Wednesday, January 2, 2013

திருமால், தானே விரும்பி உறைந்த திருத்தலம்!



திருமாலிருஞ்சோலை

திவ்ய தேசப் பெருமாளுக்கு இரண்டு வாரம் ரெஸ்ட் கொடுத்தாகிவிட்டது. இதோ இந்த வாரம், மதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் கோயில் கொண்டிருக்கும் நம் உள்ளம் கவர்கள்ளழகரை தரிசிப்போம். திருமாலிருஞ்சோலை என்றழைக்கப்படும் இந்தத் ‘திருமால் இரும் மலை’, திருமாலின் இதயம் கவர்ந்த திருத்தலம். இதை அவரே ரசித்து, மகிழ்ந்து, விருப்பமுடன் தன் தலமாக அமைத்துக் கொண்டிருக்கிறார். ‘தாடகைமாள நினைந்தவர் மனம் கொண்ட கோயில்’ என்றும், ‘தடங்கடல் வண்ணர் எண்ணி முன் இடம் கொண்ட கோயில்’ என்றும் திருமங்கையாழ்வார் இத்தலத்தை இறைவனே தேர்ந்தெடுத்து கோயில் கொண்டதை சிலா கித்துப் பாடுகிறார். ‘புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்’ என்று நம்மாழ்வாரும் இந்தக் கருத்துக்குத் தோள் கொடுக்கிறார். ராமானுஜரோ, தன் ராமானுச நூற்றந்தாதியில், ‘‘இருப்பிடம் வைகுந்தம், வேங்கடம்..... மாலிருஞ்சோலை என்னும் பொருப்பிடம்..... இவை மூன்றும் மாயனுக்கு என் பர் நல்லோர்’’ என்று சொல்லி மெய்சிலிர்க்கிறார்.

இந்தத் திருமால் இரும் சோலை, இருக்கும் சோலை, இன்றும் ஒரு சோலையாகவே திகழ்வதற்கும் அந்தப் பெருமாளின் பேரருளே காரணமாகும். இந்தப் பெருமாளை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வழிபட்டவர்களின் முதலாமவனாக எமதர்மராஜனைச் சொல்லலாம். எதையும் எதிர்பாராதது மட்டு மல்லாமல், தான் வழிபடும் பெருமாள் ஒரு சுகபோகி என்பதை உணர்ந்த அவன், இத்திருத்தலத்திலும் அவர் அதே சௌக்கியத்துடன் கோயில் கொண்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தான். (மக்களுடைய பிரச்னைகள், குழப்பங்கள், வேதனைகளைத் தீர்க்க வேண்டிய, இந்தக் கலியுகத்தில் அவர்களைக் காக்கவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தன் மனதில் கனத்தாலும் முகத்தில் மலர்ச்சியும் புன்னகையும் தவழ, மணம் கமழும் பாற்கட லில், மென்மையான ஆதிசேஷப் படுக்கையில் கால்கள் நீட்டிப் படுத்து, அந்தக் கால்களையும் மிருதுவாக மஹாலட்சுமி பிடித்துவிட, ‘சுகம்’ கண்டு கொண்டிருப்பவர்தானே, திருமால்!)

ஆகவே, தேவதச்சனான விஸ்வகர்மாவை அழைத்தான்எமதர்மன். சந்திரனின் குளிர்ச்சியும் ஒளியும் கொண்ட ஒரு விமானத்தை நிர்மாணிக்கச் சொன்னான். அதற்கு சோமச் சந்த விமானம் என்று பெயரிட்டு, பெருமாளை அதனுள் வாசம் செய்யுமாறு கேட்டுக்கொண் டான். அது மட்டுமல்லாமல், அந்த முழுக்
கோயிலையும் கட்டி அவருக்கு அர்ப்பணித்தான் அவன். யோக நரசிம்மர் சுதை சிற்பமாக நுழைவாயிலின் மேலே ஆரோகணித்திருக்க உள்ளே பசுமை நம்மை வரவேற்கிறது. அங்கே வரிசையாக நின்றிருக்கும் பசுக்களும், அவற்றுக்கு பக்தர்கள் வழங்கும் அகத்திக் கீரையும் அத்தலத்தின் பசுமைக்கும் பசுமை உள்ளங்களுக்கும் கட்டியம் கூறுகின்றன. சில அடிகள் நடந்தால் கருப்பண்ணசாமி ஒரு பிரமாண்ட கதவு ரூபத்தில் ஆசி அருள்கிறார். அந்த ஜோடி கதவுக்கு பூஜைகள் நடைபெறுகின்றன, தீபம் காட்டப்படுகிறது.

