Wednesday, January 2, 2013

சாபமே வரமானது



இன்றும் இனிக்கும் இதிகாசம் 10

சூதாட்டத்தால் நாட்டை இழந்த பாண்டவர்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த காலம். பன்னிரண்டு ஆண்டுகளைக் காட்டில் கழிக்க வேண்டும். பின்னர் ஓர் ஆண்டை யாரும் அடையாளம் காணாதவாறு அஞ்ஞாத வாசத்தில் கழித்தாக வேண்டும். இதுதானே துரியோதனன் நிபந்தனை? பன்னிரண்டு ஆண்டுகள் முடியும் தறுவாயிலிருந்தன. இனி விரைவில் அஞ்ஞாத வாசம் மேற்கொள்ள ஆயத்தமாக வேண்டியதுதான். அவ்வப்போது கண்ணன் அவர்களுக்கு, அறிவுரைகளால் தைரியம் ஊட்டிக் கொண்டிருந்தான். அப்படிக் கண்ணன் வந்த ஒருநாள், அர்ஜுனன் கேட்டான்: ‘‘கண்ணா! துர்வாச முனிவரைப் போன்றவர்கள் திடீர் திடீர் என்று பலரை சபித்து விடுகிறார்களே? முனிவர்களோ வேறு யாருமோ சபித்தாலும் பாதிப்பு ஏற்படாமல் காத்துக் கொள்ள முடியாதா?’’ ‘‘ஏன் காத்துக் கொள்ள வேண்டும்? சாபம் என்பது கூட இறைவனின் அருளால் நேர்வதாகலாம்!’’ என்றான் கண்ணன்.

பாஞ்சாலி திகைப்புடன் வினவினாள்: ‘‘கண்ணா! வரம்தான் இறைவனின் அருள். சாபம் எப்படி அருளாக இருக்க முடியும்?’’ ‘‘முடியும். சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பங்களும் நேர்வதுண்டு. சாபமோ வரமோ எதுவானாலும் இறைவனின் தீர்ப்பு என்று ஏற்று வாழ்ந்தால் சாபத்தினால்கூட நன்மை காண முடியும். சாபம் வரமாக மாறும் சந்தர்ப்பம் அர்ஜுனன் வாழ்விலும் நேரலாம். யார் கண்டது?’’ கண்ணனின் விளக்கத்தைக் கேட்டுப் பாண்டவர்கள் யோசனையில் ஆழ்ந்தார்கள். போருக்கு இன்னும் ஓராண்டு தானே பாக்கியிருக்கிறது? வனவாச காலத்திலேயே இந்திரனிடம் சென்று வலிமையான அஸ்திரங்களைக் கேட்டுப் பெறுமாறு கண்ணன் அர்ஜுனனுக்கு அறிவுறுத்தினான்.

குந்திதேவி, இந்திரனுக்கு உரிய மந்திரத்தை ஜபித்தல்லவா அர்ஜுனனைப் பெற்றாள்? தனக்கு மகனே போன்ற அர்ஜுனன் கேட்டால் இந்திரன் தேவ அஸ்திரங்களைத் தர மறுப்பானா என்ன? அர்ஜுனன் விண்ணுலகம் புறப்பட்டான். தேவசபையில், தன்னைத் தேடி வந்திருக்கும் அர்ஜுனனைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான் தேவேந்திரன். அவன் மனத்தில் தந்தைக்கே உரிய பாசம் பொங்கியது. மன்மதனும் கண்டு பொறாமைப்படும் பேரழகனாக அர்ஜுனன் விளங்குகிறானே! சிவந்த மேனி, கவர்ச்சிகரமான முகம், தாமரை இதழ் போன்ற விழிகள், நீண்ட கைகள்! அவன் அங்கலட்சணங்களைப் பார்த்து வியந்தது இந்திரன் மனம்.

