Wednesday, January 9, 2013

முதுமலை மீண்டும் திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி


ஊட்டி, :முதுமலை புலிகள் காப்பகம் நேற்று திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக கடந்த ஜூலை 24ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள புலிகள் காப்பகங்களில் சுற்றுலா நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் உள்ளன. வன விலங்குகளை காண தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். சுற்றுலா பயணிகள் வன விலங்குகளை காண வசதியாக வனத்துறை சார்பில் வாகன ரோந்து ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தது.

இது தவிர யானை சவாரியும் தினமும் காலை, மாலை நேரங்களில் நடைபெற்று வந்தது. சுற்றுலா பயணிகள் வருகையால் கூடலூர், தொரப்பள்ளி, மசினகுடி கிராம மக்கள் விடுதி, ஓட்டல்கள் மற்றும் பல்வேறு சுற்றுலா தொழில் செய்து பிழைப்பு நடத்தினர். குறிப்பாக பழங்குடியின மக்கள் பலரும் ஓட்டல், ரிசார்ட்கள், தங்கும் விடுதிகளில் பணியாற்றினர். புலிகள் காப்பகம் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். சுற்றுலா தொழிலை நம்பி இப்பகுதியில் இருந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். ஓட்டல், விடுதிகள், ரிசார்ட்கள் வெறிச்சோடின. இதை நம்பி வாழ்ந்த மக்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர்.

இந்நிலையில், நிபந்தனைகளுடன் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். முதுமலை புலிகள் காப்பகத்தை திறப்பது தொடர்பான உள்ளூர் திட்ட குழு அமைக்கப்பட்டு அதன் கூட்டம் கடந்த வாரம் ஊட்டியில் நடந்தது. இதை தொடர்ந்து நேற்று மாலை முதுமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டு, சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஓரிரு நாட்களில் வழக்கம் போல் யானை சவாரி, ஜங்கிள் ரெய்டு துவக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். புலிகள் காப்பகம் திறக்கப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே விரைவில் ஆனைமலை புலிகள் காப்பகத்தையும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment