Tuesday, January 15, 2013

விடுமுறையால் ஊட்டியில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்


ஊட்டி, :அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நான்கு நாட்களில் மட்டும் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனர். சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். இருந்த போதிலும் தொடர் அரசு விடுமுறை நாட்கள், பண் டிகை விடுமுறைகள் மற்றும் பள்ளி தேர்வு விடுமுறைகளின் போது இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. தற்போது ஊட்டியில் பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் உள்ளதால், இந்த காலநிலையை அனுபவிக்க வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் அறிவித்துள்ள நிலையில் கடந்த இரு தினங்களாக ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் ஆகிய பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் ஊட்டியில் உள்ள பெரும்பாலான காட்டேஜ்கள், லாட்ஜ்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் ஊட்டி அருகேயுள்ள பைக்காரா படகு இல்லம், நீர் வீழ்ச்சி, சூட்டிங் மட்டம் போன்ற பகுதிகளும் சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களை கட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை முதலே ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து.

சனிக்கிழமை 22ம் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 6 ஆயிரத்து 800 பேரும், 23ம் தேதி ஞாயிறன்று 8 ஆயிரத்து 500 பேரும், நேற்று முன்தினம் திங்கள் கிழமை 8 ஆயிரத்து 500 பேரும், நேற்று சுமார் 10 ஆயிரம் பேர் என நான்கு நாட்களில் மட்டும் சுமார் 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் முகாமிட்டுள்ளதால், மலர் கண்காட்சி கூட்டம் போல் கடந்த இரு தினங்களாக காட்சியளித்தது. சுற்றுலா பயணிகள் அதிகளவு ஊட்டியில் குவிந்துள்ளதால் சாலையோரங்களில் ஏராளமான கடைகள் முளைத்துள்ளன. இவர்களுக்கும் விற்பன படு ஜோராக நடக்கிறது.

இது தவிர ஊட்டி நகருக்குள் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகனங்கள் வந்து செல்கின்றன. பார்க்கிங்கிற்கு போதிய இட வசதி இல்லாத நிலையில், நகரின் முக்கிய சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. வாகன நெரிசலை தவிர்க்க கமர்சியல் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. எனினும் இச்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படுகிறது. இரவு நேரங்களில் குளிர் வாட்டுவதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர் மற்றும் சால்வைகளை அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். இதனால் வெம்மை ஆடை விற்பனையும் தற்போது ஊட்டியில் சூடு பிடித்துள்ளது.

No comments:

Post a Comment