உடல் குண்டாக அதிஸ்தூலமாக இருந்தாலும் பிரச்சனை, உடல் மெலிந்து ஒல்லியாக இருப்பதும் ஒரு பிரச்சனை தான். நடைமுறையில் பார்த்தோமானால் உடல் பருமனை குறைப்பதைப் பற்றி தான் கவலைப் படுகிறோமோ தவிர ஒல்லிக்குச்சி யாக இருப்பவர்களை அதிகம் நாம் கவனிப்பதில்லை.
உடலின் எடையை கூட்டுவது என்ன கஷ்டம், நன்றாக பிடித்தவற்றை பத்தியமில்லாமல் இஷ்டத்திற்கு சாப்பிட வேண்டியதானே என்கிறீர்களா நீங்கள் நினைக்கும் பொழுது எடை கூடுவது அதுவும் ஆரோக்கியமாக, அவ்வளவு சுலபமல்ல. முதலில் உயரத்திற்கேற்ப உடல் எடை இருக்க வேண்டும். உங்கள் உடல் வாகு பொருத்து என்ன எடை இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளவும்.
ஒல்லியாக இருப்பதே அழகு என்று பெருமைப்படும் காலமிது. நவ நாகரிக ஃபேஷன் ஷோக்களில் வரும் பெண்களை பாருங்கள், கிள்ள சதை கிடைக்காது
குண்டாவதை விட ஒல்லியாயிருப்பது ஒரு வகையில் நல்லது தான் ஆனால் ஒல்லி உடம்பானவர்களின் நோய் தடுப்பு சக்தி குறைவாக இருக்கும். அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படலாம்.
ஒவர் ஒல்லியை ஆயுர்வேதம் கர்ஷயா என்கிறது. இந்த எடை குறைவானவர்களுக்கு உடலின் பாகங்கள் மார்பு, கைகால், பின்புறம் சரியாக வளர்ச்சி அடைந்திருக்காது. குழிவிழுந்த முகம், எலும்பும் தோலுமாக, தசை அடர்த்தியின்றி, எடை குறைந்து காட்சியளிப்பார்கள்.
உடல் எந்த காலகட்டத்தில் பெரும் வளர்ச்சியடையும் என்றால், அது 13 லிருந்து 19 வயது வரை, பருவமடையும் காலத்தில் தான். பருவம் தோன்றும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஹார்மோன்களால் ஏற்படும். தசை வளர்ச்சி அதிகமாகும். உயரம், ஏடை வேகமாக ஏறும். உயரம் 25 செ.மீ. அளவு பருவகாலத்தில் (ஜிமீமீஸீ ணீரீமீ) கூடும். இந்த மாற்றங்கள் சிலருக்கு 8 வயதிலேயே தோன்றலாம். இல்லை தாமதமாக 14 (அ) 15 வயதில் கூட ஏற்படலாம்.
இந்த இளம் பருவ காலத்தில் உடலுக்கு அதிக சக்தி – கலோரிகளும், புரதமும் தேவைப்படுகிறது. வழக்கமாக சாப்பிடுவதை விட அதிக உணவு தேவைப்படும். அதிக உணவு கிடைக்காவிட்டால், நடு நடுவில் “நொறுக்குத்தீனி”. சாப்பிடத் தோன்றும். இந்த பழக்கம் காரணமாக உடலுக்கு சக்தி குறைந்து நார்மல் வளர்ச்சி தடைபடும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். உடல் எடை வெகுவாக கூடாமல் போகும்.
குழந்தைப்பருவத்திலும், இளம் வயதிலும் போஷாக்கு குறைவான உணவாலும் உடல் மெலிவுக்கு காரணமாகும். கர்ப்ப சமயங்களில் தாய்க்கு ஊட்டச்சத்து குறைந்தாலும், பிறக்கும் குழந்தையின் கொழுப்புச் செல்கள் குறைந்து விடும். பாரம்பரியமும் ஒரு காரணம்.
தைராய்டு கோளாறுகள், தவறான உணவு பழக்கங்கள், நோய்கள், காஃபின், புகை பிடித்தல் இவைகளும் காரணம். மற்றொரு முக்கிய காரணம், மன அழுத்தம்.
அறிகுறிகள்
உடல் எடை இருக்க வேண்டிய அளவை விட குறைவாக இருத்தல்
அடிக்கடி உடல் நலக்குறைவு, அதிலிருந்து மீள மற்றவர்களை விட அதிகமாக நாட்கள் ஆதால்
உடல் இளைத்து எலும்பு (விலாவில்) தெரிதல்
பலவீனம்
சதையை, கிள்ளினால், மெல்லிய, சிறிதளவு தோல் தான் விரல்களில் அகப்படும்.
எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்
உட்கொள்ளும் கலோரிகளை விட 500 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக நீங்கள் தற்போது 1300 கலோரி உணவை உட்கொண்டு வந்தால் அதை 1800 ஆக அதிகரிக்க வேண்டும். அப்போது தான் ஒரு மாதத்தில் 1 கிலோ எடை ஏறும். உடனே ஏன் 1000 கலோரிகள் எக்ஸ்ட்ராவாக எடுத்துக் கொண்டால் 2 கிலோ ஏறுமே என்று கணக்கு போடாதீர்கள். எடை ஏறுவது நிதானமாக இருக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு கிலோ ஏறுவது சரியானது, போதுமானது. இந்த 500 கலோரிகளை அடைய, ஆரஞ்சு ஜுஸீக்கு பதிலாக திராட்சை சாறு, (அ) நான்கு வாழைப்பழங்கள், (அ) ஒரு கரண்டி சாதம் எக்ஸ்ட்ராவாக, (அ) 100 கிராம் வேர்க்கடலை – சேர்த்துக் கொள்ளலாம்.
புரதம் செறிந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள். பால், இறைச்சி, மீன், கோழி இறைச்சி, முட்டை, பருப்பு வகைகள், வேர்கடலை முதலியன புரதம் உள்ளவை.
கொட்டைகள், உலர்ந்த பழங்கள் வெல்லம், கிரீம், பால் வெண்ணை, உளுந்து, நெய், எண்ணைகள், தயிர் இவைகளை எடுத்துக்கொள்ள வேண்டிய அளவுகள் மாறும்.
ஸ்டார்ச் நிறைந்த உருளைக்கிழங்கு, கேரட், சேனைக்கிழங்கு இவற்றை அதிகம் உண்ணவும். கோதுமையை விட அரிசி எடை கூட உதவும். கீரைகளை குறைக்கவும்.
தினம் இரண்டு வேளை நல்ல பெரிய உணவாக உட்கொள்ளுங்கள். இரவு உணவு கூட கனமாக இருக்கட்டும். உணவுக்கு பின் படுக்கு முன் ஒரு டம்ளர் பால் குடிக்கவும். படுக்கு முன் ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகளை (பிஸ்கட் போன்றவை) சாப்பிடலாம். இரண்டு பெரிய உணவுகளுக்கு நடுவில் வேண்டிய சிற்றுண்டிகளை சாப்பிடலாம். இரவில் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டிகள் தூக்கத்தை கெடுக்காதவையாக இருக்க வேண்டும்.
சாப்பிடும் முன்பும், சாப்பிடும் போதும் தண்ணீர் குடிக்க வேண்டாம்.
எடை கூடுவதற்கு உதவும் மாமிச உணவு ஆட்டு மாமிசம் தான் என்கிறது ஆயுர்வேதம். உடலின் திசுக்களுக்கு ஏற்றது. முதலில் நோயாளியின் ஜீரணசக்தி சரியானவுடன், ஆட்டிறைச்சியை சாப்பிட தொடங்கலாம். இறைச்சியுடன் சில மூலிகைகளையும் கலந்து உண்ணலாம். இதற்கு ஆயுர்வேத வைத்தியரை அணுகவும்.
பகலில், நன்றாக தூங்கலாம். இரவிலும் நன்றாக தூங்க வேண்டும்.
லேசான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இரவு உணவுக்கு பின் நடப்பது கூட வேண்டாம்.
ஸ்ட்ரெஸ்ஐ குறைக்க வேண்டும். மனதை அலட்டிக் கொள்ளாமல், கவலைகளை கைவிட்டு விடுங்கள். இதற்கு தேவையானால் யோகா, தியானம், இவற்றை செய்யவும்.
அநோரெக்ஷியா, அநோரெக்ஷியா நர்வோஸா
அநோரெக்ஷியா என்றால் பசியின்மை. இது ஜீரண கோளாறுகளால் ஏற்படும். ஜீரண மண்டல பாதைகளில் ஏற்படும் அழற்ச்சி கேஸ்ட்ரைடீஸ், கேஸ்ட்ரோ என்டரைட்டீஸ்), தொற்று நோய்களின் தாக்குதல் இவற்றால் பசி மந்தமடையும். இந்த ஜீரண பாதைகளால் தடை ஏற்பட்டாலும், பசியில்லாமல் போகும்.
