சிம்மம்
மகம், பூரம், உத்ரம் 1–ம் பாதம் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்
பகைவர்களை கூட தங்கள் வெற்றிக்கு படிக்கட்டுகளாக மாற்றிக்கொள்ளும் சிம்ம ராசி நேயர்களே!
புத்தாண்டு வந்து விட்டது! புகழ் ஏணியின் உச்சிக்கு செல்ல கிரகங்களும் சாதகமான நிலையில் உலா வருகின்றன. வருட தொடக்கத்திலேயே சகாய ஸ்தானாதிபதி, யோகாதிபதி, விரயாதிபதி ஆகிய மூன்று கிரகங்களும் ஆதாயம் தரும் விதத்தில் சஞ்சரிக்கிறது. ராசிநாதன் தனாதிபதியுடன் கூடி பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.
ஆரம்பத்தில் சிறுசிறு விரயங்கள் ஏற்பட்டாலும் அடுத்தடுத்து பெயர்ச்சியாகும் கிரகங்களால் அற்புத பலன்களை காணப்போகிறீர்கள்.
சூரியன் ஆதிக்கத்தில் பிறந்திருப்பதால் நீங்கள் சொல்லும் சொற்கள் எல்லாம் வெல்லும் சொற்களாக மாறும். எதிரிகள் ஸ்தானாதிபதியும் சனி, இல்லற வாழ்க்கைக்கு உறுதுணை புரியும் ஏழாம் இடத்திற்கு அதிபதியும் சனி என்பதால், மறைமுக பகைகள் உங்களுக்கு எப்பொழுதும் இருக்கலாம்.
இந்த புத்தாண்டில் நீங்கள் மனதில் பதித்து வைத்துக் கொண்டு முன் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய நேரம். செவ்வாய், சனியின் பார்வை காலம் தான், அக்காலத்தில் எதை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும். இல்லத்திலும் சரி, இருக்கும் இடத்திலும் சரி, கூட்டாளிகளை அனுசரித்து வைத்துக் கொண்டால் தான் ஆதாயம் கிடைக்கும். பகை கிரகங்களின் பார்வை பதியும் நேரத்தில் பரிகாரங்கள் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக சிம்மம், மேஷம், விருச்சிகம், கடகம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் செவ்வாய், சனி பார்வை காலத்தில் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டி பார்த்து சனி, செவ்வாயின் பாதசார பலம் அறிந்து அதற்கேற்ப பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் எந்த ஸ்தலத்திற்கு சென்று செய்ய வேண்டுமோ, அந்த ஸ்தலத்திற்கு சென்று செய்து வந்தால் அதன்பிறகு நிலைமை சீராகும். நிகழ்காலதேவைகள் பூர்த்தியாகும்.
புத்தாண்டு கிரக நிலைகளின் ஜாதக கட்டத்தை நமது சுயஜாதக கட்டத்தோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அவை இரண்டும் இணைந்து செயல்படும் நேரத்தில் எதை செய்தாலும் அது நல்லபடியாக முடியும். இல்லையேல், துணிந்து எதையும் செய்யும் நீங்கள் தொடர்ந்து தெய்வங்களை பணிந்து வணங்கி செய்தால் தான் பலன்களை உடனடியாக பெற முடியும்.
பெயரியல் முறையில் எண்கணித அடிப்படையில் 2013–ம் ஆண்டு சுக்ரனுக்குரிய ஆண்டாகும். உங்கள் ராசிநாதனோ, சூரியனாவார். அதற்கேற்ற விதத்தில் தொழில் நிலையத்தின் பெயரை வைத்துக் கொண்டு செயல்பட்டால் புதிய தொழில் தொடங்குவோர் பொருளாதார நிலையில் உயர்வு காண்பர்.
குரு பெயர்ச்சிக்கு பின்னால் உங்கள் சங்கடங்களும் சஞ்சலங்களும் தீரும். தடுமாற்றங்கள் அகலும். புதிய பொறுப்புகளும் வந்து சேரும். சனியும், ராகுவும் மூன்றில் சஞ்சரிப்பதோடு 6–க்கு அதிபதி சனி உச்சம் பெறுவதால் தொழில் வளர்ச்சி ஏற்படும்.
1–1–2013 முதல் 27–5–2013 வரை
இக்காலத்தில் உங்கள் ராசிக்கு 10–ல் குரு வக்ரம் பெற்றிருக்கிறார். 5, 8–க்கு அதிபதி குரு வக்ரம் பெறும் பொழுது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். எனவே, கல்யாண வயது வந்த பிள்ளைகள் வீட்டில் இருந்தால் திருமணம் பேசி முடிப்பது நல்லது.
பூர்வீக சொத்துக்கள் விற்பனையாகலாம். விற்பனையான சில சொத்துக்களில் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலலாம். ஆரோக்கிய பாதிப்புகள் அகல மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள்.
புத ஆதித்ய யோகம் இருப்பதால் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். ராகுவின் பார்வை கூடுதலாக இருப்பதால் சர்ப்ப சாந்திகளை முறையாக செய்து கொள்வது நல்லது. ராகு ஆதிக்கம் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான வாழ்க்கையே இருக்கும். இதுபோன்ற காலங்கள் ஏற்படும் பொழுது பக்க பலமாக நமக்கு பாம்பு கிரகங்கள் அமைய வேண்டுமானால், அதற்குரிய பிரீதி செய்வதே நல்லது.
உச்ச செவ்வாய் உங்களுக்கு அச்சமில்லாத வாழ்க்கையை கொடுக்கலாம். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்து பேசுபவர்களை இனம் கண்டு கொள்வீர்கள். சகோதர வர்க்கங்கள் உங்களை சார்ந்தேயிருக்கும். சகல துறைகளிலும் ஈடுபட்டு வெற்றிக்கொடி நாட்டும் உங்களுக்கு குடும்பத்தில்நிம்மதியில்லாமல் போகலாம்.
9–ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் குலதெய்வ வழிபாடுகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கேது இருக்கும் வீட்டிற்கு அதிபதியான செவ்வாயை குருபார்க்கிறார். குரு பார்க்க கோடி நன்மை அல்லவா? எனவே நீண்ட காலமாக கனவு கண்ட திட்டம் நிறைவேறும். கோவில் குடமுழுக்கு விழாக்களை முன்நின்று நடத்துவீர்கள்.
மூத்த சகோதரர்களால் ஏற்பட்ட முன்னேற்ற பாதிப்புகள் அகலும். இளைய சகோதரர்களின் வழியில் இனிய உறவு புலப்படும். நூதன பொருட்களை வாங்கி சேர்க்கும் எண்ணம் மேலோங்கும். குரு, சுக்ர பார்வை உங்கள் சுக ஸ்தானத்தில் நிகழ்வதால் வாகன யோகம் அதிகரிக்கும். பயணங்களால் பலன் உண்டு. வீட்டிற்குதேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதற்காக போட்ட பட்டியலில் மோட்டார் சைக்கிள், கார் போன்றவையும் இடம் பெறும்.
பழைய வாகனங்களின் பழுதுச் செலவுகளை முன்னிட்டு புதிய வாகனம் வாங்கும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். சேமிப்புகளை பணமாக வைத்திருப்பதை விட, பொருளாகவும் இடமாகவும் மாற்றியமைத்து வைத்துக் கொண்டால் அது நிலையாக இருக்கும்.
28–5–2013 முதல் 31–12–2013 வரை
குரு, மிதுன ராசியில் சஞ்சரிக்கும் நேரமிது. அதன்பார்வை பதியுமிடங்கள் எல்லாம் புனிதமடைந்து, புதிய திருப்பங்களை உருவாக்கப் போகிறது. அந்த அடிப்படையில் அதன் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கருதப்படும் அந்த மூன்று இடங்களும் பலமடைந்து உங்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பொன்கொழிக்கும் விதமாக மாற்றப் போகிறது.
உடன்பிறப்புகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். ஊர் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும். கடன் சுமை பாதிக்கு மேல் குறைந்து, கனிவோடு தொழில் நடத்தும் வாய்ப்பு உருவாகும். தடுமாற்றங்கள் அகலும். தங்கம், வெள்ளி போன்றவைகள் இல்லத்தில் தானாக சேரும். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். கணவன்–மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும்.
பொதுநலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புகழ் கூடும். சமூகத்தில் போற்றப்படத்தக்க சாதனையாளர்களாக மாறுவர். விருதுகளும், விழாக்களும் வந்து கொண்டேயிருக்கும். வீடு கட்ட எடுத்த முயற்சிக்கு வாங்கிய கடன்களை கொடுத்துநிம்மதி காண்பீர்கள். கடை திறப்பு விழாக்கள் கோலாகலமாக நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உன்னத நிலையை காண்பர். மேல் அதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வு கிடைக்கும்.
குருவின் வக்ர காலம்!
குரு உங்கள் ராசியை பொறுத்த வரை 5, 9–க்கு அதிபதியாக விளங்குகிறார். எனவே வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாகும். குழந்தைகள் நலனில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். எந்த காரியத்தை செய்தாலும் யோசித்து செய்வதே நல்லது. பூர்வீக சொத்துக்களால் வரும் பிரச்சினைகளுக்கு உடனடியாக முடிவெடுக்காமல் யோசித்து முடிவெடுப்பது நல்லது. சுய கவுரவம் பாதிக்காது என்றாலும் பிறருக்கு பொறுப்பு சொல்வதை தவிர்ப்பது நல்லது. இக்காலத்தில் குருவுக்கு உரிய சிறப்பு வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.
சனி செவ்வாய் பார்க்கும் காலம்!
கிரக பார்வைகள் ஒரு சிலருக்கு உடனடியான நற்பலன்களை கொடுத்து விடும். ஒருசிலருக்கு வழிபாட்டின் மூலமாக நற்பலன்களை கொடுக்கும். உங்களை பொறுத்தவரை 6, 7–க்கு அதிபதியான சனியை 4, 9–க்கு அதிபதியான செவ்வாய் பார்க்கிறார்.
எனவே குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பிரச்சினை ஏற்படும் போது மூன்றாம் நபரின் ஆதிக்கம் வீட்டிற்குள் வந்து விடலாம். எனவே வீட்டு பிரச்சினைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது. உறவினர்கள் உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்கும் விதத்தில் நீங்கள் நடந்து கொள்ளுங்கள். இடமாற்றம் ஏற்படலாம்.
பெண்களுக்கான சிறப்பு பலன்கள்
சிம்ம ராசியில் பிறந்த பெண்களுக்கு வருடத் தொடக்கம் வசந்தமாக இருக்கும். வரவு அதிகரிக்கும். வருங்கால நலன் கருதி தீட்டிய திட்டங்களுக்கு அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும்.
குருவின் வக்ர இயக்கத்தால் குடும்பத்தில் தடைபட்டிருந்த சுபகாரியம் துரிதமாக நடைபெறும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்கள் தங்கம், வெள்ளி போன்றவைகள் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வாங்கிச் சேர்க்க வாய்ப்புகள் கைகூடி வரும்.
செவ்வாய், சனி பார்வை காலத்தில் அங்கார கவசம் பாடி செவ்வாயையும், சனி கவசம் பாடி சனீஸ்வரரையும் வழிபடுவது நல்லது. அது மட்டுமல்லாது ராகு கேதுஆதிக்கம் அதிகம் இருப்பதால் வழக்கில் வெற்றி கிட்டவும், வசதிகள் அதிகரிக்கவும், சர்ப்ப சாந்தியை முறையாக யோகபலம் பெற்ற நாளில் அனுகூல ஸ்தலத்தை தேர்ந்தெடுத்து செய்வது நல்லது. பொதுவாழ்வில் புகழும் பொறுப்புகளும் கூடும் வருடமிது.
No comments:
Post a Comment