Tuesday, January 15, 2013

எலும்புகளைப் பற்றி


என்பிதலதனை வெயில் போலக் காயுமே
அன்பிலதனை அறம் என்றார் திருவள்ளுவர். எலும்பில்லாத உயிரினங்களான புழு போன்றவற்றை வெயில் காய்ந்து வருத்துவது போல அன்பில்லாத உயிரை வாட்டும் அறம். என்பது இதன் பொருள்.
எலும்பு, மனித உடலுக்கு ஒரு வடிவத்தை, ஸ்திரத்துவத்தை கொடுத்து, இங்கும் அங்கும் நடமாடும் இயக்கத்தை கொடுக்கிறது. உடலின் உள் அவயங்களை எலும்பு காக்கிறது. எலும்பின் மஜ்ஜையில் தான் ரத்தத்தின் சிவப்பு அணுக்கள் உருவாகின்றன. தவிர கால்சியம் களஞ்சியமாக எலும்புகள் கால்சியத்தை சேமித்து வைத்து தேவையான போது உடலுக்கு தருகின்றன.
சில விவரங்கள் இதோ
நம் உடலில் 206 எலும்புகள் உள்ளன. கையில் 27 எலும்புகளும் முகத்தில் 14 எலும்புகளும் உள்ளன.
நம் உடலில் உள்ள நீட்டமான எலும்பு, ஃபெமூர் எனப்படும் தொடை எலும்பாகும். மிகச்சிறிய எலும்பு (ஒரு அங்குலத்தில் 10 ல் ஒரு பாகம் நீளம்) காதில் உள்ள ஸ்டிரஃப் எலும்பு தான்.
நாம் மியூசியம் போன்ற இடங்களில் பார்க்கும் எலும்புக் கூடு “வெள்ளை வெளேர்” என்று வெண்மையாக காட்சி அளிக்கின்றன. உண்மையிலேயே எலும்பின் நிறம் வெண்மை அல்ல. பழுப்பு நிறம் தான்!
எலும்பு ஒரு “ஜட”ப் பொருள் அல்ல! அதற்கு உயிருண்டு. கால்சியம் மற்றும் ஏராளமான உயிருள்ள செல்களை கொண்டது. இவை எலும்பு வளர, எலும்பு தன்னைத் தானே பழுது பார்த்துக் கொள்ள உதவுகின்றன.
எலும்புகள் தொடர்ச்சியாக தங்களை மாற்றிக் கொண்டே வரும். இந்த செயல்பாட்டில் பழைய திசுக்கள் நீங்கி, புதிய திசுக்கள் உருவாகும். 10 வருடத்திற்கு ஒரு முறை முழுமையாக எலும்புகள் மாறும். எலும்புகளின் உள்ளிருக்கும் மஜ்ஜை மிருதுவாக இருக்கும். இதில் உள்ள பிரத்யேக செல்கள் ரத்தத்தை தயாரிக்கின்றன. எலும்பின் திடமான வெளிபாகம் புரதங்கள் கொல்லாஜென் என்ற பொருளால் ஆனவை. இந்தப் பொருள் கால்சியம் செறிந்தது. எலும்பு அடர்த்திக்கும் பலத்திற்கும் இந்தப் பொருள் தான் காரணம்.
எலும்பின் சிறப்புத் திறமை, அது முறிந்தால், தனது திசுக்களாலேயே குணப்படுத்திக் கொள்ளும். மற்ற அவயங்கள் – உதாரணமாக தசை, அடிபட்டால் அடிப்பட்ட திசுக்களை வைத்தே சரி செய்து கொள்ளும். பின்னால் இந்த அடிப்பட்ட திசுக்கள், ஆரோக்கிய திசுக்களைப் போல் வேலை செய்யாது. ஆனால் எலும்பு முற்றிலும் புது திசுக்களால் தனது எலும்பு முறிவை சேர்த்து விடும். எலும்பு முறிவில் துகள்களான எலும்புகளை கூட சரியான சிகிச்சையால், பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்! இதற்கு ஆனால் சில மாதங்கள் கூட ஆகலாம்.
எலும்பு வலிவடைய
பால், பால் சார்ந்த உணவுகள் – மோர், சீஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெந்தய கீரை, முருங்கைக் கீரை, தண்டுக்கீரை இவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.
ராகி கால்சியம் செறிந்த தானியம்.
புகை பிடிக்காதீர்கள். எலும்புகள் பாதிக்கப்படும்.
உடல் எடையை சரியான அளவில் வைத்து, சமச்சீர் உணவு உண்டு, உடற்பயிற்சி செய்தால் தசை, எலும்புகள் வலிமையடையும்.
வைட்டமின் டி கிடைக்க, காலை வெய்யிலில் 15 நிமிடம் நிற்கவும்.
தினமும் ஒரு வேக வைத்த முட்டையை கொடுத்து வந்தால் சிறுவர்களின் எலும்புகள் பலப்படும் .
எலும்புகள் பலப்பட ஒரு லேகியம்
மாதுளை விதைகள் – 250 கிராம்
சர்க்கரை – 250 கிராம்
உலர்ந்த திராட்சை – 100 கிராம்
புளிக்கூழ் – 25 கிராம்
உலர்ந்த துளசி இலைகள் – 25 கிராம்
கஸ்தூரி பிசின் – 10 கிராம்
செய்முறை
உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து களிம்பாக பசைபோல் அரைத்துக் கொண்டு, புளிக் கூழுடன் சேர்க்கவும். இத்துடன் மாதுளை விதைகளை அரைத்து சேர்க்கவும். சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் துளசி இலைகள், கஸ்தூரி இவற்றை சேர்த்து இன்னும் கால் மணி நேரம் கொதிக்க விடவும். இந்த லேகியத்தை படுக்கும் முன் 1 1/2 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமடையும்.
குழந்தைகளின் எலும்புகள் பலப்பட வாகபட்டர் சொல்லும் வெளிப்பூச்சு தைலம் ஷீரபால தைலம். 41 மூலிகைகள் கலந்த நல்லெண்ணையாகும். பாலூட்டும் தாய்மார்களும் பயன்படுத்தலாம். நமது நாட்டில், குறிப்பாக தென்னிந்தியாவில், பல வகை ஆயுர்வேத தைலங்கள், குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்காக கிடைக்கின்றன. குழந்தை பிறந்த முதல் 2 மாதங்களில், தாய்க்கு தசமூலாரிஷ்டமும் சௌபாக்கிய சுண்டியும் கொடுப்பது வழக்கம். இதனால் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு இவற்றின் சாரம் போய்ச்சேரும்.
எலும்பு முறிவுகள்
எலும்பு முறிவு என்றாலே நமக்கு ஞாபகம் வருவது ‘புத்தூர்’ தான். ஆந்திராவில், தமிழ்நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ள இந்த சிற்றூர், எலும்பு முறிவு சிகிச்சைக்கு பெயர்போனது. “புத்தூர் கட்டு” என்றாலே பிரசித்தம். ஒரு நாளில் 200 – 300 எலும்பு முறிவு ஏற்பட்ட நோயாளிகள் இங்கு வருகிறார்கள். தொட்டு பார்த்து, எலும்பு முறிவின் தீவிரத்தை, உடைந்த விதத்தை கண்டுபிடித்து, மூலிகை தைலத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட கட்டு துணியால் சுற்றி மூங்கில் குச்சிகளால் இணைத்து கட்டு போடுகின்றனர். தினமும் கட்டின் மேல் நல்லெண்ணை தடவும் படி சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு பின் முதல் கட்டு பிரிக்கப்பட்டு, இரண்டாம் கட்டு (மூலிகை மருந்துகளுடன்) போடப்படுகிறது. எலும்பு முறிவு ஏற்படும் மூவரில் இருவர் இந்த பழைய முறைகளேயே விரும்புகின்றனர்.
எலும்பு முறிவுகளை பற்றி ஆயுர்வேதம் விரிவாக விவரிக்கிறது. ஆயுர்வேத அறிவை சுஸ்ருத சம்ஹிதையில் காணலாம். ஆயுர்வேதம் எலும்பு முறிவை 12 வகைகளாகவும், மூட்டு / எலும்பு இடப்பெயர்ச்சியை 6 பிரிவாகவும் கூறுகிறது.
ஆயுர்வேதத்தின் சிறப்பு அம்சம் “முறிவெண்ணா” எனும் தைலம். எட்டு மூலிகைகள் உள்ளடங்கிய இந்த தைலம் எலும்பு முறிவுகளுக்கு அற்புதமான மருந்து.
எலும்பில் வலிமை பெற்றவர்களின் இலக்கணம்
எலும்பில் வலிமை பெற்றவர்களின் குதிகால்கள், கணுக்கால்கள், முழங்கால்கள், முன் கைகள், கழுத்து, முகவாய்க்கட்டை, தலை, கணுக்கள், எலும்புகள், நகங்கள், பற்கள் இவை பருத்திருக்கும். இப்படிப்பட்டவர்கள் மிகுந்த உற்சாகம், பேராற்றல், துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் தன்மை, உறுதியான உடல் அமைப்பு, நீண்ட ஆயுள் இவைகளைப் பெற்றவர்களாகத் திகழ்வார்கள்”.
எலும்பில் உள்ள சோறு வலிவு பெற்றவர்களின் இலக்கணம்
எலும்பில் உள்ள சோற்றால் வலிவு பெற்றவர்களின் உறுப்புக்கள் மெல்லியவை. அவர்கள் பலம் மிகுந்தவர்கள். அவர்களுடைய உடலின் நிறம் அழகாகவும் குரல் இனிமையாகவும் அமைந்திருக்கும். அவர்களுடைய மூட்டுக்கள் பருத்தும் நீண்டும், உருண்டும் இருக்கும்.
இவர்கள் நீண்ட ஆயுளுடன் கூடியவர்கள். வலிவு பெற்றவர்கள். சாத்திர அறிவு படைத்தவர்கள். செல்வம், பகுத்தறிவு, மக்கட்பேறு இவற்றையுடையவர்கள். மரியாதைக்கு உரியவர்கள்.சரகஸம்ஹிதை

No comments:

Post a Comment