Wednesday, January 9, 2013

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய இடங்கள்


சென்னை மாநகரத்தோடு சேர்ந்தாற்போல் இருப்பதாலேயே பல சிறப்புகளையும், வளர்ச்சிகளையும் அடைந்து வரும் மாவட்டம். கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மத நிறுவனங்கள், சிறந்த கோயில்கள் என, பழம் பெருமைகளோடு, நவீன வளர்ச்சியிலும் தமிழகத்தின் கேந்திரமாக திகழ்கிறது.

அம்பத்தூர்

இந்தியாவின் மாபெரும் தொழில் நகரங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள தொழிற்பேட்டை தெற்காசியாவிலேயே மிகப் பெரியதாகும். இரயில் நிலையம், பேருந்து வசதிகள் அனைத்தும் கொண்டது. சென்னையிலிருந்து ஆவடி செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவில் உள்ளது.

ஆவடி

ஆவடி டாங்கி தொழிற்சாலை என்ற ராணுவ கவச வண்டி தயாரிக்கும் தொழிற்சாலை இங்குதான் உள்ளது. விமானப்படை நிலையமும் உள்ளது. சென்னை - அரக்கோணம் இரயில் தடத்தில் இருப்பதால் இரயில் நிலையமும் போக்குவரத்து வசதியும் உள்ளது. புறநகர் பேருந்துகளும் நிறைய உண்டு. சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் 24 கி.மீ. தொலைவில் ஆவடி உள்ளது.

பட்டினத்தார் சமாதி

தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்த ஞானி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து, சென்னை அருகில் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருவொற்றியூரில் மறைந்தார். திருவொற்றியூரில் இவருடைய சமாதி உள்ளது. பார்வைநேரம் - காலை 6-1 மணி வரை. மாலை 3-8 மணி வரை.

பழையனூர்

தமிழ்ப்படைப்பு ஒன்றின் சிறப்பை எடுத்துக்காட்ட 70 தமிழ் அறிஞர்கள் தங்கள் இன்னுயிரை நீத்த தியாகத் திருமண் இது. திருவாலங்காட்டிலிருந்து 1.5 கி.மீ. தூரத்தில் உள்ளது.

பூவிருந்தவல்லி (பூந்தமல்லி)

திருக்கச்சி நம்பியாழ்வார் என்ற வைணவப் பெரியார் பிறந்த ஊர். சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் இருப்பதால் புறநகர் மற்றும் தொலைதூரப் போக்குவரத்து வசதி நிறைந்த ஊர்.

பூண்டி

சத்தியமுர்த்தி சாகர் என்ற பூண்டி நீர்த்தேக்கம் இங்குதான் உள்ளது. இங்கிருந்துதான் சென்னையின் குடிநீர்த் தேவைகளைத் தீர்க்கும் செங்குன்றனம் நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. சென்னையிலிருந்த 60 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராமம், நீர்த்தேக்கத்துடன் சேர்ந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

கருமாரியம்மன் கோயில்

சென்னையிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரிஅம்மன் கோயில் தமிழகமெங்கும் பிரபலமானது. இங்கு நடக்கும் தைப்பூச லட்சார்ச்சனையும் பூர்ணிமை லட்சார்ச்சனையும் முக்கியமானவை. மாசி மகம், பங்குனி உத்திரம், கருடசேவை போன்ற திருவிழாக்களும் பிரபலமானவை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்களுக்கு இலவச உணவு அளக்கப்படும்.

சுருட்டப்பள்ளி

சனிப்பிரதோஷத்துக்குப் பெயர்போன கோயில் இது. சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் வழியில் புதூரிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் இந்தக் கோயில் உள்ளது. சிவன் பள்ளி கொண்ட நிலையிலும், பார்வதி தேவி சோகத்துடன் அருகில் அமர்ந்த நிலையிலும் தோற்றமளிக்கும் கோயில் இது. படுத்த நிலையில் சிவனைப் பார்ப்பது அரிது. ஆலகால விஷத்தை உண்ட சிவன் மயங்கியதாகவும், அப்போது பார்வதி அவன் கழுத்தைப் பிடித்து விஷம் உள்ளிறங்கிவிடாமல் தடுத்ததாகவும் கதைகள் உண்டு. இந்தச் சம்பவத்தின் சித்தரிப்பாகத் தான் இந்த ஆலயம் விளங்குகிறது. இங்கு நடக்கும் சனி பிரதோஷத்துக்கும், மஹh சிவராத்திரிக்கும் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.

கோயில் தரிசனம்: - காலை 6-12.30 மணி வரை மாலை 4-8 மணி வரை. பிரதோஷ நாட்களில்: காலை 6 முதல் இரவு 8 மணி வரை.

பழவேற்காடு உப்பேரி பறவைகள் சரணாலயம்

கடல் நீரும், பக்கிங்காம் கால்வாய் நீரும் ஒன்றுடன் ஒன்று கலக்கும் ஏரி இது. மீன்வளமும், இறால் வளமும் உள்ள ஏரி இது என்பதால் கடல் நீரை உள்வாங்குவதும், வெளித்தள்ளுவதுமாக இருப்பதால், இதை உப்பாறு என்று அழைக்கிறார்கள். இந்த ஏரியின் நீர்மட்டம் திடீரென்று உயர்வதும், தாழ்வதுமாக இருக்கும். இதை வத்தம், வெள்ளம் என்று இப்பகுதியில் உள்ள மீனவர்கள் அழைப்பார்கள். இங்கு கிடைக்கும் கட்டுநண்டு ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரமானது. பழவேற்காடு ஏரி, ஒரு பறவைகள் சரணாலயமும் கூட. கி.பி. 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுக்கல்லறை ஒன்றும் இங்கு உள்ளது. சென்னை அருகே உள்ள வித்தியாசமான சுற்றுலாத்தலம்.

வடிவுடையம்மன் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில்

தொண்டை நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவத்தலங்கள் 32 இல், திருவொற்றியூரில் உள்ள இந்தக் கோயிலும் ஒன்று. இந்து சமயப் பிரிவினரான ஆதி சைவர்கள், சைவர்கள், சாக்தர்கள், உச்சவர்கள், கேரள நம்பூதிரி ஆகிய ஆறு பிரிவினரும் இங்குள்ள சிவனையும், சக்தியையும் வழிபடுகின்றனர்.

திருப்பாச்சூர்

மாமன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பழம் பெரும் கோயில். சென்னையிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. திருவாலங்காட்டுக்குக் கிழக்கிலும், திருவள்ளூர் வீரராகவ சுவாமி கோயிலுக்கு மேற்கிலும் இத்தலம் உள்ளது.

திருத்தணி

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. ஆடிக் கிருத்திகையும், தெப்ப உலாவும் பிரபலமான திருவிழாக்கள். கந்தர் சஷ்டி, சிவராத்திரி ஆகியவையும் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படும். குமரன் கோபம் தணிந்து, தன் தேவியருடன் இந்தக் குன்றில் அமர்ந்ததால், திருத்தணிகை என்று பெயர் வந்ததாகக் கூறுவதுண்டு. மலையடிவாரத்தில் உள்ள குமாரதீர்த்தம் புகழ்பெற்றது. 365 திருப்படிகளைக் கொண்டது திருத்தணி மலைக்கோயில். தொலைபேசி: - 044-27885243.

வீரராகவப் பெருமாள்

மாவட்டத்தின் தலைநகரான திருவள்ளூரில் இந்தக் கோயில் உள்ளது. திருவள்ளூரைத் 'திருவுள்' என்றே அழைத்தார்கள். சென்னையில் இருந்து 42 கி.மீ. தொலைவில் இருக்கும் இக்கோயில், விஷ்ணு ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் வீரராகவப் பெருமாள் காட்சி அளிக்கிறார். அருகில் வசுமதி என்ற கனகவல்லியும் அவருடன் உறைந்துள்ளார்கள்.

No comments:

Post a Comment