Tuesday, January 15, 2013

சரகரின் சரித்திரம்


ஆயுர்வேதத்தின் முதல்வர்கள் சரகரும், சுஸ்ருதாவும், இருவரும் சரித்திர புருஷர்கள். சரகர் ஆயுர்வேதத்தின் பொது வைத்தியர். சுஸ்ருதர் அறுவை சிகிச்சை நிபுணர். முதலில் சரகரின் சரித்திரத்தை பார்ப்போம். சரகர் இருந்த வருடங்கள் கி.பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகள் என்று கருதப்படுகிறது.

அவர் வசித்த இடம் வடமேற்கு இந்தியா, அவருக்கு பிடித்த இடம். இந்த இரண்டு விஷயங்களும் அவரது ‘சம்ஹிதை’யிலிருந்து தெரிகிறது. மற்றபடி சரகரின் வாழ்க்கையை பற்றி அதிகம் தெரியவில்லை. சரகர் ஏன் இவ்வளவு புகழப்படுகிறார் காரணம் அவர் தொகுத்தருளிய சரக சம்ஹிதை என்ற ஆயுர்வேத நூல்.

சரகரின் காலத்திற்கு முன், மருத்துவ அறிவு ஒரு கிராமிய கலையாக நாட்டுப்பாடல்களில் கர்ணபரம்பரையாக சொல்லப்பட்டு வந்தது. பிறகு ‘அக்னிவேஷ தந்திரா’ என்ற மூல நூல் சரகருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தது. அக்னிவேஷ தந்திரா அதர்வண வேதத்திலிருந்து தொகுக்கப்பட்டது. இதன் காலம் கி.மு. 2500 – 3000 இருக்கலாம். கிட்டத்தட்ட கி.மு.1508 ல் இரண்டு ஆயுர்வேத தத்துவங்கள் உருவாகின. ஒன்று தன்வந்திரியின் அறுவை சிகிச்சை முறைகள். மற்றொன்று ஆத்ரேயரின் மருத்துவ முறை. அக்னிவேச முனிவரின் ‘அக்னிவேஷ சம்ஹிதை’ வைத்திய முறைபாட்டை தொடர்ந்தவர் ஆத்ரேயர்.

அக்னிவேச முனிவர் சொல்லிக்கொடுத்த மருத்துவ கோட்பாடுகளை அவரது சீடரான ஆத்ரேயர், 120 அத்தியாயங்களாக தொகுத்தார். இதை ஆதாரமாக கொண்டு, இன்னும் விரிவாக, தெளிவாக தொகுத்தெழுதியவர் சரகர். ஆனால் அவரது நூலில் 3ல் ஒரு பங்கு நமக்கு கிடைக்கவில்லை. இந்த குறைபாட்டை 4ம் நூற்றாண்டில் சரிசெய்தார் ‘த்ருதபாலா’. இவர் பாடுபட்டு பல இடங்களிலிருந்து செய்திகளை சேகரித்து, சரகசம்ஹிதையின் 17 அத்தியாயங்களை பூர்த்தி செய்தார். முழுமை பெற்ற சரக சம்ஹிதை ஒரு அற்புதமான மருத்துவ நூல்.

சரகர் சம்ஹிதை சமஸ்கிருத மொழியில் ‘ஸ்லோகங்கள்’ வடிவில் எழுதப்பட்டது. எட்டு பிரிவுகளும் 120 அத்தியாயங்களும் உடையது. மொத்தம் 8400 ஸ்லோகங்களை கொண்டது.

சரகர் தனது குருகுலத்தை நடத்தி வந்த விதம், மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் திறமை அவரது சம்ஹிதையிலிருந்து புரிகிறது. அவர் பட்டிமன்றம், விவாதங்கள் தர்க்கங்கள் மூலம் மருத்துவத்தை சொல்லி கொடுத்தார். Group Discussions எனப்படும் இன்றைய முறையை சரகர் பின்பற்றியிருக்கிறார். நமது பட்டிமன்ற புகழ், ‘சாலமன் பாப்பையா’ அவர்களுக்கு முன்னோடி சரகர்.

சரகர் கண்டிப்பான ஆனால் அறிவு மிகுந்த ஆசிரியர். அவர் மருத்துவர்களை பற்றி சொன்னது.

“அறிவில்லா வைத்தியரிடம் சிகிச்சை பெறுவதை விட இறப்பது மேல்”
“நோயாளிகளை குணப்படுத்த நால்வர் சிறப்பாக அமைய வேண்டும். நால்வர்-மருத்துவர், மருந்துகள், உதவியாளர், நோயாளி”

சரகர் தனது தொகுப்பில் புத்தமத கோட்பாடுகளையும் விடாமல் சேர்த்திருக்கிறார். புத்த மதம் வேதங்களை மறுக்கிறது. இருந்தும் அந்த மதத்தின் மருத்துவ நல்ல சமாச்சாரங்களை சரகர் குறிப்பிடுகிறார்.

‘சரக ஸம்ஹிதை’தையில் உள்ளவை வேறு சாஸ்திரங்களில் இருக்கலாம். ஆனால் ஸம்ஹிதையில் இல்லாதவை வேறெங்கும் இல்லை.

சரகர் கொடுத்த கல்வி பயிற்சி 7 வருடங்களுக்கு எட்டுவகை மருத்துவ முறைகள் கற்றுத்தரப்படும். அதன்பின் Hippocrates ன் சத்ய பிரமாணம் போலவே (இந்த யுக டாக்டர்கள் எடுக்கும் சத்ய பிரமாணம்). சரகரும் ஒரு சத்திய பிரமாணத்தை எழுதியிருக்கிறார்.

சரகர் இரக்க சுபாவம் உடையவர். நோயாளிகளின் வலி வேதனைகளை உடனடி சரி செய்ய வேண்டும் என்று நினைப்பவர். பெண்களின் பிரசவத்துக்கு பின் கவனிக்க வேண்டியவை தவிர மூல வியாதியை பற்றியும் எழுதியவை அவரது திறமையும், அறிவும் பளிச்சிடுகின்றன. குழந்தை பராமரிப்பு பற்றி சரகர் எழுதியிருப்பதிலிருந்து அவரது நடைமுறைச் செயல்பாட்டுக்கு தகுதியான நிலை, கருணை, இவற்றை புரிந்து கொள்ளலாம்.

சரகர் மருத்துவர்கள் ஈவிரக்கத்தோடு செயல்பட வேண்டுமென்று சொன்னாலும், வைத்தியத்திற்கு பணம் வாங்குவதை தடுக்கவில்லை. ஏழைகளுக்கும், பொருத்தமான சிகிச்சை முறைகளை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சரகஸம்ஹிதை திபேத்திய பாஷையிலும், அரேபிய மொழிகளில் மொழி பெயர்க்கபட்டிருக்கிறது. கி.மு. 323 ஆண்டில் நாகார்ஜூனா (புகழ் பெற்ற புத்தபிக்கும், ஆயுர்வேத நிபுணர்) ஸ§ஸ்ருத சம்ஹிதைக்கு உரை எழுதியவர். கி.பி.800ஆம் ஆண்டில் அரேபிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இஸ்லாமிய வைத்தியர்களான அவிசென்னா மற்றும் ரசி செராபியன், ஆயுர்வேதத்தை பின்பற்றினார்கள். இந்த நூற்றாண்டில் ஜப்பானில் ஆயுர்வேதம் Digitise செய்யப்பட்டிருக்கிறது. ஐரோப்பியாவிலும் படிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment