Wednesday, January 9, 2013

கொடைக்கானலில் 2வது சீசன் துவங்கியது

கொடைக்கானல், :கொடைக்கானலில் அதிகாலை பனிமூட்டமும், பகல் நேரங்களில் அவ்வப்போது சாரல் மழை பெய்து குளு குளு சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த மாதத்திற்கு முன்பு பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. அவ்வப்போது சாரல் மழையாக பெய்து வந்தது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதைத்தொடர்ந்து, தினமும் அதிகாலை முதல் பனிமூட்டம் சூழ்ந்து கொள்வதும், அவ்வப்போது பன்னீர் தெளிப்பது போன்று சாரல் மழையும் பெய்து வருகிறது.

குளிர்கால சீசன் துவங்கியுள்ளதால் தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் கொடைக்கானலின் குளுமையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் அதிகமாக வர துவங்கியுள்ளனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கோக்கர்வாக்கஸ், பசுமை பள்ளத்தாக்கு, விண்ணோடு முகில் விளையாடும் தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, மோயர்பாயின்ட், மரங்கள் அதிகமுள்ள பைன் பாரஸ்ட் ஆகியவற்றை கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும், நகரின் மைய பகுதியிலுள்ள ஏரியில் படகு சவாரி செய்தும், பல வண்ண மலர்கள் பூத்து குலுங்கும் பிரையண்ட் பூங்காவில் மலர்களை கண்டு ரசித்த பின், புல் தரையில் ஆடிப்பாடி மகிழ்கின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் குளிர்கால சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. கேரளாவில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக வந்தவண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment