களக்காடு, : சுப்ரீம் கோர்ட் அனுமதியை தொடர்ந்து களக்காடு - முண்டந் துறை புலிகள் காப்பகம் இன்று முதல் திறக்கப் படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியாவில் உள்ள புலிகள் காப்பக பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்ள கடந்த ஜூலை 24ம் தேதி சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. மத்திய அரசின் மேல் முறையீட்டால் அக். 16ம் தேதி கோர்ட் சில நிபந்தனைகளுடன் தடையை நீக்கியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள புலிகள் காப்பக பகுதிகளான ஆணைமலை, முதுமலையில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது.
களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் சுற்றுலா பயணிகளை அனுமதிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் பாபநாசம் முண்டந்துறையில் கூடுதல் தலைமை வன உயிரின பாதுகாவலர் மல்கானி தலைமையில் நடந்தது.
இதில் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, கல்யாண தீர்த்தம், வனபேச்சி அம்மன் கோயில், சொரிமுத்து அய்யனார் கோயில், கோரக்கநாதர் கோயில், காரையார் அணை, சேர்வலாறு அணை, களக்காடு தலையணை, நம்பிகோயில், குற்றாலம், கன்னியாகுமரியில் ஜீரோபாயிண்ட், காளிகேசம் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடையை விலக்க முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம் இன்று (டிச.7) முதல் திறக்கப்படுகிறது என்று களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் சேகர் தெரிவித்துள்ளார். இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனால், மாஞ்சோலை, குதிரைவெட்டி, மேல்கோதையாறு பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment