைந்து கிடக்கும் மகிழ்ச்சிதான் என்பதை பலர் அறிந்து கொண்டால் நிறைய பேர் காம விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை பெறுவார்கள் இந்த ரகசியம் பலருக்கு தெரியாமல் தான் காமத்தை அடக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் 
காமக் கடவுள்
காம உணர்வை அடக்க முயல்கின்ற எவரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாகும் மனித குணங்களின் இயற்கை சுபாவம் என்னவென்றால் எந்த உணர்வை அடக்க அழிக்க முயற்சி செய்கிறிர்களோ அந்த உணர்வு பல மடங்கு வேகத்தோடு பதுங்கி இருந்து சீறி பாயும் என்பது தான் உண்மையாகும்எனவே காம உணர்வை அடக்க முயன்றால் அது அபாயத்தை தான் ஏற்படுத்தும்
காமத்தை அடக்க முடியாது என்றால் அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி புலன்களை கட்டுக்குள் கொண்டுவந்தால் தானே இறை காட்சி பெற முடியுமென்று வள்ளுவரும் பதஞ்சலி மகரீஷியும் சொல்கிறார்கள் கட்டுப்படுத்தாமல் கடவுள் தரிசனத்தை பெறாமல் மானிட பிறப்பை வீணடித்துக் கொள்வாதா என்று சிலர் பதறக் கூடும்
அவர்கள் ஒரு நிஜத்தை நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் நீங்கள் இதுவரை செய்கின்ற தியானமும் பூஜையும் அது நிகழ்கின்ற காலத்தில் காம சிந்தனைகளால் தாக்கப்படாமல் இருக்கிறதா உறுதியாக இந்த கேள்விக்கு ஆமாம் என்ற பதிலை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உங்களால் தரமுடியுமா முடியாது என்றே நான் நினைக்கிறேன் காரணம் பலரின் பூஜையும் தியானமும் காம எண்ணங்களால் தடை படுகிறது என்பதே நிதர்சனமாகும் 
எனவே காமத்தை அடக்கும் எண்ணத்தையே முற்றிலும் விட்டுவிடுங்கள் தனிமையில் உட்க்காருங்கள் உங்கள் மனதில் எழும்புகின்ற கட்டுப்பாடற்ற காம சிந்தனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு உங்களுக்குள் நீங்கள் தனித்திருந்து அந்த சிந்தனை எதுவரை போகிறது என்று கண்காணியுங்கள் எதற்கும் ஒரு எல்லை உண்டு ஒரு முடிவு உண்டு நம் மனதிற்குள் எழும்புகின்ற காம விகாரங்கள் ஒரு நிலையில் செயல் படாமல் நின்று விடும்
அதாவது சிந்தனை ஓட்டம் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் ஆடாமல் அசையாமல் நகர முடியாமல் நின்று விடும் அப்போது உங்கள் மனதை பிடியுங்கள் அடம்பிடிக்காமல் சண்டித்தனம் செய்யாமல் நீங்கள இழுத்த இழுப்புக்கு மனம் கூடவே வரும் அந்த மனதை தரை விரிப்பாகப் போட்டு தியானம் செய்ய பழகுங்கள் ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் போகப் போக எல்லாம் சுலபமாகி விடும்
தியானம் செய்யும் போதே காம எண்ணம் ஆட்டிப்படைக்கிறதே அதை தடுக்காமல் தியானத்தில் எப்படி அமர முடியும் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது உங்கள் மனது காமத்தை எண்ணுகிறதா அதை பற்றி கவலை படாதிர்கள் ஐயோ இப்படி நான் கீழ் பிறவியாக இருக்கிறேனே என்று வருத்தப்படாதிர்கள் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் கூட ஆரம்ப காலம் இப்படித் தான் இருக்கும் காலம் கனியும் போது தான் எல்லாம் கூடி வரும் எனவே மனதுக்குள் ஓடும் காம வண்டியை ஓடும வரை விட்டு விட்டு அதை கவனிக்காமல் சட்டை செய்யாமல் தியானம் செய்யுங்கள் ஓடி ஓடி அந்த வண்டி ஒரு நாள் அச்சாணி கழன்று விழுந்து விடும் திரும்பவும் அது ஓடவே ஓடாது 
அதாவது காம எண்ணத்தை அடக்க முயல வேண்டாம் அதில் மனிதர்களால் வெற்றி பெற இயலாது காமத்தை கடக்க முயலுங்கள் அதுவே அதை சுலபமாக வாகை சூடும் வழியாகும் என்று சொல்கிறேன் ஒரு குழந்தையை தொட்டால் உங்களுக்கு என்ன உணர்வு வருகிறதோ அதே உணர்வு ஒரு குமரியை தொட்டாலும் வர வேண்டுமென்றால் காமத்தை கடக்க முயற்சித்தால் தான் நடக்கும் காமத்தை கடக்க முயல்வது கடினமான ஒன்றல்ல செய்ய வேண்டுமென்ற மன உறுதி இருப்பவர்கள் நிச்சயம் செய்து முடித்து விடலாம்
காமத்தை கடக்க ஒரே வழி அதை அலச்சியம் செய்ய வேண்டும் அதாவது மனதைநிகழ்காலத்தில் வைக்க பழகுங்கள் குளிக்கும் போது அலுவலக சிந்தனையோ பூஜை அறையில் மளிகைக்கடை சிந்தனையோ வேண்டாம் அந்த அந்த நேரத்தில் அந்த அந்த செயலில் மட்டுமே சிந்தனையை வைக்க பழகுங்கள் புளியம் பழமும் தோடும் கனிய கனிய வேறு வேறாக பிரிவது போல் மனதிலிருந்து காம சிந்தனை தானாக விலகி விடும்
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள் அதே போல தான் காமமும் தன்னை கண்டு பயப்படுகின்றவனை துரத்திக் கொண்டே ஓடும் அதை ஓட விட்டுவிட்டு ஓரமாக நில்லுங்கள் காம சிந்தனை மாறி கடவுள் சிந்தனையில் ஐக்கியமாவிர்கள்.
கோபுர சிலைகள்

No comments:

Post a Comment