அநோரெக்ஷியா நர்வோஸா, அநோரெக்ஷியாவின் மனோரீதியான பாதிப்பு. ஆண்களை விட பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள், அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
அறிகுறிகள்
குண்டாகிவிடுவோமா என்ற தீவிரமான பயம்.
மனக்கோளாறுகளால் தூண்டப்படும் பட்டினி. இருப்பதில் ஆர்வம்.
நார்மல் எடையை அடையாமல் மறுப்பது. இதற்காக சாப்பிட்டதை வாந்தி எடுப்பது. வேதி மருந்துகளை உட்கொள்வது.
உடல் மெலிவு
மாதவிடாய் ஏற்படாமல் இருப்பது.
ஆயுர்வேத மருந்துகள்
அரவிந்தசவா, திராக்ஷரிஷ்டா, முஸ்தாரிஷ்டம், அஷ்டசூரணம், அக்னிமுக சூரணம், எலாச்சி சூரணம், காந்தருவ அஸ்டாரி க்வாத சூரணம், சம்பிராதி பானம், ஜீரகாதி ரசாயனம், சஞ்சீவினி வடீ, ஆதித்யா ரசா முதலியன.
மூலிகைகள்
கீழாநெல்லி – மஞ்சள் காமாலைக்கு பிரசித்த பெற்ற அருமருந்து. இதன் வேர் கல்லீரல் இயக்கத்தை தூண்டுகிறது. இதனால் அதிக பித்த நீர் சுரக்கும்.
பிருங்கராஜ், கைகேசி – பித்த நீர் நாளங்களின் அடைப்பை எடுக்கும்.
நெரிஞ்சி – சிறுநீர் பெருக்கி. அதிக பித்த நீரை ரத்தத்திலிருந்து வெளியேற்றுகிறது.
கற்றாழை – வயிற்றுக்கோளாறுகளை போக்கும் மூலிகை ஜீரணத்தை ஊக்குவிக்கும். அனோரெக்சியா நர்வோசாவினால் ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்யும்.
நெல்லி – பசியை தூண்டும். விட்டமின் சி நிறைந்தது.
நாவல்- பசியை தூண்டும்.
சிகிச்சை
முதலில் உடல் எடையை கூட்டும் முயற்சிகள் செய்யப்படும். தேவைப்பட்டால் ஆஸ்பத்திரியில் வைத்து வைத்தியம் செய்வது நல்லது. பசியின்மைக்கு மருந்துகள் தரப்படும். இரண்டாவது கட்டமாக மனவியாதி சிகிச்சை, மருந்துகளால் சிகிச்சை தொடங்கும்.
ஆயுர்வேத சிகிச்சை முறை
ஆயுர்வேதத்திலும் முதலில் உடல் எடையை அதிகரிக்கும் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும். பசியை தூண்டும், ஜீரண சக்தியை அதிகரிக்கும் மருந்துகள் தரப்படும். இதற்கு ஆம்ரபல்லாவதி லேஹியம் பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத வைத்தியரின் கண்காணிப்பில் நோயாளி வைக்கப்படுவார். நோயாளிகள் ஆரோக்கியம் சிறிது நன்றானதும், நெடு நாள் சிகிச்சை ஆரம்பமாகும். நோயாளிக்கு அஸ்வகந்தா லேஹியம் அல்லது கூஷ்மாண்ட ரசாயனம் கொடுக்கப்படும். அனுபவமுள்ள, நன்கு தேர்ச்சி பெற்ற ஆயுர்வேத வைத்தியரால் தான், மேற்சொன்ன இரண்டு மருந்துகளில் எதை நோயாளிக்கு கொடுப்பது என்பதை தீர்மானிக்க முடியும் சில சமயங்களில் இந்த இரண்டு மருந்துகளும் ஒன்றின் பின்னால் ஒன்றாக தரப்படும். மிகவும் ஒல்லியாக, வெறும் எலும்பாக இருக்கும் நோயாளிகளும் அஸ்வகந்தா லேஹியம் (அ) அஸ்வகந்தாரிஷ்டம், கூஷ்மாண்ட லேஹியத்துடன் தரப்படும்.
ஆயுர்வேதம் அடிக்கடி எண்ணை தேய்த்து குளிப்பதை வலியுறுத்துகிறது. தினமுமே எண்ணைக் குளியல் செய்யுங்களேன் என்கிறது ஆயுர்வேதம். தலைக்கு தடவ “திரிபாலாதி தைலம்” (அ) பிருங்காமல தைலம் ஏற்றவை. உடலுக்கு தடவ பிண்ட தைலம் (அ) ஆமவாதாந்த தைலத்தை பயன்படுத்தலாம். தன்வந்திரி தைலத்தையும் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment