Tuesday, January 15, 2013

நமது உடலில் உள்ள மூட்டுகள்


எலும்புகள் பலவித மூட்டுக்களால் ஒன்றோடு ஒன்றாக
இணைக்கப்படுகின்றன. எலும்பு மூட்டுகள் அசையும் மூட்டுகள் (உதாரணம் தோள்பட்டை) மற்றும் அசையா மூட்டுகள் (உதாரணம் மண்டை – ஓடு) என்று பிரிக்கப்படுகின்றன. மூட்டுகளில் எலும்புகளின் இணைப்பு தசை நார்களால் கட்டப்படுகிறது. இந்த தசை நார்கள் எலும்பையும், எலும்பையும் இணைக்கும். வேறொரு தசை நாணாகிய “டென்டான்” தசையும் எலும்பையும் இணைக்கிறது. அதாவது எலும்பும் எலும்பும் சேர, லிகாமென்ட், எலும்பும் தசையும் சேர டென்டான்கள்.
மூட்டுக்களின் உள்ளே, எலும்புகள் ஒரு நயமான வழவழப்பான பொருளான ஆர்டிகுலர் கார்டிலேஜ் எனும் குருத்தெலும்பால் மூடப்பட்டிருக்கின்றன. மேலாடை போல் மூட்டை மூடும் இந்த கால் அங்குலம் பருமனான குருத்தெலும்பு அதிர்ச்சிகளை தாங்கும். இந்த குருத்தெலும்பையும் மூடுகிறது ஒரு மூட்டு சுரப்பு ஜவ்வு (சினோவியல் மெம்ப்ரான்) இந்த ஜவ்விலிருந்து சுரக்கும் ஸினோவியல் திரவம் குருத்தெலும்புக்கு உரமிடும், மசக்கை எண்ணையாகவும் செயல்படுகிறது. தவிர எலும்புகளுக்கு சத்துப் பொருட்களையும் தருகிறது.
குருத்தெலும்புகளுக்கு வலி தெரியாது. அதில் வலி உணர்வை அறிந்து கொள்ளும் நரம்புகள் இல்லை. ஆனால் சினோவியல் திசுக்களில் வலி உணரும் நரம்புகள் உள்ளன.
அசையும் மூட்டுக்களில் பல வகைகள் உண்டு அவை
நழுவும் மூட்டுகள் – ஒன்றின் மேல் ஒன்று வழுக்கிச் செல்லும் எலும்புகள் உதாரணம் – கணுக்கால் மூட்டு, மணிக்கட்டு
பந்து கிண்ண மூட்டு – பந்து போல் உருண்டையாக இருக்கும் எலும்பு, கிண்ணம் போன்ற உட்குழி உள்ள எலும்பில் சுழல்வது. உதாரணம் – தோள், இடுப்பு மூட்டுகள்
கீல் மூட்டுகள் – இவை மூட்டுகளை ஒரு பக்கம் மாத்திரம் திரும்ப விடும் உதாரணம் – முழங்கை, முழங்கால்
சுழலச்சு மூட்டுகள் – வெளியே துருத்திக் கொண்டிருக்கும் எலும்பை மற்றொரு எலும்பு அதை சுற்றி சுழல்வது போன்ற அமைப்பு. உதாரணம் – மண்டையை தாங்கி நிற்கும் முதல் முள்ளெலும்பு.
பல வித மூட்டு வலிகள்
அண்மைக்காலத்தில் நடுவயதினரையும் வயது முதிர்ந்தவர்களையும் பாதிக்கின்ற நோய்களில் முதலிடம் வகிப்பது மூட்டு மற்றும் எலும்பு தொடர்புடைய நோய்கள் தான். எலும்பு நோய்களைப் பற்றிப் பேசுகின்ற போது ருமாடிஸம் என்ற சொல்லும் ஆர்த்ரைட்டிஸ் என்ற சொல்லும் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட போதும் இவை எவ்வாறு ஒன்றுக்கொன்று வேறுபடுகின்றன என்பதைத் தெளிவாகக் கூற முடிவதில்லை.
ஆர்த்ரைடீஸ் என்னும் சொல் பொதுவாக பலவித மூட்டுவலி / மூட்டுப் பிடிப்புகளை ஒன்றாக சேர்த்து சொல்லும் வார்த்தை. நிதானமாக, உடலை சீரழித்து முடக்கிப் போடும் வியாதி ஆர்த்ரைடீஸ். உடலில் ஊடுருவி, ஊனத்தை உண்டாக்கும். வலியையும் வேதனையையும் தரும் நோய்.
மூட்டுக்களில் வீக்கம், வலி, விறைத்து போதல், இவைகள் ஆர்த்ரைடீஸின் முக்கிய அறிகுறிகள். ஆர்த்ரைடீஸ் பெரும்பாலும் பெண்களையே மிக அதிகமாக தாக்குகிறது. ஆண்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்களை தாக்குகிறது. உலகில் நாலில் ஒருவர், இந்த மூட்டுவலி, மூட்டுப்பிடிப்புகளால் பாதிக்கப்படுகின்றனர். 50 வயதுக்கு மேல், ஏதாவது ஒரு வகை ஆர்த்ரைடீஸ் வருவது சகஜம்.
ஆர்த்ரைடீஸில் ஏகப்பட்ட வகைகள் உள்ளன. 200 வகை வியாதிகள் ஏதாவது ஒரு ஆர்த்ரைடீஸை உருவாக்கும்.
மூட்டுகள் வலிவடைய
கசகசா 100 கிராம், இசப்கோல் 50 கிராம் இவற்றை பொடித்து, 15 நிமிடம் குறைந்த தீயில் 250 மி.லி. ரோஜா எண்ணெயில் இட்டு காய்ச்சவும். இந்த எண்ணெய்யை தினமும் படுப்பதற்கு முன் மூட்டுக்களில் தடவி, மிருதுவாக மசாஜ் செய்யவும்.
காலையில் மூட்டுக்களை சுடுநீரில் கழுவவும்.

No comments:

Post a Comment