அர்ஜுனன், மாவீரனும் கூட! மண்ணுலகிலிருந்து அஸ்திரங்கள் பெறுவதற்காக எல்லாத் தடைகளையும் தாண்டி விண்ணுலகிற்கே வரமுடிந்து விட்டதே அவனால்! இந்திரனின் தந்தை மனம் பெருமிதம் கொண்டது. அதே தேவசபையில் ஒரு சாளரத்தின் வழியே வேறு இரு விழிகளும் ரகசியமாக அர்ஜுனனின் எழிலைப் பருகிக் கொண்டிருந்தன. பேரழகியான ஒரு பெண்ணின் கருநீல விழிகள் அவை. அர்ஜுனனின் எழிலில் ஈடுபட்ட அவள் விழிகளில் மெல்ல மெல்லக் காமத்தின் செம்மை படரத் தொடங்கியது. அவள் புகழ்பெற்ற நாட்டியக்காரி. அவளை அடைய ஏராளமானோர் ஏங்கித் தவித்தார்கள். அவள் இந்திர சபையில் இந்திரனுக்குரியவளாய் இயங்குபவள். பிறரை ஏங்கவைக்கும் அவள், இப்போது, தான் அர்ஜுனனை அடைய வேண்டும் என்று ஏங்கலானாள்!

இந்த வசீகர வாலிபன் இன்னும் எத்தனை நாள் தேவருலகில் தங்குவானோ? அஸ்திரங்களை வாங்கிக் கொண்டதும் விடைபெற்று விடுவான். அதற்குள் நாம் நமது மன்மத அஸ்திரங்களை அவன் மீது தொடுக்க வேண்டும்.... அவள் மனத்தில் மெல்லிய முறுவல் தோன்றியது. வேடிக்கைதான். அவள் தோழிகள் அவளது மனநிலையை அறிந்தால் சிரிப்பார்கள். முற்றும் துறந்த முனிவர்கள் கூட அவளது அழகில் கிறங்கித் தவத்தை விட்டுவிடச் சித்தமாக இருக்கிறார்கள். எப்பேர்ப்பட்ட புலனடக்கம் உடையவனையும் வீழ்த்தக் கூடியது அவளின் அழகு. அவளைக் கண்டுதான் இதுவரை எல்லோரும் ஆசைப்பட்டிருக்கிறார்களே ஒழிய அவள் யாரையும் பார்த்து ஆசைப்பட்டதாக வரலாறே இல்லை. ஆனால் இப்போது வரலாறு மாறுகிறது!

அன்றிரவு ஒலி அடங்குவதற்காகக் காத்திருந்தாள். அவளிடமிருந்த ஆடைகளிலேயே மெல்லியதும் பளபளப்பானதுமான ஆடையை அணிந்துகொண்டாள். புருவம் திருத்தி, கண்ணுக்கு அஞ்சனமிட்டு அலங்கரித்துக் கொண்டாள். முத்துச்சரம், மேகலை, கழுத்து நகைகள், நெற்றிச் சுட்டி என ஒவ்வோர் அணிகலனையும் தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டாள். தன் அழகால் யாரையும் கவர்ந்துவிட முடியும் என்ற கர்வம் அவளிடம் தோன்றியது. போயும் போயும் ஒரு மானிடனைக் கவரவா இத்தனை பாடு! சப்தமெழுப்பாமல் தன் மாளிகையை விட்டு வெளியேறினாள். அந்த விருந்தினன் தங்கியுள்ள மாளிகை நோக்கி நடந்தாள். அர்ஜுனன் மாளிகை இருளில் ஆழ்ந்திருந்தது. மெல்லக் கதவைத் தட்டினாள். அந்தத் தட்டலிலேயே ஒரு கொஞ்சல் இருந்தது.

மாளிகையில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த அர்த்த ராத்திரியில் தன்னைத் தேடிவருபவர் யாராயிருக்கக் கூடும்? மாவீரனான அர்ஜுனன் எச்சரிக்கையோடு வந்து வாயில் கதவைத் திறந்தான். வாயிலில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் அவன் உள்ளம் திகைப்பில் ஆழ்ந்தது. அவளின் ஒப்பனையும் அவள் விழிகளில் தென்பட்ட காமச் சிவப்பும் சொல்லாமலே அவள் எண்ணத்தைப் புரிய வைத்தன. அர்ஜுனனும் பாஞ்சாலி என்ற வீரத்தால் பெற்ற ஒரு மனைவியோடு தன் உறவை நிறுத்திக் கொண்டவனல்ல. செல்லுமிடமெல்லாம், தன்னை விரும்பும் பெண்களை அவன் மணப்பதுண்டு. அவனது அத்தகைய குணத்தைப் பற்றிப் பாஞ்சாலிக்குச் சற்றுச் சலிப்புமுண்டு. ஆனால் இந்த தேவலோகப் பெண்ணைப் பார்த்ததும் அவன் மனத்தில் காதல் எழவில்லை. ஏனோ மரியாதைதான் எழுந்தது. தன் மன உணர்வுகளை எண்ணி அவனுக்கே திகைப்பாக இருந்தது.

முதலில் அவள் யார் என்று அறிவோம். ‘‘தாயே! தாங்கள் யார்? இந்த நள்ளிருளில் என்னைத் தேடி வந்ததன் நோக்கம் என்ன?’’ என்று பணிவோடு வினவினான். ‘‘தங்களை விட வயதில் குறைந்த தோற்றம் காட்டும் என்னைத் தாங்கள் தாய் என அழைப்பது முறையல்ல!’’ என்று அவனிடம் முறையிட்ட அவள், மயக்கும் மோகனப் புன்முறுவலோடு சொன்னாள்: ‘‘என்னை ஊர்வசி என்பார்கள். இந்திர சபையில் ரம்பை, திலோத்தமை போல நானும் ஒரு நாட்டியக்காரி. தங்கள் மேல் கொண்ட இச்சையால்தான் தங்களை நாடிவந்தேன் என்பதை வெட்கத்தை விட்டு நான் வெளிப்படையாகச் சொல்லுமாறு செய்துவிடாதீர்கள். தாங்களே புரிந்துகொள்ளுங்கள்!’’ வெளிப்படையாகச் சொல்லிவிட்டு அவ்விதம் சொல்லுமாறு செய்துவிடாதீர்கள் என்று சொல்லும் அவளின் சாதுரியம் அர்ஜுனனை நகைக்க வைத்தது. மிகுந்த மதிப்போடு அவளை உள்ளே அழைத்த அவன் ஓர் ஆசனத்தில் அமரவைத்து, திடீரென அவள் காலில் விழுந்து வணங்கினான்!

அவள் பதறிப்போய் காலை நகர்த்திக் கொண்டாள். அர்ஜுனன் பணிவோடு பேசலானான்: ‘‘அம்மா! தாங்கள் என் தாய்க்கு நிகரல்லவா? தேவேந்திரன் எனக்குத் தந்தை முறையாக வேண்டும் என்றால் தாங்கள் எனக்குத் தாய் தானே?’’ ஊர்வசியின் விழிகளிலிருந்து அருவிபோல் நீர் கொட்டியது. கூடவே அவள் மனத்தில் கடும் சீற்றமும் எழுந்தது. அர்ஜுனனைப் பற்றிய மரியாதை மொழிகள் அவளிடமிருந்து விடைபெற்றன. ‘‘உன்னை விட வயதில் குறைந்தவளாகத் தோற்றம் காட்டும் நான் எப்படி உனக்குத் தாய்முறையாக முடியும்?’’‘‘தாய்ப் பாசத்திற்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்? மகனை விட வயதில் குறைந்த பெண்ணைத் தந்தை இன்னொரு மணம் புரிந்துகொண்டால் அந்த மகனுக்கு அவனைவிட இளையவள் தாயாகத்தானே ஆவாள்? தாங்கள் என் தாயாவதும் அப்படித்தான். இவ்வளவு பேரழகுடைய பெண்மணி எனக்குத் தாயாய் இருப்பது குறித்து என் மனம் பெருமைகொள்கிறது தாயே!’’

ஊர்வசி இரு செவிகளையும் கரங்களால் பொத்திக் கொண்டாள். ‘‘மீண்டும் மீண்டும் என்னைத் தாய் என்று சொல்லி அவமானப்படுத்தாதே! நான் உன்மேல் ஆசைகொண்டு உன்னைத் தேடிவந்த பெண். தாய்-மகன் உறவு என்பது இருதரப்பிலும் ஏற்கப்பட வேண்டும். நீ என்னைத் தாய் என்று சொல்வதால் மட்டும் நான் உன் தாயாகிவிட மாட்டேன்.’’ அர்ஜுனன் அமைதியாகவும் உறுதியாகவும் சொன்னான்: ‘‘தாயே! உங்கள் உணர்வுகள் உங்களுடையவை. அவற்றை நீங்கள்தான் மாற்றிக் கொள்ளவேண்டும். என் மனநிலையை நான் தெரிவித்தேன். அதில் என்றும் எந்த மாற்றமும் இல்லை. தன் தாயின் ஆசிகளை வேண்டிப் பணிகிறான் இந்த மகன்!’’ மீண்டும் அர்ஜுனன் ஊர்வசியின் காலில் விழுந்து வணங்கினான். எரிச்சலடைந்த ஊர்வசியின் ஆழ்மனம் கோபத்தால் பொங்கியது. முன்னர் காமத்தால் சிவந்த அவள் விழிகள் இப்போது சீற்றத்தால் சிவந்தன.

‘‘வெட்கத்தை விட்டுத் தேடிவந்து என் உணர்வுகளைச் சொன்ன என்னை அவமானப்படுத்திவிட்டாய். அதற்குரிய தண்டனையை நீ அடைந்தே தீரவேண்டும். ஒரு பெண்ணின் ஆசையை உணராத நீ, பெண்ணாகவும் இல்லாமல் ஆணாகவும் இல்லாமல் இரண்டு தன்மைக்கும் இடைப்பட்ட நிலையை அடைவாய்!’’ ஊர்வசியின் சாபம் காற்றில் ஆக்ரோஷத்துடன் படபடத்தது. அர்ஜுனன் மனம் திடுக்கிட்டது. தான் அடையவிருக்கும் துர்ப்பாக்கியமான நிலையை எண்ணி அவன் மனம் வருத்தத்தில் ஆழ்ந்தது. அவன் ஒரு விம்மலுடன் ஊர்வசியிடம் வேண்டினான்: ‘‘தாயே! சற்றே சிந்தித்துப் பாருங்கள். என் நிலை தங்களுக்குப் புரியும். தங்கள் இச்சைக்கு நான் உடன்பட்டால் தாய்க்கு நிகரானவளை அடைந்தேன் என்று சான்றோர் என்னைப் பழிக்க மாட்டார்களா? தங்களுக்கும்தான் அது பெருமையா? அறவழியில் செல்ல நினைத்தவனைச் சபிப்பது எவ்வகையில் தர்மமாகும்? என் நிலை உணர்ந்து எனக்குத் தாங்கள் சாபவிமோசனம் அருள வேண்டும்!’’

ஊர்வசியின் உணர்ச்சிகள் மெல்ல சமனப்பட்டன. தன் மனத்தில் தோன்றிய காம உணர்ச்சி அடங்கியதும், அர்ஜுனன் தரப்பில் இருந்த நியாயத்தை அவள் மனம் உணரத் தொடங்கியது. அவள் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்: ‘‘ஆம். நீ சொல்வது சரிதான். ஆனால் சபித்தது சபித்ததுதான். அதைச் சபித்தவரே கூட மாற்ற இயலாது. என்றாலும் சாபத்தின் வேகத்தைக் குறைக்க இயலும். நீ உன் வாழ்வில் ஓராண்டு மட்டும் அலித்தன்மை பெறக் கடவாய். அது நீ விரும்புகிற எந்த ஆண்டாக வேண்டுமானாலும் நீயே தேர்வு செய்து கொள்ளலாம்!’’ சொன்ன ஊர்வசி, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அந்த மாளிகையை விட்டு வெளியேறினாள். தேவேந்திரனிடமிருந்து அஸ்திரங்களைப் பெற்ற அர்ஜுனன் மீண்டும் கானகம் திரும்பினான். கண்ணன் அவனைச் சந்திக்கக் காத்திருந்தான். அர்ஜுனன் விழிகளில் கண்ணீர் திரையிட்டது.

