Saturday, January 12, 2013

குடும்பத்தை கலைத்த வெள்ளைக்காரன் !


      ருவன் கீழே விழுந்துவிட்டால் அவனை தூக்கிவிட வேண்டியது மற்றவனின் கடமை அவன் தானே விழுந்தான் முடிந்தால் எழும்பட்டும் அல்லது விதிவிட்டபடி நடக்கட்டும் என்று போவது ஒரு தனிமனிதனுக்கே நல்லதல்ல எனும் போது சமூதாயத்திற்கு எப்படி நல்லதாக இருக்கும்? அதற்காக விழுகின்ற ஒவ்வொருவனையும் தூக்கி விட்டுக்கொண்டே இருந்தால் தூக்குபவனின் கதி என்னாவாவது? அதனால் உதவி செய்பவனும் உதவி தேவைபடுபவனும் தனித்தனி குழுக்களாக இருந்தால் பரஸ்பரம் ஒத்தாசை செய்துகொள்வது சுலபமாக இருக்கும். இத்தகைய சமூதாய ஒத்தாசையை ஓரளவாவது மனிதன் பெறுவதற்கு ஜாதி என்பது சிறிய அளவில் துணை செய்கிறது என்பதே எனது அபிப்ராயம். 

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை சார்ந்த மார்வாரி சமூகமக்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அவர்களில் ஒருவன் தொழிலில் நஷ்டம் அடைந்து விட்டான் என்றால் அவனுக்கு பழையபடி தொழில் செய்து முன்னேறுவதற்கு அவர்களது சமூதாய சங்கம் மூன்றுமுறை முதல் கொடுத்து உதவி செய்கிறது. அந்த மூன்று உதவிகளிலும் அவன் முன்னேறவில்லை என்றால் அதன்பிறகே சமூகத்தால் கைவிடபடுகிறான். இந்த பழக்கம் அவர்களிடம் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் தலைசிறந்த வணிகர் சமூகமான நகராத்தார் என்ற நாட்டுகோட்டை செட்டி மார்களிடமும் இருக்கிறது. இன்று தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு இவர்கள் சமூகம் செய்திருக்கும் அறப்பணிகளை எந்த வரலாற்று சூழ்ச்சியும் மறைத்துவிட முடியாது. தமிழ்நாட்டு பண்பாடும் கலாச்சாரமும் கட்டிடக்கலையும் ஆசியா முழுவதும் அறியபட்டதாக இருக்கிறது என்றால் அது நகரத்தாரால் மட்டுமே. அதே போல மற்ற நாட்டு நல்ல பண்பாடுகள் இங்கு வந்து இருப்பதற்கும் அவர்களே மூலகாரணம் என்று சொல்லலாம். 

ஒரு தொழிலை வெளியில் சென்று கற்பதற்கும் பாட்டன் மற்றும் அப்பனிடம் கற்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு பல நுணுக்கங்களை வெளிமனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் கற்று தந்து விட மாட்டார்கள். தலைமுறை தலைமுறையாக சில கலைகளும் தொழில்களும் நிலைத்து வருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் வாரிசு வழி கற்பித்தாலே ஆகும். இப்படி கற்பிக்கப்படும் முறையை குலகல்வி முறை என்று பலர் கண்டித்தாலும் கூட இதிலுள்ள நன்மையை அவ்வளவு சீக்கிரம் மறுத்துவிட முடியாது. அது உன் அப்பன் தொழில் அதைநீ செய்தே தான் ஆகவேண்டும் என்று ஒருவனை கட்டாயபடுத்துவது தர்மத்திற்கு விரோதமான செயலாக இருக்கலாம். அதற்காக அப்பன் மூலகமாக கற்ற அனைத்துமே தவறு என்று சொல்லிவிட முடியாது. பாரம்பரியமான தொழில்கள் எப்போதுமே சுயசார்புடையதாக இருக்கும். சுயசார்பு மட்டுமே ஒரு சமூகத்தின் நிரந்தரமான பொருளாதார பலம் என்று சொல்லலாம். 

மனிதர்களுக்கு அமைதியான வாழ்க்கை பிடித்தமானது என்றாலும் அவன் எப்போது கோபப்படுவான் சண்டைபோடுவான் என்று சொல்லிவிட முடியாது. சில மனிதர்கள் ஒரு நாளில் பத்து முறை கூட கோபவச படுகிறார்கள். இதற்காக அவர்களை குடும்பத்தை விட்டோ சமூகத்தை விட்டோ ஒதுக்கி வைத்து விட முடியாது. நம் சொந்தகாரர் தானே தெரிந்தவர் தானே அவரது இயல்பு இப்படி இருக்கிறது இதற்காக அவரை தண்டனை கொடுத்து தள்ளிவைத்து விட முடியுமா என்று சகிப்பு தன்மையோடு பலரும் போய் விடுகிறார்கள். இதே போன்ற சகிப்பு தன்மை ஜாதி விஷயங்களிலும் பல நேரங்களில் பல மோதல்களை தடுக்கிறது. நம் ஜாதி பையன் தானே எதோ தெரியாமல் தப்பு செய்துவிட்டான் புத்திமதி சொல்லி கண்டித்து விட்டு விடுங்கள் அடுத்தமுறை செய்தால் பார்த்து கொள்ளலாம் என்ற ரீதியில் பல மோதல்கள் ஆரம்பத்திலேயே முனைமழுங்க செய்ய பட்டுவிடுகிறது. இப்படி பட்ட விவகாரங்கள் காவல் நிலையத்தின் மூலமோ நீதிமன்றங்களின் மூலமோ தீர்க்கப்பட வேண்டுமென்றால் தினசரி ஆயிரமாயிரம் வழக்குகளை பதிவு செய்ய வேண்டிய நிலை வரும். அப்படி வராமல் தடுப்பதற்கு ஜாதியும் உதவி செய்கிறது என்பது எதார்த்தமான உண்மை. 

நமது தமிழகத்தை மட்டும் எடுத்து கொண்டாலும் அனைவருக்கும் பொதுவான ஒரு பண்பாடு கலாச்சாரம் பழக்கவழக்கம் இருக்கிறது என்று சொல்ல முடியாது. தமிழர் பண்பாடு என்பதே பன்முகம் கொண்டது என்பது தான் அனைவரும் அறிந்தது. இந்த பன்முக தன்மை இன்றும் இருப்பதற்கு முக்கிய காரணம் ஜாதி எனலாம் திருமண சடங்கை எடுத்து கொண்டாலே பலவிதமான வழக்கங்கள் இருக்கின்றன. நாடார்களின் திருமணம் ஒருமுறையில் நடக்கும் நாயுடுகளின் திருமணம் வேறொரு முறையில் நடக்கும். தேவர், உடையார், கவுண்டர் இவர்களின் திருமணமும் பல்வேறு முறைகளில் நடக்கும் இவைகள் அனைத்துமே அர்த்தமற்ற சடங்குகள் அல்ல. அவைகளுக்குள் ஏராளமான உணர்வுகளும் உண்மைகளும் மறைந்து கிடக்கிறது. இவைகள் அனைத்துமே மறைந்து போகாமல் பாதுகாக்க பட்டால் தான் தமிழர் பண்பாடு என்பது நிறைவான ஒன்றாக எப்போதுமிருக்கும். அதை விட்டு விட்டு அனைவருக்கும் பொதுவான ஒரு பழக்கம் என்று வந்தால் பலவற்றை இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். 

ஆக ஜாதிகளால் பொருளாதார ஒத்துழைப்புகளும் சமூக அமைதிக்கான சூழலும் பண்பாட்டு தொடர்ச்சிக்கான ஏது நிலைகளும் ஓரளவு இருக்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அதற்காக ஜாதிகளால் ஒட்டுமொத்தமான நன்மைகள் மட்டுமே இருக்கிறது என்று யாரவது சொன்னால் அதை நாம் ஒத்துகொள்ள முடியாது. சக மனிதர்களை தொடாதே தள்ளி போ என்பதும். இவன் கீழ்ஜாதிகாரன் தனியாக வாழ வேண்டும் மற்றவர்கள் வாழம் இடத்திற்குள் வரக்கூடாது வழிபடும் இடத்திற்குள் நுழைய கூடாது. அடிமை தொழில் மட்டுமே செய்து வாழ வேண்டும் என்று கட்டாய படுத்துவது மனித தன்மையற்ற செயல் என்பதை மறுக்க இயலாது. 

மனிதனாக பிறந்த எவனுமே மேலானவனும் அல்ல கீழானவனும் அல்ல சமமானவனே ஆவான். வானமும் தண்ணீரும் காற்றும் மண்ணும் எல்லோருக்கும் பொதுவானது என்பது போல கல்வியும் மருத்துவமும் கருத்து சுகந்திரமும் வழிபாட்டு உரிமையும் அனைவுர்க்கும் பொதுவானதே ஆகும். இதை ஜாதியின் பெயரை சொல்லியோ மதத்தின் பெயரை சொல்லியோ தடுப்பது முறையற்ற செயல். 

எந்த வகையில் பார்த்தாலும் ஜாதி என்பது இன்றைய சூழலில் இந்திய சமூகத்தின் எதிர்மறையான தன்மையாகவே இருந்து வருகிறது. தற்போது இருக்கும் ஜாதியின் ஆர்வம் என்பது ஆதிக்க வெறியிலிருந்து மாறுபட்டதாக பண்பாட்டு வயப்பட்டதாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஒருவனை ஒருவன் ஆட்சி படுத்துவதற்கு ஜாதி என்பதை தக்க கருவியாக பயன்படுத்தி கொள்வதாகவே இருக்கிறது. இதற்கு தூண்டுகோலாக மேல் ஜாதிக்காரர்களின் ஆளுமை தன்மையும் கீழ் ஜாதிக்காரர்களின் உரிமைக்கான குரலும் தேசத்தை நல்ல பாதையில் அழைத்து செல்லவில்லை என்பதே தெரிகிறது. ஜாதியை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது மட்டுமே இன்று பிரதானமாக இருக்கிறது. எனக்கு ஒட்டு போடு உன் ஜாதிக்கு இட ஒதுக்கிடு தருகிறேன் என்ற லஞ்சம் கொடுக்கும் தொனியிலேயே சாதிக்கான சலுகைகள் காட்டபடுகிறதே தவிர உண்மையாக கீழ்மைபட்டு கிடக்கும் மனிதர்களை மேன்மையடைய செய்ய யாரும் தயாராக இல்லை. 

எனவே நாம் நமது மூதாதையர் எப்படி ஜாதி என்பதை குணம், அறிவு, திறமை, தொழில் என்று மட்டும் பார்த்து வாழ்ந்தார்களோ அந்த நிலைமைக்கு செல்ல வேண்டும். இவன் படித்தவன் அதனால் உயர்ந்தவன் அவன் தொழிலாளி அதனால் தாழ்ந்தவன் என்ற ஏற்ற தாழ்வு நம்மிடமிருந்து மறைய வேண்டும். 

ரிக் வேதத்தில் வருகின்ற புருஷ சூத்திரத்தில் தான் முதல்முறையாக நான்கு வருணத்தை பற்றிய விவரம் வருகிறது. அதில் உலகத்தை படைத்த இறைவனின் உடம்பிலிருந்தே நான்கு வருணமும் உதயமானதாக சொல்லபடுகிறது. இன்று அந்த சூத்தகம் மிக தவறான முறையில் அர்த்தம் கொள்ளபட்டு பாதத்திலிருந்து சூத்திரன் தோன்றினான் அதனால் அவன் தாழ்ந்தவன் சிரசிலிருந்து பிராமணன் தோன்றினான் அதனால் அவன் உயர்ந்தவன் என்பது போன்ற கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகிறது. தலை, கால், இடுப்பு என்று உறுப்புகள் வேறுபடுத்தி காட்டபட்டாலும் உறுப்புகள் என்ற நிலையில் வரும் போது அவைகள் அனைத்துமே சமமானதே தவிர பாகுபாடுடையது அல்ல. ஒன்று இல்லாமல் ஒன்றால் இயங்க முடியாது. அதனால தான் எந்த குணம் கொண்டவராக இருந்தாலும் எத்தனை திறமை பெற்றவராக இருந்தாலும் அவர்கள் அனைவருமே இறைவன் என்ற விராட் புருஷனின் அங்கம் என்பதை ரிக் வேத புருஷ சூத்தகம் தெளிவாக காட்டுகிறது. அதை சரியாக புரியாமல் அனர்தன வியாக்கியானத்தை துவக்கி வைத்தவர்கள் நம்மை ஆண்ட வெள்ளைகாரர்களே ஆவார்கள். காரணம் இந்தியர்களை எதாவது ஒருவகையில் மோத விட்டால் மட்டுமே அவர்களை அடிமைபடுத்தி ஆழ முடியுமென்று நானூறு வருடங்களுக்கு முன்பிருந்தே திட்டமிட்டு சில கருத்துக்களையும் போலியான ஆதாரங்களையும் உருவாக்கி நம்மை நம்ப செய்தார்கள். அந்த குறிப்புகளை படித்து விட்டு இந்து மதத்தில் உள்ள வருணமுறைகளுக்கு விளக்கம் காண முற்படும் போது தான் பல குழப்பங்கள் வருகிறது. 

என்னை கேட்டால் ஜாதி என்ற அமைப்பில் கீழ் மேல் என்று வேற்றுமை பாராட்டுவது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் அதே நேரம் ஜாதிகளுக்குள் தனித்தனியாக இருக்கும் பண்பாட்டு கூறுகள் தொழில் நுணுக்க மேன்மைகள் பாதுகாக்க பட வேண்டும் என்றும் சொல்வேன். காரணம் இன்று நம்மையும் நமது பண்பாட்டையும் சிதைப்பதற்கு முன் எப்போதும் இல்லாத எத்தனிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. அவைகளிலிருந்து நமது தலைமுறைகளை கட்டி காப்பாற்ற வேண்டுமென்றால் பிடிவாதம் பிடிக்காமல் வறட்டு வேதாந்தம் பேசாமல் சில உண்மைகளை ஒப்புகொள்ள வேண்டும். என்ன பெரிய பண்பாடு மனிதனை மனிதன் அடிமையாக்குவது பண்பாடா? என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் பதில் சொல்வதை விட வரலாற்று நிகழ்வுகளை தொட்டு காட்டினால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன். 

ஒரு காலத்தில் அமெரிக்காவில் அடிமை முறையானது கறுப்பின மக்களை எத்தகைய கொடுமைகளை அனுபவிக்க செய்தது என்பதை நாம் அறிவோம். ஆனால் அந்த அடிமை முறையை நியாய படுத்த பைபிளில் சொல்லபடுகின்ற நோவா என்பவரின் இளைய மகன் ஹாம் என்பவன் தந்தையை பார்த்து பரிகாசம் செய்ததினால் நீயும் உன் வாரிசுகளும் அடிமையாக போவீர்கள் என்று இறைவனால் சபிக்க பட்டான் அந்த ஹாம் என்பவனின் மக்கள் தான் நீக்ரோக்கள் எனவே அவர்கள் அடிமைய்கவே இருக்க படைக்க பட்டவர்கள் என்ற ஒரு கதையை உருவாக்கி மற்றவர்களையும் நம்ப செய்து நீக்ரோக்களையும் நம்ப வைத்து ஒரு ஆதிக்க நாடகத்தை வெள்ளையர்கள் நடத்தினார்கள். 

அதே போன்ற ஒரு கதை தான் இந்தியாவில் ஜாதிகளுக்காக வேதங்களை பலிகடா ஆக்கியது. வெள்ளையர்கள் கட்டிவிட்ட கதையை நம்பியும் கொடுத்த பணத்தை நம்பியும் நம் பண்பாட்டின் மூல வேறான கூட்டு குடும்பத்தை சிதைத்து விட்டோம். இன்று பகுத்தறிவு மனித உரிமை என்றெல்லாம் பேசி நம் பண்பாட்டை கெடுக்கவும் துவங்கி விட்டோம். இதே நிலைமை நீடித்தால் நாளைய நமது சமூகம் முகவரியை மட்டுமல்ல வாழும் உரிமையையும் இழந்துவிடும். ஜாக்கிரதை 

No comments:

Post a Comment