Wednesday, January 9, 2013

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்


வரலாற்று புகழ்பெற்ற நகரம். தமிழகத்தில் நடந்த வரலாற்றுப் போர்களில் கிருஷ்ணகிரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதற்கான வாழும் ஆவணமாகக் கனத்த மதில் சுவர்களுடன் ஒரு பழமையான கோட்டை இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இதன் பெயர் சையத் பாட்சா கோட்டை. இக்கோட்டையும் அருகேயுள்ள அணைக்கட்டும் கண்டு ரசிக்க அற்புதமான சுற்றுலாத் தலங்கள்.கிருஷ்ணகிரி 2004 ஆம் ஆண்டு தருமபுரியிலிருந்து பிரிந்த மாவட்டம்.

ஓசூர் என்றால் புதிய நகர் என்று பொருள். இந்நகரில் பெருங்கோட்டை ஒன்றுள்ளது. இதன் எல்லையில்தான் சக்தி வாய்ந்த மாரியம்மன் கோயில் உள்ளது. ஓசூர் மக்களின் வணக்கத்திற்குரிய இடம். மாவீரன் திப்பு சுல்தான்-கேப்டன் ஹாமில்டன் மற்றும் இரண்டு கைதிகளை கொண்டு கோட்டையைப் பண்படுத்தினார். கோட்டையைச் சுற்றிலும் ஆழமும் அகலமுமான அகழி அமைக்கபட்டுள்ளது. நீங்கள் வரலாற்றின் பக்கங்களில் நடக்க வேண்டுமென்றால் ஒருமுறை ஓசூருக்கு போய் வாருங்கள். கோட்டையில் உலவும் போது உங்களுக்கு அந்தப் பழங்காலம் ஞாபகத்தில் வந்து போகும்.

சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில்

மலை மீது அமைந்துள்ள சந்திரசூடேஸ்வரர் கோயில் மிகப் பிரபலமானது. வார இறுதியில் மக்கள் கூடும் திருக்கோயில். மாலை நேரத்தில் மலைமேல் வீசும் தென்றலை அனுபவிக்கும் சுகம் அலாதியானது.

கிருஷ்ணகிரி அணைக்கட்டு

விவசாயிகளுக்குப் பரிவு காட்டும் தாயாக இருக்கின்ற அணைக்கட்டுகள், தருமபுரிக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையே அமைந்துள்ள இந்த அணைக்கட்டால் ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதன் நீர்பரப்பும் இயற்கைசூழலும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சி தரும் அனுபவம். இங்கு ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அலை மோதும்.
தளி

'குட்டி இங்கிலாந்து' எனப் பெயர் பெற்ற ஏராளமான குன்றுகள் நிறைந்த பகுதி. இங்கு ஆண்டு முழுவதும் குளிர்ச்சிக்கு குறைவில்லை. தளி தாலுக்காவின் தலைநகர் தேன்கனிக் கோட்டை. பாளையர்களால் கட்டப்பட்டது. ஹைதர் அலி மற்றும் அவரது மைந்தன் மாவீரன் திப்புசுல்தான் ஆகியோர் ஆங்கிலேயருடன் புரிந்த போரில் கோட்டை சிதிலமாகிவிட்டது.

இராஜாஜி நினைவகம்

மூதறிஞர் இராஜாஜி பிறந்த இல்லம் தொரப்பள்ளியில் நினைவகமாக தமிழக அரசால் மாற்றப்பட்டிருக்கிறது. ஓசூர் மற்றும் ஓனல்வாடியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் இந்த நினைவகம் உள்ளது. இராஜாஜி பயன்படுத்திய பொருட்கள் அவரது வாழ்க்கை நிகழ்வுகளை சித்தரிக்கும் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ராயகோட்டா

இக்குன்றுக் கோட்டை ஓசூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. மைசூர் போர்களுக்குப் பிறகு இந்தக்கோட்டை, ஆங்கிலேயர்களின் யுத்த தந்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இங்கு 1861 ஆம் ஆண்டு வரை பிரிட்டன் படை நிலை கொண்டது. இது பாதுகாக்கபடும் நினைவுச்சின்னம். நாம் பார்த்து பிரமிக்க வேண்டிய கோட்டை. இதுபற்றி படித்தால் மட்டும் போதாது.

மாம்பழத் திருவிழா

கிருஷ்ணகிரி மாம்பழத்திருவிழா பிரபலமானது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நிகழும். ருமானி, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி உட்பட பலவகையான மாம்பழங்கள் காட்சியில் வைக்கப்படும். இதன் வாசனை பார்வையாளர்களை மயங்கவைக்கும். பார்க்க வேண்டிய கண்காட்சியல்ல; ருசிக்க வேண்டியது.

No comments:

Post a Comment