Tuesday, January 15, 2013

முதுகு வலி


முதுகு வலிக்கு முக்கிய காரணம் முதுகெலும்பு பாதிப்புகள். முதுகெலும்பைப் பற்றி ஏற்கனவே பார்த்தோம்.
முன்பே சொன்ன படி அதிகபட்ச எடையை முதுகெலும்பின் கீழ்ப்பகுதி தான் சுமக்கிறது. எனவே கீழ்பகுதி எலும்பு. தசை, தசை நாண்கள் பாதிக்கப்பட்டால் வலி உண்டாகும். முதுகு வலி அனைவரையும், குறிப்பாக 45லிருந்த 65 வயதுகளில் உள்ளவரை தாக்கும். 70% மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு முறையாவது முதுகு வலியால் அவதிப்படுகிறார்கள். இதில் 90 சதவிகித நபர்களுக்கு முதுகுவலி தற்காலிகமாக வந்து மறைகிறது. 5 சதவிகித நபர்களுக்கு 3 லிருந்த 4 மாதங்கள் பாதிப்பு ஏற்பட்டு பின்பு குறைகிறது. மீதி 5, சதவிகித மக்கள் தீவிரமாக நரம்பு வலியால் பாதிக்கப்படுகிறார்கள்.
காரணங்கள்
ஆயுர்வேதத்தின் படி வாதக்கோளாறுகளால் முதுகுவலி உண்டாகிறது. ஒன்று உடற்பயிற்சி இல்லாமை இரண்டு அதிக உடற்பயிற்சி – இவை முதுகு வலிக்கு காரணமாகலாம்.
சரியான அங்கஸ்திதி இல்லாதது அதாவது தேகம், நிற்கும், உட்காரும், சாயும் முறை தவறுகள், கனமான எடையை உடலை வளைத்து தூக்குதல் இவைகள் முக்கிய காரணங்கள்
இரு சக்கர வாகனங்களில் அதிக நேரம் பயணம் செய்வது, கார் ஓட்டிக் கொண்டு, நீண்டதூரம் பயணிப்பது.
எலும்பு மண்டலம் மற்றும் மூட்டு கோளாறுகள் – (ஆஸ்டியோ போராசிஸ், ஆர்த்தரைடீஸ்), தொற்று நோய்கள், சிறுநீரக கோளாறுகள், மகளிர்க்கு வரும் நோய்கள், இவைகளெல்லாம் முதுகுவலியை உண்டாக்கும்.
மன அழுத்தம், டென்ஷன் இவைகளும் காரணமாகும்.
‘வளைய நழுவல்’ முதுகுவலியை உண்டாக்கும்.
பலவீனமான தேகம், தளர்ச்சியடைந்த தசைகள், சுளுக்கு, சேதமான தசை நார்கள், மூட்டுக் கோளாறுகள்
தும்மல், அதிகமாடிப்படிகளில் ஏறுவது, தீடிரென்று குனிவது.
இயற்கை உந்துதல்களை அடக்கிக் கொள்வது.
சரியான காலணிகளை அணியாமல் போவது. குதிகால் பகுதி உயரமாக உள்ள காலணிகளை அணிவது.
அபூர்வமான காரணங்கள் – புற்று நோய், நரம்பு மண்டல வியாதிகள்
முதலுதவி
ஐஸ் கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கவும். வலிக்கும் இடத்தில் ஐஸை 5 லிருந்து 10 நிமிடம் வரை வைக்கவும். முதுகு வலிக்கு என்று கிடைக்கும் களிம்புகளை தடவி, ஒத்தடம் கொடுக்கலாம். வலி ஆரம்பித்த பின் 48 மணிநேரம் ஐஸ் ஒத்தடம் கொடுக்கவும். இதன் பிறகு சூட்டு ஒத்தடம் கொடுக்கவும். இந்த சூடான ஒத்தடம் கொடுக்கும் போது முதுகுவலி களிம்புகளை உபயோகிக்கலாம்.
சுடு நீர் ‘ஷவர்’ குளியல் வலியை குறைக்கலாம்.
படுக்கை ஓய்வு, படுத்துக் கொண்டே இருத்தல் வேண்டாம். மெதுவாக நடமாடிக் கொண்டு இருக்கவும்.
பூண்டை (5 பல்) தோல் நீக்கி 50 மி.லி. எள்எண்ணையுடன் சேர்த்து, 20 நிமிடம் கொதிக்க வைக்கவும். வடிகட்டி முதுகு வலியுள்ள இடத்தில் தடவி, 10 லிருந்து 15, நிமிடம் தேய்க்கவும்.
வலி குறையாவிட்டால் டாக்டரிடம் செல்லவும்.
எள்ளை தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை சூடு செய்து வலியுள்ள இடத்தில் தடவவும். இதோ போல் சீரகத்தை பயன்படுத்தி வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்
சூடான பாலில் 2 அல்லது 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடிக்கவும்.
உப்பு சேர்த்த எலுமிச்சை பழச்சாறை குடிக்கவும்.
ஆயுர்வேத மருந்துகள்
குறிப்பு
கீழே கொடுக்கப்பட்டுள்ள மருந்துகள் உங்களுக்கு ஆயுர்வேதத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன என்பதை வலியுறுத்துவதற்காக, கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மருந்துகளை நீங்களாகவே உட்கொள்ள வேண்டாம். ஆயுர்வேத மருத்துவரை அணுகி இவற்றை பயன்படுத்தவும்.
ஹிங்கவாஷ்ட சூரணம்
ஆம்லா சூரணம்
யோகராஜ் குகுல்
மஹாநாராயண தைலம்
மன அழுத்தம் குறைய
மன அழுத்தம் பல உடல் கோளாறுகளுக்கு காரணம். நோயாளிகள் இதை நம்புவதில்லை. மன அழுத்தம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். தசைகளை இறுக்கிவிடும். முதுகெலும்பு வலியை தோற்றுவிக்கும். பிராணாயாமம், யோகா இவற்றை நம்பிக்கையுடன் செய்துபாருங்கள். முறையாக குருவிடம் கற்றுக் கொள்ளவும். தியானமும் அலை பாயும் மனதை அமைதிப்படுத்தும். எந்த முறையிலாவது ஸ்ட்ரெஸ் ஐ குறைக்கவும்.
யோகாசனங்கள்
பல யோகாசனங்கள் முதுகெலும்பு வலி வராமல் தடுக்கும். இவற்றை வலியில்லாத போது செய்ய வேண்டும்.
உணவு, இதர கட்டுபாடுகள்
உணவில் அதிகமாக வேகவைத்த காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். வாதத்தை குறைக்கும் பீன்ஸ் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளவும். புகைபிடிப்பதை நிறுத்தவும். குளிரில் வெளியே செல்லாதீர்கள். கொழுப்பு, மசாலா, சர்க்கரை இவற்றை தவிருங்கள்.
முதுவலி வராமல் தடுக்க
சரியான முறையில் நடக்கவும். சௌகரியமான, உயரமில்லாத காலணிகளை அணியவும் பெட்டி போன்றவற்றை தூக்கிக் கொண்டு செல்கையில் அடிக்கடி பெட்டியை ஒரு கையிலிருந்து இன்னொரு கைக்கு மாற்றிக் கொண்டு நடக்கவும்.
நிற்கும் போது நிமிர்ந்து நிற்கவும். ஒரு காலிலேயே நிற்காமல், கால் மாற்றி நிற்கவும். அதிக நேரம் நின்று கொண்டிருக்க வேண்டும்.
உட்காரும் போது, முதுகை தாங்கிக் கொள்ளுபடியாக சாய்ந்து உட்காரவும் சாய்மானம் இல்லாமல் தரையில் உட்கார வேண்டும். உட்காரும் நாற்காலியில் பின்பாகம் (சாய்ந்து கொள்ள) நம் முதுகெலும்பு போல ஆங்கில் ‘எஸ்’ வடிவத்தில் அமைந்திருக்க வேண்டும். உங்கள் கால்கள் தரையை தொடுமாறு நாற்காலியின் உயரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கால் மேல் கால் போட்டு உட்கார வேண்டாம். அதிக நேரம் உட்கார நேர்ந்தால், அடிக்கடி எழுந்து நடக்கவும். கார் ஓட்டும் போது நடுமுதுகை தாங்கிக் கொள்ள சிறிய தலையணைகளை உபயோகிக்கலாம். ‘ஸீட்டின்’ ‘தலை தாங்கி’ சரியாக இருக்க வேண்டும் பயணம் முதுகுவலி வந்தால் நிறுத்திவிட்டு ஒய்வு எடுத்துக் கொள்ளவும்.
தூங்கும் போது, குப்புற படுக்க வேண்டாம். பக்கவாட்டில் திரும்பிப்படுப்பது நல்லது. மல்லாந்து படுக்க வேண்டியிருந்தால் முழங்காலில் தலையணை வைத்துக் கொள்ளவும். படுக்கை அதிகமிருதுவாக இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும்.
ஆயுர்வேத சிகிச்சை
உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்க ‘பஸ்தி’ போன்ற ‘எனிமாக’ கொடுக்கப்படும். விளக்கெண்ணையும் தினமும் சாயாங்கலத்தில் கொடுக்கப்படுகிறது. தசமூலா பொடியை (1 மேஜைக்கரண்டி) அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவிடவும். 1/2 கப் எள் சேர்த்து, எனிமாவாக பயன்படுத்தலாம்.
அடுத்ததாக செய்யப்படுவது ‘மசாஜ்’ சிகிச்சை. இதற்கு சிறந்தது மஹா நாராயண தைலம். குளியல் தொட்டியில் வெந்நீருடன், பேகிங் சோடா (1/3 கப்) இவற்றை கலந்து, இந்த நீரில் 10 லிருந்து 15 நிமிடம் அமிழ்ந்திருக்க வேண்டும். இதை வாரத்திற்கு 2 லிருந்து 3 முறை செய்யலாம். வலிகுறையும். இது தவிர அப்யங்க சிகிச்சையில் பல மூலிகைகள் சேர்க்கப்பட்ட எண்ணைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பஞ்சகர்மா சிகிச்சை சிறந்த பலனை அளிக்கும்.
பயன் தரும் மூலிகைகள்
முஸ்தா – கோரை தசை வலியை குறைக்கும் மூலிகை. அரை தேக்கரண்டி அளவில் வெந்நீரில் கலந்து தினம் 2 லிருந்து 3 தடவை குடிக்கவும்.
நொச்சி இலைகளை வெந்நீர் / நீராவி குளியல்களில் பயன்படுத்தலாம்.
காஞ்சா இலைகளுடன் நொச்சி இலைகளை சேர்த்து ஒரு துணிப்பையில் போட்டு, ஒத்தடம் கொடுக்கவும்.
ஷல்லாக்கி இந்த மூலிகை ஆர்த்தரைடிஸீக்கு அருமருந்து. எலும்பு வலிகளுக்கு நிவாரணமளிக்கும்.
அஸ்வகந்தா பிரசித்தி பெற்ற மூலிகை. டானிக், நோய் எதிர்ப்புச் சக்தியை பெருக்கும். மன அழுத்தத்தை குறைக்கும், வீக்கம், இரணங்களை வராமல் தடுக்கும். அஸ்வகந்தா பொடி 5 கிராம் எடுத்து 40 மி.லி. பால் + 160 மி.லி. தண்ணீர் – இவற்றுடன் கலக்கவும். சிறு தீயில் கொதிக்க வைத்து, நீர் வற்றி பால் மட்டும் தங்கும் போது எடுத்து குடிக்கவும்.
டாகர் – தசை இறுக்கத்தை குறைக்கும்.
பூண்டு – பல மருத்துவ குணங்களுடைய பூண்டு, நடு முதுகெலும்பு வலிகளுக்கு சிறந்த மருந்து, பூண்டு எண்ணெய், முதுகெலும்பில் தேய்க்க வலி குறையும்.
அதிக எடையை தூக்கும் போது ஏற்படும் முதுகு வலி
மனைவிக்கு உதவி செய்ய, ஒரு வாளி தண்ணீரை தூக்கினேன், அவ்வளவு தான், முதுகு பிடித்துக் கொண்டு விட்டது, வலி தாங்க முடியவில்லை
ஒரு ஐந்து ரூபாய் காசு கீழே விழுந்து விட்டது, குனிந்து எடுத்தேன், முதுகு பிடித்துக் கொண்டு விட்டது
மேற்சொன்னவை பெரும்பாலனவர்க்கு முதுகு வலி வரும் விதம். பளுவான எடையை தூக்கும் போது சரியான முறையில் தூக்க வேண்டும். முன்னோக்கி குனிவதும், இடுப்பை பக்க வாட்டில் அங்குமிங்கும் திருப்பிக் கொண்டு தூக்கக் கூடாது. சிறிது மண்டியிட்டு உட்கார்ந்து எடுக்கும் எடையை அணைத்தவாறு தூக்க வேண்டும். பளுவான பொருட்களை இழுக்காதீர்கள். தள்ளுங்கள்.
இது கணிணியுகம். மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து ஆயிரக்கணக்கானவர் வேலை செய்யும் காலமிது. இதனால் ஏற்படும் முதுகு வலியிலிருந்து நிவாரணம் பெற -
வேலை செய்யும் போது, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இருக்கையை விட்டு எழுந்து, கை, கால்களை நீட்டி, நடக்கவும்.
முன் குனிவது அல்லது அதிகமாக பின் சாய்வது – வேண்டாம்.
உங்கள் இருக்கையை கீழ் முதுகின் வளைவுக்கு ஏற்ற படி சிறிது வளைந்து, மற்றபடி நேராக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மானிட்டருக்கு நேர் எதிர் லெவலில் (உயரத்தில்) உங்கள் கண்கள் இருக்குமாறு இருக்கையின் உயரத்தை அமைத்துக் கொள்ளவும்.
கணினி உபயோகிக்கும் போது, உங்கள் மணிக்கட்டுகள் மேலும் கீழும் வளையாத படி, கீ – போர்டை வைத்துக் கொள்ளுங்கள். முழங்கை லெவலாக நேராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment