Tuesday, January 15, 2013

வயிற்றையும் வாட்டும் நீரிழிவு வியாதி

நீரிழிவு நோய் உடலின் எந்த அவயத்தை வேண்டுமானாலும் தாக்கும். ரத்தத்தில் சர்க்கரை தேங்கி, ரத்த ஓட்டத்தை பாதித்து, நரம்புகளையும் வாடச் செய்யும். ஏனென்றால் சர்க்கரை வியாதியினால் உடல் அவயங்களுக்கு சக்தி கிடைக்காது.

நீரிழிவு உண்டாக்கும் அழிவுகளில் ஒன்று இரப்பை பாதிப்பு. இதை வயிற்றில் தாமதிக்கப்பட்ட கழிவுப்பொருட்கள் நீக்கம் (Delayed gastric emptying) என்பார்கள். இதன் காரணங்கள் வயிற்றின் வெளியேறும் பாதை அடைப்பு (Gastric outlet obstruction) மற்றும் கேஸ்ட்ரோபரேசிஸ் (Gastro paresis). இவை இரண்டும் உருவாக முக்கிய காரணம் டயாபடிஸ்.

இரைப்பை அடைப்பு (Gastric outlet obstruction)

வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்லும் குறுகிய பாதை வழியாகத்தான் உணவு செல்லும். இந்த பகுதி பைலோரஸ் (Pylorus) எனப்படும். இந்த பாதையில் அடைப்பு ஏற்பட்டால், உணவு சிறுகுடலின் முதல் பகுதியான டியோடினத்தை நிதானமாக சென்று அடையும். இல்லை அடைத்துக் கொண்டு கொஞ்சமும் போகாமல் தேங்கிவிடும். அல்சர், பைலோரஸிஸ் தொற்றுநோய், கான்சர் இவை இந்த அடைப்பை உண்டாக்கலாம்.

கேஸ்ட்ரோ பரேஸிஸ்

வயிறு தன் உள்ளிருக்கும் பதார்த்தங்களை காலி செய்ய வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். சாதாரணமாக வயிறு தனது தசை அசைவுகளால் உணவை ஜீரணமாவதற்காக சிறுகுடலுக்கு செலுத்தும். இதை ‘கன்ட்ரோல்’ செய்வது வேகஸ் (Vagus) நரம்பாகும். மூளையிலிருந்து வரும் 12 ஜோடி நரம்புகளில் வேகஸ§ம் ஒன்று. இந்த நரம்பு தான் ஜீரண மண்டல உறுப்புகள் இயங்க வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரக்க, உணவு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு போக, இத்யாதி இயக்கங்களை இயக்கும் தலைவர். இந்த நரம்பு பாதிக்கப்பட்டால் ஜீரண மண்டலம் ஸ்தம்பித்து விடும். உணவின் பயணம் ஆமை போல் நகரும். இல்லை நின்று விடும்.

கேஸ்ட்ரோபரேஸில் எப்படி வருகிறது

முதல் காரணம் டயாபடிஸ் – சர்க்கரை வியாதி, நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் அபரிமிதமாக படர்ந்திருக்கும் சர்க்கரை நரம்புகளில் வேதியல் மாற்றங்களை தோற்றுவித்து, போதாக் குறைக்கு நரம்புகளுக்கு ஆக்ஸிஜனையும், ஊட்டச்சத்துக்களை எடுத்துச் செல்லும் ரத்தக் குழாய்களையும் பாதிக்கும். கொஞ்ச நாட்களில் ரத்த சர்க்கரை, வேகஸ் நரம்பை பீடித்து பாதிக்கும்.

இதர காரணங்கள்

• வயிறு அறுவை சிகிச்சை மற்றும் வேகஸ் நரம்பு துண்டிப்பு
• வைரஸ் தொற்று நோய்கள்
• அனோரெக்ஷியா – நர்வோசா மற்றும் புலீமியா வியாதி
• போதை மருந்துகள், குடல் தசை இயக்கத்தை குறைக்கும் சில மருந்துகள்
• தசை நார்கள் பாதிப்பு – அமிலாய்டோசிஸ், ஸ்க்லாரோ டெர்மா (Amyloidosis) (Scleroderma)

• நரம்பு மண்டல வியாதிகள் – பார்க்கின்சன்ஸ் போன்றவை
• வளர்சிதை மாற்ற வியாதிகள், தைராய்டு சுரப்பி பாதிப்புகள்.

அறிகுறிகள்
• நெஞ்செரிச்சல்
• மேல் வயிற்றில் வலி
• குமட்டல்
• ஜீரணமாகாத உணவை வாந்தி எடுத்தல் சில சமயங்களில் சாப்பிட்ட பல மணி நேரங்களுக்கு
பிறகு.
• கொஞ்சம் சாப்பிட்டவுடனேயே வயிறு நிரம்பிய உணர்வு
• எதுக்கலித்தல்
• எடை குறைவு, பலவீனம், சக்தியின்மை
• அடிவயிறு உப்புசம்
• கட்டுக்குள் வராத இரத்த சர்க்கரை அளவு
• பசியின்மை
• வயிற்றுப் பகுதியில் இழுப்பு (Spasm)

விளைவுகள்

• இந்த நோயால் வயிற்றில் நீண்ட நேரம் உணவு தேங்கியிருக்கும். உணவு அழுகி புளித்துப் போய் பாக்டீரியாக்களை உருவாக்கும். தவிர தேங்கிய உணவு ‘களி மொத்தை’ போல் கட்டிகளாகி சிறுகுடலுக்கு உணவு போகும் பாதையை அடைத்து விடலாம். இந்த கட்டிகள், குமட்டல், வாந்தி உண்டாக்கும். சிறுகுடலின் பாதை அடைப்பு அபாயகரமானது.

• குடலில் தேங்கிய உணவு நிறுத்தி நிதானமாக சிறுங்குடலுக்கு வந்து, அங்கே ஜீரணமாகையில், ரத்த குளுகோஸ் அளவு ஏறும் தவிர எப்போது குடல் காலியாகும், எப்போது உணவு சிறுகுடலுக்கு செல்லும் என்பது தெரியாது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கண்டபடி ஏறி, இறங்கும். இந்த நிலையில், சர்க்கரை லெவலை கட்டுப்படுத்துவது கடினம்.

• சர்க்கரை அளவு அதிகரித்தல் நீரிழிவு நோயாளிகளுக்கு மயக்கம், மூளைத் தாக்கு, பக்கவாதம் ஏற்படலாம். மாறி மாறி நீரிழிவு வயிற்றையும், வயிற்றுக் கோளாறுகள் நீரிழிவு நோயாளிகளை பாதித்துக் கொண்டே இருக்கும். இதன் அடிப்படை காரணமான சர்க்கரை லெவல் அதிகரிப்பை கட்டுப்படுத்துவது மிக மிக அவசியம்.

இந்த இரைப்பை கோளாறை கண்டுபிடிக்க பரிசோதனைகள்

1. என்டோஸ்கோபி
2. அல்ட்ரா சவுண்ட்
3. பேரியம் எக்ஸ்-ரே

இதர தீவிர பரிசோதனைகள்

1. வயிற்றை காலி செய்து எடுக்கும் சிண்டிகிராஃபி (Gastric emptying scintigraphy) இந்த சோதனையில் உப்பு சப்பு இல்லாத உணவு கொடுக்கப்படும். இந்த உணவில் கதிரியக்கம் உள்ள பொருள் ஒன்றும் கலந்திருக்கும். ஸ்கானில் இந்த கதிரியக்கப் பொருள், வயிறு காலியாக எடுத்துக் கொள்ளும் நேரத்தை சுட்டிக்காட்டும்.

2. மூச்சுப் பரிசோதனை – இதில் ஐஸோடோப் (Isotope) கலந்த உணவு நோயாளிக்கு கொடுக்கப்படும். மூச்சுக் காற்றை பரிசோதனை செய்து கார்பன் -டை-ஆக்ஸைட் (ஐசோடோப் மூலமாக) அளவு கணிக்கப்படும் இதிலிருந்து வயிறு காலியாகும் நேரம் தெரியவரும்.

சிகிச்சை முறைகள்

• முதலில் நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரையை ‘நார்மலுக்கு’ கொண்டு வர வேண்டும். கேஸ்ட்ரோபரேசிஸ் இருக்கும் பட்சத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் இன்சுலின் அளவை அதிகமாக்க வேண்டும். அடிக்கடி போட்டுக் கொள்ளவும் நேரிடலாம்.

• இன்சுலினை உணவு உண்பதற்கு முன் எடுத்துக் கொள்ளாமல், உணவுண்ட பின் எடுத்துக் கொள்ளலாம்.

• குளுகோஸ் லெவலை அடிக்கடி சோதித்துக் கொள்ளலாம் – குறிப்பாக உணவிற்கு பிறகு / இன்சுலின் போட்டுக் கொண்ட பிறகு.

உங்கள் டாக்டர் இந்த முறைகளை பற்றி உங்களுக்கு விவரிப்பார்.

இரண்டாவது உணவு முறை – மூன்று வேளைக்கு பதில், அதே அளவு உணவை 6 வேளைகளாக பிரித்து உண்ணவும். சில சமயங்களில், டாக்டர் ஒன்றிரண்டு நாட்கள் வெறும் திரவப் பதார்த்தங்களை மட்டும் உட்கொள்ளச் சொல்லுவார். ஊட்டச்சத்து செறிந்த, முழு உணவின் சக்தியை உள்ளடக்கிய பல திரவ உணவுகள் தற்போது கிடைக்கின்றன. கொழுப்பு உணவுகளை தவிர்க்கும் நார்ச்சத்து மிகுந்த உணவுகள் பொதுவாக நல்ல உணவுகள். ஆனால் கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்கள் நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கவும். முற்றின நாட்பட்ட கேஸ்ட்ரோபரேசிஸ் உள்ளவர்களுக்கு வயிற்றில் ஓட்டை போட்டு, அதன் வழியே சத்து நிறைந்த திரவ வடிவில், ஆகாரம் செலுத்தப்படும். மருந்துகளும் செலுத்தப்படும்.

மருந்துகள்

• மெட்டோகுளோப்ராமைடு, எரித்ரேமைசின், டாம்பெரிடோன் போன்ற மாத்திரைகள் இரைப்பையின் தசைகளைத் தூண்டி இயங்க வைக்கின்றன.
• பேட்டரியால் இயங்கும் ஒரு கருவி வயிற்றில் மின் அதிர்வுகளை உண்டாக்கி இரைப்பையில் இயக்கத்தை தூண்டி விடும். இதனால் வாந்தி, குமட்டல், இவை நின்றுவிடும்.

• மறுபடியும் சொல்லுவது – டயாபடிஸ் தான் கேஸ்ட்ரோபரேசிஸ் உண்டாக முக்கிய காரணம். இதை நீரிழிவு நோயாளிகள் கருத்தில் கொண்டு வருமுன் காக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

• ஆயுர்வேதத்தில் டயாபடிஸ், மற்றும் சம்மந்தப்பட்ட வயிறு கோளாறுகளுக்கு, பல மருந்துகள் உள்ளன. இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் அலோபதி மருந்துகளுடன் உட்கொள்ளலாம். ஆயுர்வேத மருத்துவரை அணுகவும்.

No comments:

Post a Comment