Tuesday, January 15, 2013

ஊட்டியில் கடும் குளிர் சுற்றுலா தலங்கள் வெறிச்


ஊட்டி,: ஊட்டியில் கடும் குளிருடன் பலத்த காற்றும் வீசுவதால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. நீலகிரியில் டிசம்பரில் துவங்க வேண்டிய பனிக்காலம் கடந்த மாதமே துவங்கியது. 2 மாதமாக பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக பகலில் வெயில் மறைந்து மூடு பனியும் மேகமூட்டமும் நிலவுகிறது. பல நேரங்களில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் பகலிலும் கடும் குளிரால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய் தாக்குதலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் குளிரை தாங்க முடியாமல் வந்த வேகத்தில் திரும்பி விடுகின்றனர். இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது. தேயிலை செடிகள் மற்றும் காய்கறி செடிகள் பனியால் கருகி வருகின்றன. நேற்று வீசிய காற்றால் புதிய படகு இல்லம் - மான் பூங்கா சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 8.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

No comments:

Post a Comment