யோகாவும் அதை சார்ந்த ஆசனங்களும் நம் நாட்டில் பிறந்தவை. அவற்றின் அருமை பெருமைகள் தற்போது உலகெங்கும் பரவியுள்ளன. யோகா உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் மருந்தாகும். நோய்களுக்கு பிராணாயமம், யோகாசனங்கள், தியானம் இவைகளும், டாக்டர் கொடுக்கும் மருந்துகளும் இணைந்து செயல்பட்டால் நிவாரணம் நிச்சயம்.
வாத நோய்களை குறைக்க பல யோகாசனங்கள் இருக்கின்றன. யோகாசனங்களை ஆரம்பிக்கும் முன் சில விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
யோகாவை ஆரம்பிக்கும் முன் – முதலில் ஒரு யோகாசன குரு தேவை. ஆசனங்களின் அடிப்படை தத்துவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த காலத்தில் வீடியோ மூலமாக அல்லது இன்டர்நெட் மூலமாக அறிந்து கொண்டு ஆசனங்கள் செய்யப்படுகின்றன. ஒரு தடவையாவது குருவிடமிருந்து கற்றுக் கொள்வது நல்லது.
நேரமும் இடமும் – காலை வேளை ஆசனங்கள் செய்ய ஏற்ற சமயமாகும். வானிலை நன்றாக குளிர்ச்சியாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் மனமும் புத்துணர்ச்சியுடன் இருக்கும். சூரியன் உதிக்கும் முன் ஆசனங்களை ஆரம்பிப்பது நல்லது. காலை வேளைகளில் ஆசனங்களை செய்யமுடியாவிட்டால், சாயங்காலமும் செய்யலாம். செய்யும் இடம் சுத்தமாக காற்றோட்டமான இடையூறு ஏற்படாத இடமாக இருக்க வேண்டும். வெறுந்தரையில் செய்ய வேண்டாம். ஒரு விரிப்பை தரையில் விரித்து அதன் மேல் ஆசனங்களை செய்யவும்.
வயிறு காலியாக இருக்க வேண்டும். உணவு உண்ட பின் 3-4 மணி நேரம் விட வேண்டும். எனவே காலை நேரம் செய்தால் நல்லது. மலஜலம் கழித்த பின் ஆரம்பிக்கவும்.
யோகாசனங்களுக்கு 15 நிமிடம் முன்னாலும், பின்னாலும் தண்ணீர் குடிக்கவும்.
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். முடிந்தால் குளித்து விட்டு தொடங்கவும். தொளதொளவென்று இருக்கும் ஆடைகளை அணியவும்.
உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் பெண்கள் மாதவிடாய் காலங்களிலிருந்தாலும் ஆசனங்கள் செய்ய வேண்டாம். வெறும் தலைவலி இருந்தால் கூட ஆசனங்கள் செய்ய வேண்டாம்.
ஆசனங்கள் செய்யும் போது
எளிய பயிற்சிகளுடன் தொடங்கவும். உடலின் இறுக்கம் குறைய வாம் அப் எனப்படும் பயிற்சிகளை முதலில் செய்யவும்.
உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, ஹெர்னியா, ஸியாடிகா இருந்தால் நல்ல யோக நிபுணர் வைத்தியர் அறிவுரைகளின் பேரில் ஆசனங்களை செய்ய முற்படுங்கள்.
உடலை வருத்திக் கொண்டு பிடிவாதமாக ஆசனங்களை செய்யாதீர்கள். உங்கள் வயது, உங்கள் உடலின் சக்திக்கேற்ப செய்யுங்கள்.
யோகாசனங்களை செய்யும் போது எப்போது மூச்சை அடக்குவது, எப்போது மூச்சை விடுவது என்பது மிக மிக முக்கியம். இதை தெரிந்து கொள்வது மிக அவசியம்.
எவ்வளவு நேரம் ஆசனங்கள் செய்ய வேண்டுமென்பது அவரவர் தேவைகளை பொருத்தது. சராசரியாக 1 மணி நேரம் செய்வது போதுமானது.
ஆசனங்கள் முடிந்த பின் தியானம் செய்யவும்.
யோகாசனத்தின் நன்மைகள்
தசைகள் வலுவடையும்.
முதுகுத் தண்டு, எலும்பு மூட்டுகள் சரிவர இயங்கும்.
உடலுக்கு சக்தி கூடும். நரம்பு மண்டலம் இதயம், நுரையீரல் போன்ற எல்லா உடல் அவயங்களும் சரிவர இயங்கும்.
மனநிலை அமைதியடையும்.
பல வியாதிகள் பீடிக்கப்பட்டவர்களுக்கு என்று குறிப்பாக ஆசனங்கள் உள்ளன. இவற்றால் மருந்துடன் சேர்ந்து பலனளிக்கும்.
ஆர்த்தரைடீஸ் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான ஆசனங்களை பார்ப்போம்
கும்மராசனம் (பூனை)
மண்டியிட்டு கால் மூட்டுக்களையும், உள்ளங் கைகளையும் தரையில் ஊன்றி, மண்டியிட்டு தவழும் நிலையில் பூனை போல் உடலை நிறுத்தவும்.
உள்ளங்கைகள் தரையில் படும் படி தோளுக்கு நேர் கீழாக இருக்கும் படி ஊன்றி கொண்டிருக்க வேண்டும். இரண்டு கைகளின் நடுவே உள்ள இடைவெளி உங்கள் இரு தோள்களின் நடுவே உள்ளே இடைவெளி அகலம் அளவு இருக்க வேண்டும்.
முழங்கால்கள் இடுப்புக்கு கீழே இருக்க வேண்டும். இடுப்பு அகலம் அளவு இரு முடிக்கால்களின் நடுவே இடைவெளி இருக்க வேண்டும்.
வெளிமூச்சு விட்டு, முதுகெலும்பை முதுகை மேல் நோக்கி வளைக்கவும். இதே நிலை கோபமுற்ற பூனை முதுகை நிமிர்த்தி சிலிர்த்துக் கொள்வது போல் இருக்க வேண்டும். வயிற்றை உள்ளிழுத்து கொண்டு முகத்தாடையை கீழ்நோக்கி தாழ்த்திக் கொள்ளவும்.
மூச்சை உள்வாங்கவும். உள்ளிழுத்த வயிற்று தசைகளை விடுவித்து, கீழ் முதுகை குழி விழுவது போது, கீழ்நோக்கி வளைக்கவும். தலையை தூக்கி, மேல் நோக்கி பார்க்கவும். கைகள் நேராக இருக்கட்டும்.
இந்த நிலையை, மூச்சு உள்விடுவது, பிறகு வெளிவிடுவது திரும்பி சில தடவை செய்யவும்.
No comments:
Post a Comment