Tuesday, January 15, 2013

ஆயுர்வேதத்தின் தோற்றம்


நமது இந்திய தேசத்தின் வரலாறு தொன்மையானது. உலகின் பெரும் பகுதி நாகரிகமே அடையாமல் இருளடைந்து இருந்த போது நமது தேசம் கலாச்சாரத்தில் முன்னேறி ஆன்மீகத்திலும் வாழ்க்கை கல்வி முறைகளிலும் சிறந்திருந்தது. நமது முனிவர்கள் நமக்கு வைத்த செல்வங்கள் தான் நான் மறைகள் (நான்கு வேதங்கள்). இவை யாராலும் எழுதப்படாமல் முனிவர்கள் வெளிப்படுத்திய வாழ்க்கை நெறியின் உண்மைகள் வியாச முனிவரால் பிற்காலத்தில் நான்காக தொகுப்பட்டன. அவை ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள். இதில் மிகப் பழமையானது ரிக்வேதம்.

ஆயுர்வேதம் அதர்வண வேதத்தின் சுயேச்சையான உபவேதம் என்று கருதப்பட்டாலும் மற்ற மூன்று வேதங்களிலும் அது சொல்லப்பட்டிருக்கிறது. ஆயுர்வேதத்தின் தத்துவங்களை பஞ்ச பூதங்கள், (பூமி, நீர், நெருப்பு, காற்று, வெளி) மூன்று வகை நாடிகள் (வாதம், பித்தம், கபம்) இம்மூன்று வேதங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற ஒரு உபவேதமான தனுர் வேதத்திலும் (போர் முறைகளை பற்றியது) உடலின் ‘மர்மஸ் தானங்கள்’ முதலியவை விளக்கப்பட்டுள்ளன.

ரிக் வேதத்தில் காலிழந்த ஒருவருக்கு, தேவலோக வைத்தியர்களான அஸ்வினி குமாரர்கள் செயற்கையாக இரும்புக்காலை பொறுத்தினார்கள் என்றும், கண்ணிழந்தவர்க்கு, பார்வை வரச் செய்தார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஆயுர்வேதம் தனிமையாக, ஏட்டு வடிவில் வந்தது அதர்வண வேதத்தின் தோற்றத்துடன் தான், அதாவது, 3000 லிருந்து 2000 கி.மு. ஆண்டுகளில் இதில் 8 பிரிவுகள் சொல்லப்பட்டன.

ஆயுர்வேதம் கிட்டத்தட்ட 1500 கி.மு. வருடங்களில் ஆத்ரேயம் (வைத்தியர்கள்) தன்வந்திரி (அறுவை சிகிச்சை நிபுணர்கள்) என்று இரண்டாக பிரிந்தது. இந்த இரண்டு பிரிவுகளை பற்றிய நூல்கள் தான் சரகசம்ஹிதையும், சுஸ்ருதசம்ஹிதையும். மூன்றாவதான ‘அஷ்டாங்க ஹிருதயம்’ 500 கி.பி.யின் வாகபட்டாவால் உருவாக்கப்பட்டது. இது முதல் இரண்டு வகை பிரிவுகளின் தொகுப்பு.

கி.மு. 7ம் நூற்றாண்டில் ‘தக்சீலா’ பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேதம் கற்றுத்தரப்பட்டது. பாடலிபுத்ராவில் மருத்துவராக இருந்த ஜீவகர், இந்த பல்கலைக்கழக மாணவர். ஜீவகர், பகவான் கௌதம புத்தரின் மருத்துவர் என்று கூறப்படுகிறார்.

ஆயுர்வேதத்தின் தோற்றமும் வளர்ச்சியும் ஆயுர்வேதத்தின மருத்துவர்கள் செய்ய வேண்டிய முதல் மூன்று வழிகள் நோயாளிக்கு வியாதி வந்திருக்கும் வியாதியின் காரணம், வியாதிகளின் அறிகுறிகள், குணப்படுத்தும் மருந்துகளும், மூலிகைகளும், இவற்றை உணர்ந்து செயல்படுவது.

ஆயுர்வேதத்தின் தனித்துவமே அதில் எல்லா வகை சிகிச்சை முறைகளும் கையாளப்படுவது. அன்றாட வாழ்க்கை நெறிமுறைகள் யோகா, அரோமா, (வாசனை), தியானம், வைர, ரத்ன கற்களால் ஆன வைத்தியங்கள், மூலிகைகள், உணவு கட்டுப்பாடு, ஜோதிடம், அறுவை சிகிச்சைகள் இவை அனைத்தும் கையாளப்படுகின்றன.
தலை சிறந்த ஆயுர்வேத வைத்தியர்கள் சரகர், ஆத்ரேயர், சுஸ்ருதர், ச்யவன முனிவர், வாகபட்டர், மாதவர், சாரங்கநாதர், ஜீவகர் பாவமிஸ்ரர் போன்றவர்களும் பிரபல சித்த வைத்தியர்கள் நந்திதேவர், காளாங்கி நாதர், திருமூலர், அகஸ்தியர், கேரக்கர், போகர் ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
ஆயுர்வேதத்தின் சிறப்பே அதன் அணுகு முறை. அலோபதி (ஆங்கில) மருத்துவ முறையில் வியாதிகளை உண்டாக்கும்.

பேக்டீரியா (அ) வைரஸ் கிருமிகள் நேரடியாக தாக்கப்படும். நோயின் தன்மை தீவிரமானால் Anti – Biotics கொடுக்கப்படும். இவை பக்க விளைவுகளை உண்டாக்கும். ஆனால் ஆயுர்வேதமோ உடலின் நோய் தடுக்கும் சக்தியை ஊக்கப்படுத்துகிறது. உடலின் இயற்கையாக உள்ள இரண்டு சக்திகள்

1. நோய் தடுப்பு சக்தி

2. புதுப்பிக்கும் சக்தி

ஆயுர்வேதம் இந்த இரண்டு சக்திகளையும் ஊக்கப்படுத்துகிறது. இதனால் பக்க விளைவுகள் இல்லை. தவிர ஒவ்வொரு நோயாளியின் தனித்துவமும் கவனிக்கப்படுகிறது. நோயாளிகளின் அடிப்படை குணாதிசயங்கள் (பிரக்ருதி) நாடிகள் மாறுபட்டால் ஏற்பட்ட நோயாளியின் கோளாறுகள் விக்ருதி கணிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்படுகிறது.

இந்த சிகிச்சை முறைகள்

1. நாடிகளை சமன்படுத்துவது.

2. ஜீரண சக்தியை ஊக்குவிப்பது.

3. நோய் தடுப்பு சக்தியை அதிகரிப்பது.

4. உடல் கழிவுகள் நீக்கப்படுவது.

இதற்கான செயல்பாடுகள்

1. சீரான உணவு முறை.

2. உடல் எடையை குறைப்பது.

3. உடல் மெலிந்த நோயாளிகளின் சக்தியையும், எடையையும் அதிகரிப்பது.

4. உடல்பயிற்சி.

5. தியானம்.

6. மூலிகை லேகியங்கள், ஒத்தட முறைகள்.

7. மசாஜ்.

8. மூலிகை மருந்துகள்.

இதைத் தவிர ஆன்மீக ரீதியாகவும் நோயாளியின் மனநிலையும்
கவனிக்கப்படுகிறது. ஆயுர்வேத முறைகளை கடைப்பிடிப்பதால் வியாதிகள் மறைவது திண்ணம்.

No comments:

Post a Comment