Tuesday, January 15, 2013

கூட்டம் அலைமோதியது சுற்றுலா பயணிகள் குவிந்ததால் குமரியில் இடநெருக்கடி


கன்னியாகுமரி : 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கன்னியாகுமரியில் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் சீசன் தொடங்கியதில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஆனால் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர். இதனால் தங்கும் விடுதிகளில் இடம் கிடைக்காமலும், வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமலும் ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

நேற்று காலையில் சுமார் 40 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை கன்னியாகுமரியில் குவிந்திருந்தனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக வளாகத்தில் படகு டிக்கெட் வாங்குவதற்காக 600 மீட்டர் தூரம் அளவிற்கு வரிசையில் காத்து நின்றனர். கூட்டம் அதிகமானதால் வரிசையில் நிற்பவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அங்கு காவலுக்கு நின்ற காவலர்கள் அவர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது காவலர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் குழந்தைகளும், பெரியவர்களும் வரிசையில் காத்து நிற்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

பகவதியம்மன் கோயிலில் தரிசனத்திற்காக சன்னதி தெருவிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வரிசையில் காத்திருந்தனர். மேலும் தெரு முழுவதும் நகர முடியாத அளவிற்கு கூட்டம் காணப்பட்டது. கடற்கரை சாலை, காந்தி மண்டபம், திரிவேணி சங்கமம், சன்செட் பாயின்ட் ஆகிய பகுதிகளிலும் கூட்டம் அலைமோதியது.

No comments:

Post a Comment