Tuesday, January 15, 2013

ஊட்டியில் சுற்றுலா பயணிகள் வருகை சரிவு


ஊட்டி, : ஊட்டியில் கடும் குளிருடன் பலத்த காற்றும் அவ்வப்போது வீசுகிறது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி வருகின்றன. நீலகிரியில் டிசம்பரில் துவங்க வேண்டிய பனிக் காலம் கடந்த மாதமே துவங்கியது. 2 மாதமாக பகலில் வெயிலும், இரவில் கடும் குளிரும் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் மறைந்து மூடு பனியும் மேகமூட்டமும் நிலவுகிறது. பல நேரங்களில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் பகலில் கடும் குளிருக்கு மக்களும் சுற்றுலா பயணிகளும் ஆளாகி வருகின்றனர்.

மக்கள் காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். சுற்றுலா பயணிகள் குளிரை தாங்க முடியாமல் வந்த வேகத்தில் திரும்பி செல்கின்றனர். இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து வருகிறது. கடும் பனி பொழிவு காரணமாக தேயிலை செடிகள் மற்றும் காய்கறி செடிகள் கருகி வருகின்றன. நேற்று முன்தினம் வீசிய பலத்த காற்றால் புதிய படகு இல்லம் - மான் பூங்கா சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது. மரம் மின் கம்பம் மீது விழுந்ததால் பாபுசா லைன், மஞ்சனகொரை, தீட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. மரம் அகற்றப்பட்டு நிலைமை சீராக்கப்பட்டது. ஊட்டியில் நேற்று அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 8.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.

எப்போது எப்படி?

மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் நீலகிரி, 2268 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஊட்டியில் ஆண்டு முழுவதும் பல்வேறு விதமான தட்பவெட்ப நிலை நிலவும். தென்னிந்தியாவில் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் மலை வாசஸ்தலமாக நீலகிரி உள்ளது. இதமான வெயில் மற்றும் குளுகுளு குளிர்காலங்கள் ஊட்டியின் சிறப்பு அம்சம். ஊட்டியின் இயற்கை அழகை ரசிக்க வேண்டும் என்றால் மார்ச் முதல் ஜூன் மற்றும் நவம்பர் முதல் பிப்ரவரி ஆகிய காலங்களில் செல்ல வேண்டும்.

ஊட்டியில் கோடை காலம் என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரையில்தான். அப்போது அதிகபட்சமாக வெட்பநிலை 25 டிகிரி செல்சியஸ். குறைந்தபட்ச வெட்பநிலை 10 டிகிரி செல்சியஸ். கோடையில் அவ்வப்போது மழை பெய்யும். இதனால் வெட்பநிலை இதமாகவே இருக்கும். ஊட்டியில் ஜூலை முதல் செப்டம்பர் வரையில் மழை காலமாக இருக்கும். இந்த காலத்தில் சராசரியாக 121 செ.மீ. வரையில் மழை இருக்கும். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையில் ஊட்டியில் குளிர் காலம் இருக்கும். இந்த காலத்தில் சராசரியாக அதிகபட்சம் 21 டிகிரி செல்சியஸ் இருக்கும். சராசரியாக குறைந்தபட்ச வெட்பநிலை 5 டிகிரி செல்சியஸாக இருக்கும். பகலில் குளிர் இருக்கும். இரவில் கடும் குளிர் இருக்கும். அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் எப்போதாவது வட-கிழக்கு பருவ மழையின் தாக்கத்தால் மழை பெய்யலாம்.

No comments:

Post a Comment