ஆண், பெண் உறவுகள், ஆணாதிக்கம் பெண்ணின் பெருமை, தாய்மையின் சிறப்பு இவற்றை பற்றி எழுதாத விவரங்கள், கருத்துக்கள் இல்லை. பெரும்பாலும் சரித்திரத்தில், இலக்கியங்களில், பெண்கள் மென்மையானவர்கள், இளகிய மனம் உடையவர்கள் என்று கூறப்படுகின்றனர். அதே சமயம் பெண்களின் மனதின் ஆழத்தை அறிய முடியாது. மனவலிமை உடையவர்கள் பெண்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றன.
பெண்களும், ஆண்களும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் வாழ்க இந்த வித்தியாசம் என்கிறது ஒரு ஃப்ரெஞ்சு பழமொழி. பெண்களை ஆண்கள், மலரே, கொடியே, என்று வர்ணித்தாலும், அடிப்படையில் பாலியல் உணர்வு தான், பெண்களை போக பொருளாக கருதப்பட்டு வந்ததின் காரணம். பெண்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்கவே பெண்கள் கற்புடன் வாழ வேண்டும் என்று ஆண்கள் வலியுறுத்துகிறார்கள் என்பது தற்போதைய கருத்து. இதற்கு சில இலக்கிய சான்றுகள்.
நல்ல மனைவியின் இலட்சணம் என்று கூறும் நீதி வெண்பாவிலிருந்து
அன்னை தயையும் அடியாள் பணியும்மலர்ப்
பெண்ணின் அழகும் புவிப்பொறையும் – வண்ணமுலை
வேச துயிலும் விறல்மந் திரிமதியும்
பேசில் இவைஉடையாள் பெண்.
ஆராய்ந்து சொன்னால் ஒரு பெண் மனைவி தன் கணவனிடத்தே அன்னை போன்ற கருணை உடையவளாய் இருக்க வேண்டும் வேலைக்காரி போல் பணிந்து சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும் ஸ்ரீதேவி போன்ற முகவிலாசம் உள்ளவளாக இருக்க வேண்டும் பூமி தேவியைப் போன்ற பொறுமை உள்ளவளாக இருக்க வேண்டும் கட்டிலில் வேசி போல வசியம் செய்ய வேண்டும் சிறந்த மந்திரி போலத் துன்ப காலங்களில் சிறந்த யோசனைகள் சொல்ல வேண்டும்.
பெண்கள் அதிகம் பேசக் கூடாது என்கிறது நீதி வெண்பா
பெண்ணொருத்தி பேசில் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் விண்மீன்கள்- பெண்மூவர்
பேசில் அலைசுவறும் பேதையே பெண்பலர்தாம்
பேசில்உலகு என்னாமோ பின்
வரையறையின்றி ஒரு பெண் உரத்துப் பேசினால் பெரிய இந்த பூமி அதிரும் இரண்டுபேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் வானத்து நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் மூன்று பேர் சேர்ந்து அவ்வாறு பேசினால் கடலலைகள் வற்றிவிடும் பல பெண்கள் சேர்ந்து பேசினால் உலகம் என்னாகுமோ
சமயவாதிகளும் தங்களது சமயப்போதனைகள் மூலம் பெண்களைப் பிற்பட்டவர்களாகவும், வலிவற்றவர்களாகவும் உருவகித்துக் காட்டினர். தாங்கள் தாழ்ந்தவர்கள் என்ற உளப்பாங்கினைப் பெண்களிடையே தோற்றுவித்தனர். ஆணாதிக்கத்தை நிலை நிறுத்தக் கணவனைத் தலைவன் எனவும் கடவுள் எனவும் மிகைப்படுத்திக் கூறினர்.
கணவனைத் தலைவன் என்று கூறியவர்கள் மனைவியைத் தாதி என்றும், ஊழியக்காரி என்றும் வருணித்து என்றென்றும் தங்களது ஆணாதிக்கம் நிலைபெற வேண்டுமென்ற கருத்தில் தான் என்று பல சமூகவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
பெண்களின் உடல் வாகு
பெண்களின் உடல் அவர்களின் பல வேடங்களுக்கேற்ப அமைக்கபட்டது. தாயாக, தாதியாக, சகோதரியாக, மனைவியாக, தந்தை; தாய்க்கு பெண் மகவாக, இல்லத்தரசியாக, வேலை பார்க்கும் சம்பாதிக்கும் பெண்ணாக இருக்க வேண்டியதால் அவர்களின் உடலமைப்பு சிக்கலானது. மாதவிடாய் தோன்றியபோதும், அது மறையும் போதும் ஏற்படும் உடல் மற்றும் மன மாற்றங்களும் அவர்களை வெகுவாக பாதிக்கும். இருந்தாலும் “பெண்கள் இயல்பாகவே உடல் திடம் மிக்கவர்கள். சோகை, ஒவ்வாமை, மிகுந்த எடை, மாதவிடாய்த் தொல்லைகள் போன்ற சில நோய்களைத் தவிர்த்துவிட்டால் வேறு எந்த நோயுடன் 40 வயதிற்கு கீழான பெண்ணும் எனது மருத்துவமனைக்கு வருவதில்லை என்கிறார் அனுபவமிக்க மருத்துவர் ஒருவர். அப்படியே நோய்வாய்ப்பட்டாலும் ஆண்களை விட விரைந்து நலமடைந்து விடுகின்றனர். நீரிழிவு ஒன்றைத் தவிர பிற எல்லா நோய்களிலிருந்தும் அவர்கள் எளிதாக நிவாரணம் பெற்றுவிடுகின்றனர்.
காசநோய், சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் இதயக் கோளாறு போன்றவற்றால் பெண்களைவிட ஆண்களே பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதயக் கோளாறினால் இறப்பவர்களில் 80 விழுக்காட்டினர் ஆண்கள். இதே போல் உயர் இரத்த அழுத்தத்தினாலும் பெண்கள் பெரும் பாதிப்பு அடைவதில்லை.
சின்னச்சின்ன வலிகள், நோய்கள் போன்றவற்றைக்கூட ஆண்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. தாங்க முடியாமல் துடித்துத் துன்புறுவர். ஆனால் பெண்களோ பல நோய்களையும் உடல் உபாதைகளையும் பொறுத்துக் கொள்கின்றனர் அல்லது புறத்தே ஒதுக்கி விடுகின்றனர். இயல்பாகவே ஆண்களைவிடப் பெண்களின் வாழ்நாள் அதிகம். அதிலும் பரபரப்புக்கும் பதட்டத்திற்கும், மன இறுக்கத்திற்கும் ஆட்படும் போது ஆணின் வாழ்நாள் மேலும் குறைந்து போகிறது.
பெண்களின் மனதிடம்
இயல்பாகவே பெண்கள் உறுதியான உளப்பாங்கு உடையவர்களாக உள்ளனர். திருமணம் என்னும் கல்லூரியில் ஆண்கள் தங்கள் இளங்கலைப்பட்டத்தை இழக்கின்றனர். பெண்கள் முதுகலைப் பட்டம் ஏற்கின்றனர் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். இது முற்றிலும் உண்மை. அச்சமும் நாணமும் நிறைந்த கன்னியாக இருந்த பெண் கல்யாணமான பின்னர் உடற்திடமும் மனத்திடமும் கொண்ட குடும்பத் தலைவியாகிறாள்.
ஒரு பெண் தனது பிறந்த வீட்டில் 20-25 வருடங்கள் வாழ்ந்த பின் மணமானதும் கணவன் வீட்டுக்கு செல்கிறாள். இந்த பெரிய மாற்றத்தை அவள் எப்படி சமாளிக்கிறாள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையை அவள் ஏற்றுக் கொள்கிறாள். சிறுவயதிலிருந்தே இதற்கு அவள் தயாராக்கப்படுகிறாள். ஒரு குருவி, எப்படி தனக்கென்று ஒரு கூட்டை அமைத்துக் கொள்கிறது யார் சொல்லிக் கொடுத்தார்கள் அதே போல பெண் தனக்கென்று ஓரு தனி இல்லம் குடித்தனம் அமைக்க விழைவது அவள் உள்ளத்தில் ஊறிய, தொடக்க காலத்திலிருந்தே வரும் உணர்வு உந்துதல். தன் தாயைப் போல், மற்றொரு தாயாக விரும்புகிறாள்.
பெண்கள் தங்களின் வயதொத்த ஆண்களை விட, மனதளவிலும், உடலளவிலும் விரைந்து வளர்ச்சியடைகின்றனர். ஆண்களைவிட பொறுப்புணர்வும், முதிர்ச்சியும் அதிகம் உள்ளவர்கள்.
ஆயுர்வேதமும் பெண்களும்
சரகர் தனது சம்ஹிதையில் ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பெண்களுக்கு தரவில்லையென்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. ஆனால் சரகர் மாதவிடாய், தாய்மை அடைதல், தாய்ப்பால் கொடுக்கும் காலகட்டம், மாதவிடாய் மறையும் காலம் இவற்றைப்பற்றி விரிவாக எழுதியுள்ளார். பெண்களின் பிறவி உறுப்புகளின் பாதிப்பைப்பற்றியும் விவரித்துள்ளார். இதனால், அவர் ஒரு வைத்தியராக பெண்கள் மேல் காட்டிய அக்கறை தெரிகிறது.
மெனோபாஸ் எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலத்தின் பிரச்சனைகளில், மற்ற வைத்திய முறைகளை விட ஆயுர்வேதம் சிறப்பான சிகிச்சைகளை அளிக்க வல்லது. பாதுகாப்பான மூலிகை வைத்தியம் மட்டுமின்றி ஆயுர்வேதம் யோகாவையும் பயன்படுத்துகிறது. பெண்களை, வாத, கப, பித்த பிரிவுகளாக பிரித்து தகுந்த சிகிச்சையை ஆயுர்வேதம் மேற்கொள்கிறது. பெண்கள் கர்ப்பமடைவதிலிருந்து குழந்தை பிறந்து ஆரோக்கியத்துடன் வளர, ஆயுர்வேதத்தில் உயர்ந்த சிகிச்சை முறைகள், மருந்துகள் உள்ளன.
No comments:
Post a Comment