ஆயுர்வேதத்தின் படி மூட்டுவலிகளின் முதல் ஆரம்பம் அஜீரணத்துடன் இதனால் தான் மூட்டு வலியை ‘ஆமவாதம்’ என்கிறது. ஆமா என்றால் ஜீரணிக்கப்படாத உணவு. இந்த அஜீரணம் ஏற்பட காரணம், உடல் உழைப்பில்லாமல், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வது.
‘ஆமா’ நச்சை நீக்க
ஆமவாதம் பாதித்த மூட்டை சுத்திகரிக்க, நச்சை குறைக்கும் மூலிகைகள் செறிந்த நீரை பருகலாம். 2 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைத்து, ஒரு ஃப்ளாஸ்கில் ஊற்றி வைக்கவும். இத்துடன்
1. இரண்டு மெல்லிய இஞ்சி துண்டுகள்
2. கால் தேக்கரண்டி ஜீரகம்
3. கால் தேக்கரண்டி பெருஞ்சீரகம்
4. இரண்டு மிளகு மற்றும்
5. இரண்டு புதினா இலைகள்
இவற்றை ஃப்ளாஸ்கின் தண்ணீரில் அமிழ்த்தி ஊறவைக்கவும். இதை நாள்
முழுவதும் குடித்து வர, உடல் நச்சுப் பொருட்கள் நீங்கும்.
‘ஆமா’ வை போக்க, சாம்பார் / மசாலா பொடி போல, மூலிகை பொடி தயார் செய்து கொள்ளவும். இதற்கு தேவையானவை
1. ஒரு பாகம் கருமிளகு, ஒரு பாகம் ஓமம்
2. இரு பாகம் வெந்தயம், மஞ்சள் (தனித்தனியான அளவில்)
3. 6 பாகம் சீரகம், பெருஞ்சீரகம் – இவற்றை பொடித்து பயன்படுத்தலாம்.
ஆயுர்வேதத்தின் படி மூட்டுக்களில் திரவம் இருப்பதால் அவை ‘கபத்தின்’ ஸ்தானங்கள். ஜீரணிக்கப்படாத கழிவுகள், “வாயுவால்” மூட்டுகளில் சேர்க்கப்படுகின்றன. அதிகமாக சேர்ந்து, வீக்கத்தையும் வலியையும் உண்டாக்கும். வாயு அதிகமானால் பாதிப்புகள் ஏற்படும். வாயு அதிகமாக காரணங்கள் அதீத உடற்பயிற்சி, பட்டினி இருப்பது, விபத்து, எலும்பு முறிவு, ராத்திரி தூங்காமல் அதிக நேரம் விழித்திருப்பது, இயற்கை உந்துதல்களை அடக்குவது, கவலை, குளிரின் பாதிப்பு.
ஆயுர்வேத ஆசான்களில் ஒருவரான வாகபட்டர் எலும்புகளை பற்றி விவரமாக குறிப்பிட்டிருக்கிறார். எலும்புகள் மேதோ தாதுவால் போஷாக்கை பெருகின்றன. மேதோதாதுக்கள் கொழுப்புப் பொருள்கள். வாயு / வாதக் கோளாறுகளால் எலும்பு நோய்கள் உண்டாகின்றன. வாதம் என்றாலும் வாய்வு என்றாலும் ஒன்று தான். வாகபட்டர் எலும்புகளை 5 பிரிவுகளாக பிரித்து மொத்த எலும்புகளை 163 ஆக கணித்தார். மூட்டுகளில் கபத்தின் எண்ணைப் பசை குறைத்து, வாத வறட்சி ஏற்படும் போது மூட்டு தேய்மானம் ஏற்படும். வாத தோஷம் அதிகமானால் எலும்புகள் சுலபமாக உடையும் தன்மையை அடைகின்றன.
குளிர்காலத்தில் வாயு அதிகரிக்கும். அதீத கவலை இயற்கை வேகங்களை தடை செய்தல், இரவில் நெடுநேரம் கண் விழித்திருப்பது, குளிர்காற்று இவையெல்லாமும் வாயுவை அதிகரிக்கும். இந்த காரணங்களால் ஏற்படும் வாத வாய்வு தோஷம் ஆஸ்டியோ ஆர்த்தரைடீஸ் போன்ற மூட்டு நோய்களை உண்டாக்குகின்றன. வாயுவுடன், ஆமா என்னும் ஜீரணிக்காத கழிவுப் பொருளும் சேர்ந்து விட்டால், அது ‘ஆம வாதமாக’ உருவெடுக்கிறது. ‘கவுட்டும்’ ஆமவாதத்துடன் சேர்ந்தது தான் இவை மூன்றும் முக்கியமாக வாயு தோஷத்தால் ஏற்படுபவை. இதர தோஷங்களும் (கபம், பித்தம்) தனியாகவோ, வாயுவுடன் சேர்ந்தோ, வாதநோய்களுடன் சம்மந்தப்படுகின்றன.
No comments:
Post a Comment