Tuesday, January 15, 2013

போலி சுற்றுலா வழிகாட்டிகளால் சுற்றுலா பயணிகள் பாதிப்பு


ஊட்டி, : போலி சுற்றுலா வழிகாட்டிகளால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் ஓட்டல் மற்றும் லாட்ஜ் உரிமையாளர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஊட்டிக்கு நாள் தோறும் சுற்றுலா பயணிகள் வந்துச் செல்கின்றனர். இங்கு. வெளிநாடு, வெளி மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளே அதிகளவு வருகின்றனர். . இவர்களில் பெரும்பாலானவர்கள் இங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு செல்ல உள்ளூரில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகளை நாடுகின்றனர். அவர்கள் சம்பந்தப்பட்ட சுற்றுலா பயணிகளை ஊட்டி மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும் அழைத்துச் சென்று சுற்றி காண்பிக்கின்றனர். மேலும் அந்தந்த சுற்றுலா தலங்களின் சிறப்புக்களை சரித்திர குறியீடுகளுடன் எடுத்து கூறுகின்றனர். பின் தங்களுக்குரிய கட்டணத்தை பெற்றுக் கொண்டு விடை பெறுகின்றனர்.

இது போன்று சில சுற்றுலா வழிகாட்டுகள் மட்டுமே சுற்றுலா தலங்களை மட்டும் சுற்றி காண்பிக்கும் தொழிலை முறையாக செய்து வருகின்றனர். சில போலி சுற்றுலா வழிகாட்டிகள் தாங்கள் சுற்றுலா வழிகாட்டிகள் எனக் கூறி சுற்றுலா தலங்களை சுற்றிக் காண்பதற்கு முன்னதாக தாங்கள் லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் அறைகளை போட்டுத் தருகிறோம் என அழைத்துக் கொண்டு குறிப்பிட்ட சில லாட்ஜ்களுக்கு அழைத்து செல்கின்றனர்.
அங்கு சாதாரணமாக ஒரு நாளுக்கு அறை கட்டணம் ரூ.1000 என்றால் இவர்கள் அழைத்து செல்லும் சுற்றுலா பயணிகளிடம் ரூ.1200 முதல் 1500 வரை வசூலிக்கின்றனர். பின், அதிலிருந்து 20 சதவீதம் தொகையை கமிஷனாக பெறுகின்றனர்.

போலி வழிகாட்டிகள், சுற்றுலா பயணிகள் யாரேனும் ஓட்டலுக்குள் நுழையும் போது, அவர்களை அழைத்து செல்வது போல் உள்ளே வரவேற்பு அறைக்கு அவர்களுடன் சென்று இவர்களுக்கு அறை வேண்டும் என ஓட்டல் நிர்வாகிகளிடம் பேசி அறை வாங்கித்தர உதவி செய்வது போல் பாவனை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சுற்றுலா பயணிகள் அறைக்குள் சென்றபின், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகிகளிடம் நாங்கள் தான் இந்த ஓட்டலுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து வந்தோம். எங்களுக்கு கமிஷன் கொடுங்கள் என்ற கூறி கமிஷன் தொகையை பிடிவாதமாக பெற்றுக் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை கட்டுப்படுத்த தவறினால் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் லாட்ஜ் அறைகட்டணம் உயர்வு என ஊட்டிக்கு வர பயப்படும் நிலை ஏற்பட்டு விடும். ஊட்டிக்கு வந்தால் பணம் கரைந்துவிடும் என்று அஞ்சி சுற்றுலா பயணிகள் வருவதை நிறுத்திக் கொண்டால் ஒட்டு மொத்த மாவட்டத்தின் பொருளாதாரமும் பாதித்துவிடும். எனவே இது போன்ற தவறுகளை முன்னதாகவே களைய வேண்டும் என சுற்றுலா பயணிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து நீலகிரி எஸ்.பி., நிஜாமுதீன் கூறுகையில், ‘சுற்றுலா வழிகாட்டிகளால் இது போன்ற ஒரு பிரச்னை இருப்பது தற்போது தான் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரேனும் புகார்கள் அளித்தால் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

No comments:

Post a Comment