அர்ஜுனனின் சோகத்திற்கு என்ன காரணம் என வினவினான் கண்ணன். அர்ஜுனன் ஊர்வசியின் சாபத்தைப் பற்றிச் சொன்னான். கண்ணன் மகிழ்ச்சியுடன் நகைத்ததைக் கண்டு அர்ஜுனனுக்கு வியப்புத் தோன்றியது. ‘‘என்ன கண்ணா உன் முகத்தில் இத்தனை மகிழ்ச்சி? நான் பெற்ற சாபம் உனக்கு ஆனந்தம் தருகிறதா?’’ ‘‘ஆமாம்!’’ உறுதிபடக் கூறிய கண்ணன் விளக்கலானான். ‘‘அர்ஜுனா! பதிமூன்று வருட வனவாச காலத்தில் கடைசி ஓராண்டை நீங்கள் ஆறுபேரும் அஞ்ஞாத வாசமாகக் கழிக்க வேண்டும் என்பதுதான் நிபந்தனை. யாரும் உங்களை அடையாளம் புரிந்து கொள்ள முடியாமல் வாழவேண்டிய நிர்ப்பந்தம். பெரும் வீரனான நீ மிடுக்கான தோற்றமுடையவனாய் இருக்கிறாயே? உன்னை எவ்விதம் ஒளித்து வாழ்வாய்? ஊர்வசியின் சாபத்தால் நீ அலித்தன்மை அடையும் ஓராண்டாக அந்தக் கடைசி ஆண்டைத் தேர்வு செய்துகொள்.

உன் தோற்றம், இயல்பு அனைத்தும் மாறும். உன்னை யாராலும் கண்டுபிடிக்க இயலாது! ஊர்வசி கொடுத்தது சாபமல்ல, வரம். நீ அறநெறி தவறாமல் அவளைத் தாயாக ஏற்றாய். அந்த அறநெறி அவள் மனத்தில் ஒரு சாபத்தைத் தோற்றுவித்து அதையே உனக்கு வரமாக மாற்றிவிட்டது! அறநெறியில் நடந்தால் இறுதியில் நன்மைதான் உண்டாகும்! சாபமே வரமாக மாறும் சந்தர்ப்பம் உன் வாழ்விலும் நேரலாம் என்று சொன்னேனே? நினைவிருக்கிறதா?’’ இதைக் கேட்டு பாண்டவர் ஐவர் முகத்திலும் பாஞ்சாலி முகத்திலும் மகிழ்ச்சி பரவியது.

கண்ணன் விளக்கினான்: ‘‘மூடிய இரும்புக் கதவைப் பார்த்து வருந்துகிறார்கள் மக்கள். ஆனால் அதைவிடப் பிரகாசமான தங்கக் கதவைத் திறப்பதற்காகவே தற்காலிகமாக அந்த இரும்புக் கதவு மூடப்படுகிறது என்பதைப் பின்னர்தான் அறிகிறார்கள். கடவுள் சக்தி மக்களைக் காப்பதற்குத்தானே எப்போதும் காத்திருக்கிறது! தற்காலிக சோகங்களை எண்ணி வருந்துவானேன்? நிரந்தர ஆனந்தத்தை நோக்கி நடக்க வேண்டியதுதானே?’’ கண்ணனின் பேச்சைக் கேட்டு நிறைவடைந்த அர்ஜுனனின் கரம் கண்ணனை நோக்கிக் குவிந்தது.

No comments:

Post a Comment