Wednesday, January 9, 2013

அரியலூர் சுற்றுலா தளங்கள்

கங்கைகொண்ட சோழபுரம் : தஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்டது இந்த கங்கை கொண்ட சோழபுரம் கோயில். புகழ்பெற்ற சோழ மன்னர் இராஜேந்திரச் சோழன், தனது வடநாட்டு வெற்றியின் நினைவாகக் கட்டியது. இங்குள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் சோழ அரசர் முதலாம் இராஜேந்திரர்.

இக்கோயிலில் தஞ்சை பெரிய கோயிலை போன்று பெரிய நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர், சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர் இராஜேந்திரருக்கு பார்வதி பரமேஸ்வரரே முடிசூட்டும் அரிய சிற்பங்கள் உட்பட பல அழகுமிகு சிற்பங்கள் நிறைந்துள்ளன. சோழர்களின் பழமையான சாதனைகளில், பிரமாண்டங்களில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தனிப்பெருமை உண்டு.

தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது. ஆனால் கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன.

மெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இக்கோயில் கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். இது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

ஏலாக்குறிச்சி - அடைக்கலமாதா கோயில்

'தேம்பாவணி' எழுதிய வீரமாமுனிவரால் கட்டப்பட்ட தேவாலயம். ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயர் கொண்ட இந்தக் கத்தோலிக்க திருச்சபை பாதிரியார், 1711 இல் ஏலாக்குறிச்சியில் இதை உருவாக்கினார். இங்குள்ள அடைக்கலமாதா சொரூபம் லண்டன் மாநகரில் இருந்து கொண்டு வரப்பட்டது. பெரம்பலூரில் இருந்து 65 கி.மீ. திருச்சியில் இருந்து 80 கி.மீ. சென்னையில் இருந்து 375 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது ஏலாக்குறிச்சி. கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக அரசு இந்தத் தெய்வீக சிறப்பு பெற்ற தேவாலயத்தைச் சுற்றுலாத் தலமாக அறிவித்தது. இந்த மாதா கோயிலுக்கு சோழ மன்னன் நிலக்கொடை அளித்ததை அறிவிக்கும் கல்வெட்டு சாசனம் ஏலாக்குறிச்சியின் மற்றுமொரு சிறப்பு. தொலைபேசி - 621715.

ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். ஜெயங்கொண்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மற்றும் விருத்தாச்சலம் ஆகியவை ஜெயங்கொண்டத்திக்கு அருகில் உள்ள இரு முக்கிய ரயில் நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, மற்றும் தெற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது.

ஜெயங்கொண்டத்தின் மாவட்ட ஆட்சியர் - அனு ஜார்ஜ், நகராட்சிதலைவர் - மீனாள், மக்கள் தொகை - 31,268 (2001).

மாளிகை மேடு

இந்த மாளிகை மேடு கங்கை கொண்ட சோழபுரத்திற்கு அருகில் உள்ளது. தொல்லியம் துறையின் அகழ்வாய்வுகள் முதலாம் இராஜேந்திர சோழனின் பெருமையைப் பறை சாற்றுகின்றன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் தொல்லியல் துறை இந்த இடத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மாமன்னர்கள் கால்பதித்த மாளிகை மேட்டிலும் நம் கால் பதிய வேண்டாமா?

காரைவெட்டி பறவைகள் சரணாலயம்

தஞ்சாவூருக்கு வடக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ளது காரைவெட்டி பறவைகள் சரணாலயம். இதன் மொத்தப் பரப்பு 454 ஹெக்டர். காலிமர் பறவைகள் சரணாலயத்துக்கு அடுத்து இந்தச் சரணாலயம்தான் பெரும்பாலான நீர்ப்பறவைகளைக் கவரக் கூடியது என்ற புகழுக்குரியது. ஒவ்வொரு நவம்பர் மாதமும் பறவைகள் இங்கு வருகை தரும். அந்தக் காலங்களில் பறவைகள் நீரில் வண்ண ஓவியங்களாகத் தெரியும். நீர்வண்ண ஓவியங்கள்!

திருமானூர்

திருமான் ஊர் திருமானூர். ஒரு கலைமானுடன் நடராசர் நாட்டியம் ஆடியதாக உள்ளூரில் புராணக் கதை ஒன்றுள்ளது. அதனால் இந்தப் பெயர் வந்ததாக வரலாறு. இராஜராஜ சோழன் பெரம்பலூரிலிருந்து தஞ்சைக்குச் செல்லும் வழியில் 20 அடி உயரம் உள்ள ஒரு சிலையைவிட்டுச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. வருடத்தில் சில நாட்கள் சூரியக் கதிர்கள் கோயிலின் கர்ப்பக் கிரகத்தின் உள்ளே விழும். சோழர்கால வரலாற்றின் காலச் சுவடுகள் பதிந்த ஊர் இது. ஒருமுறை பார்த்தால்தான் என்ன குறைந்துவிடப் போகிறது.

திருமழப்பாடி

ஊருக்கொரு புராணக் கதையோ, வாய்மொழிக் கதையோ இருக்கிறது. அப்படியொரு கதை இந்த ஊருக்கும் உண்டு. இங்கு பிரபலமான புராணக்கதை ஒன்று உலவுகிறது. தாளவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் மார்க்கண்டேய முனிவருக்காக மற்றோரு பிரபஞ்ச நடனத்தை வைகாசி மாதம் பௌர்ணமி அன்று அருளுவதாக நடராசர் வாக்கு தந்தாராம். ஏனெனில் சிதம்பரத்தில் நடராசர் ஆடிய ஆதி தாண்டவத்தை காணமுடியவில்லையாம். எனவே இந்த ஊர் திரு-மழ-பாடி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் திருக்குளத்தில் குளித்தால் தொழுநோய் தீரும். பிள்ளை பாக்கியம் கிட்டும் என்று மக்கள் நம்புகிறார்கள்.

காமரசவல்லி

தஞ்சை மாவட்டத்தைப் போலவே சோழர் காலத்து பிரமாண்ட எழில் நிறைந்த கோயில்களைக் கொண்டுள்ளது அரியலூர் . இராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயில் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த ஏராளமான ஆதாரங்கள் இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்டன. இங்கு அப்பர் சுவாமிகள் மேளத்துடன் சாக்கைய கூத்து ஆடிய நிலையில் காணப்படுகிறார்.

கள்ளன் குறிச்சி கோயில்

இவ்வூர் ஒரு சிறு கிராமம். ஆனால் பல மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கும் பரிச்சயமான கிராமம். இங்குதான் கலியுக வரதராஜப் பெருமாள் கோயில் இருக்கிறது. அரியலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் கள்ளன் குறிச்சி உள்ளது.

மேலப்பழுவூர்

தமிழ்த் துறவிகளின் சரணாலயமாகத் திகழ்ந்துள்ள ஊர் இது. அரியலூர் - திருச்சி சாலையில் அமைந்திருக்கிறது. மேலப்பழுவூருக்கு வரலாற்றில் முக்கிய இடமுண்டு. இந்தப் பகுதியில் தலைவராக ஆட்சி புரிந்துள்ள பழுவேட்டரையரின் தலைமையகமாக விளங்கியுள்ளது. இங்குள்ள குடைவரைக் கோயிலான விஷ்ணு கோயில் மனத்தைக் கவரக் கூடியது. இக்கோயிலில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளியன்று பூஜைகள் நடக்கும்

No comments:

Post a Comment