விபூதி-குங்குமப் பிரசாதமும் வழங்கப்படுகிறது. கதவுக்கு மாலைகள் சாத்தப்படுகின்றன. இவரை பதினெட்டாம்படி கருப்பண்ண சாமி என்கிறார்கள். இவர் எப்படி இங்கே வந்தார்? கேரளத்து மன்னன் ஒருவன் ஒருமுறை திருமாலிருஞ்சோலைக்கு வந்து கள்ளழகரை தரிசித்தான். தன் உள்ளம் கொள்ளை கொண்ட அந்த அழக ரைத் தன் நாட்டுக்குக் கடத்திச் சென்றுவிட அவன் துடித்தான். ஆனால் அங்கிருந்த பக்தர்கள், வைணவ அடியார்களின் பெரும் பக்தியைக் கண்டு திகைத்த அவன், அவ்வாறு அவரைக் களவு கொண்டு செல்வது என்பது முடியாத காரியம் என்றுணர்ந்தான். இந்த தெய்வத்தை மாந்த்ரீக சக்தியா லேயே வசப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தான். பிறகு தன் நாட்டிற்குத் திரும்பிய அவன், வசிய மந்திர, தந்திரங்களில் தேர்ந்த 18 பணிக்கர்க ளைத் தயார் செய்தான். அவர்களை திருமாலிருஞ்சோலைக்கு அனுப்பி, அழகரைக் கவர்ந்து வந்துவிடப் பணித்தான்.

அவர்களும் ஒரு தெம்புடன் இந்தத் தலத்தை அடைந்தார்கள். தம் மாந்த்ரீக, தாந்த்ரீக வித்தைகளைப் பிரயோகித்து தம் நோக்கம் நிறைவேற வேண்டிய முயற்சியில் இறங்கினார்கள். இந்த விஷயம் ஊருக்குள் பரவவே, உள்ளூர் பக்தர்கள் சிலர் வந்து, கோயில் படிகளில் அமர்ந்தபடி, மாந்த்ரீ கத்தில் ஈடுபட்டிருந்த அவர்களை அப்படியே பிடித்து, ஒரு படிக்கு ஒருவராக அந்தந்தப் படியிலேயே புதைத்துவிட்டனர். இந்த பதினெட்டு பேரின் மந் திர சக்திக்கு உட்பட்டு அவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்திருந்த காவல் தெய்வம் சற்று தயங்கியது. அழகரின் அழகில் மயங்கி நின்ற அந்த சக்தி, அவரைக் கடத்திச் செல்ல இயலாது என்பதைப் புரிந்துகொண்டது. ஆனால் அவரைவிட்டுப் பிரியவும் மனமில்லாமல் தவித்தது. தான் கோயிலுக்குள் போய் அழகருடன் அமர்ந்திருக்க விரும்பினாலும், சாஸ்திர, சம்பிரதாயங்கள் அதற்கு இடம் கொடுக்காது என்பதையும் புரிந்துகொண்டது.

ஆனாலும் அவரை நிரந்தரமாக, நேருக்கு நேர் பார்த்தபடி அங்கேயே நிலைகொள்ள ஆசைப்பட்டது. உடனே ஊர்ப் பெரியவர்களிடம், அந்த அழக னுக்குத் தான் ஒரு கதவாக அமைவதாகவும் பெருமாளின் வாசலையும் இந்தப் பதினெட்டுப் படிகளையும் காவல் காப்பதாகவும் அதற்குத் தன்னை அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தப் பணிக்குப் பிரதியுபகாரமாக, அர்த்தஜாம பூஜையில் அழகனுக்கு படைக்கப்படும் பிரசாதத்தைத் தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. இன்றளவுக்கும் கள்ளழகருக்கே காவல் தெய்வமாக, கருப்பண்ணசாமியாக விளங்கி வருகிறது! இன்றைக்குக்கூட பொய், களவு, நம்பிக்கை துரோகம் சூது, ஏதேனும் குற்றம் என்று வழக்குகள் இந்த கருப்பண்ணசாமி கதவுக்கு முன்னால் பஞ்சாயத்து பேசப்பட்டு, நியாயம் நிலைநாட்டப்படுகிறது என்கிறார்கள். தீய மனதுடையவர், குற்றம் புரிந்தவர் தம் மனமாற்றத்துக்காக இந்த கருப்பண்ணசா மியை வழிபட்டு நல்மனமும் நல்வாழ்வும் அமையப் பெறுகிறார்கள்!

கருப்பண்ணசாமி என்ற காவல் கதவை வணங்கிவிட்டு, சற்று சுற்றிக்கொண்டு கோயிலினுள் நுழையலாம். எதிரே வட்டச் சுவர் கொண்ட ஒரு சிறு திடல். உள்ளே கிருஷ்ணர் சிலை வடிவாக நின்றிருக்கிறார். அவரை பக்தர்கள் வலம் வருகிறார்கள். அங்கேயே இருக்கும் வேம்பு, புன்னை மரங்களில் பிள்ளைவரம் வேண்டும் பெண்கள் தொட்டில் கட்டி பிரார்த்தனை செலுத்தியிருக்கிறார்கள். இவரை வலம் வந்து கள்ளழகர் கோயிலின் பிரதான வாயிலுக்குப் போகலாம். இடப்புறம் ஆஞ்சநேயர் தனி சந்நதி கொண்டு நம்மை வாழ்த்தி வர வேற்கிறார். அவரிடம் ஆசி பெற்று உள்ளே சென்றால், கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் நின்ற கோலத்தில் அழகு தரிசனம் அளிக்கிறார். அந்த உற்சவர் சிற்பம் தனி அழகோடு விளங்குவதை உணர முடிகிறது. அதற்கு முக்கிய காரணம், அது அபரஞ்சி என்ற பிரத்யேக தங்கத்தால் ஆன துதான்! ‘சோலைமலைக்கரசர்’ என்றே திவ்யபிரபந்தம் இந்த அழகனை வர்ணித்து மகிழ்கிறது. ‘ரிஷபாத்ஷர்’ என்று புராணம் போற்றுகிறது. இங்கும் திருவனந்தபுரத்திலும் மட்டுமே இந்த உற்வத் திருமேனிகள் அபரஞ்சி தங்கத்தால் உருவானவை.

மூலவரைவிட உற்சவர் பெரும் புகழ் பெற்ற திருத்தலம் இது என்றால் மிகையாகாது. மூலவரைப் போலவே உற்சவரும் பஞ்சாயுதங்களுடன் திகழ்கி றார். இந்த உற்சவர் பங்கேற்கும் ‘அழகர் ஆற்றில் இறங்கும் விழா’ மிகவும் பிரசித்தம். அதை விவரமாகப் பின்னால் பார்க்கலாம். மூலவருக்கு அருகில் பிராகாரத்தில் வலம்புரி விநாயகர் சந்நதி இருக்கிறது. வடக்குப் பிராகாரத்தில் விஷ்வக்சேனர், ஜெயதேவியுடன் காட்சியளிக்கிறார். இவரையடுத்து இருப்பவர் பைரவர். இந்த பைரவர் நீளமான தந்தங்களுடன், கோரைப் பற்களுடன், திரிசூலத்துடன், நாய் வாகனத்துடன் தரிசனம் தருகிறார். அடுத்தது க்ஷேத்திர பாலகர் சந்நதி. இதற்கு முனையதரையன் திருமண்டபம் என்றும் ஒரு பெயர் உண்டு. சிவபெருமான் விஷ்ணுவைக் குறித்துத் தவம் செய்து, க்ஷேத்திர பாலகராக இக்கோயிலில் இடம் பெற்றார் என்று விருஷபாத்ரி மகாத்மியம் கூறுகிறது. தலையில் காவி வண்ண முண்டாசு க ட்டி நின்ற கோலத்தில் திகழ்கிறார், இவர். இந்த அழகர் திருக்
கோயிலில் எம்பெருமானைப் பாதுகாக்கும் அரும்பணி ஆற்றுகிறார் இவர்.

படியிறங்கி வெளியே வந்தால், சரஸ்வதி நாச்சியாரை தனி சந்நதியில் தரிசிக்கலாம். அவரை அடுத்து தசாவதார அர்ச்சாவதாரங்கள் வரிசையாக, தனியே அமைந்திருக்கின்றன. ஆழ்வார்களும் ஆசார்யார்களும் தாங்களும் தனி சந்நதி கொண்டு, பெருமாள் சேவையில் ஆழ்ந்திருக்கிறார்கள். உயிர் த்துடிப்புள்ள, ஆனால் வேறெந்த பிரதிபலனும் எதிர்பாராத அருஞ்சேவையில் கல்லாக சமைந்துவிட்டது போலவே அவர்கள் தோற்றம் அளிக்கிறார்கள். சாளக்கிராம தரிசனமும் தவிர்க்கக் கூடாத ஒன்று. இவை இங்கு நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. இவற்றிற்கு அபிஷேகம் செய்த தீர்த்தம், தினமும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிராகார வலம் வரும்போது கல்யாண சுந்தரவல்லித் தாயாரின் கருணை முகத்தை தரிசிக்கலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த சந்நதியில் முகூர்த்த உற்சவம் நடைபெறுகிறது.

தாயாருக்கு முன்னால் கல்லாலான ஒரு சிறு மேடை. அந்த உற்சவ நாளில் தாயாரின் உற்சவர் விக்ரகத்தை அந்த மேடையில் நிறுத்தி வழிபாடுகளை மேற்கொள்கிறார்கள். அது ஒவ்வொரு வெள்ளியும் கொண்டாடப்படும் புனித மேடை என்பதால், பக்தர்கள் அதனை மிதிக்காதபடி, சுற்றிக்கொண்டு சென்று சந்நதிக்குள்ளிருக்கும் தாயார் மூலவரையும் உற்சவரையும் வணங்குகிறார்கள்; பிறகு பிரசாதம் பெற் றுக்கொண்டு அந்த மேடையைச் சுற்றியபடி சந்நதியை விட்டு வெளியே செல்கிறார்கள். உற்சவ மேடையை மிதிக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு, தரிசன வரிசையில் ஒரு ஒழுங்கைக் கடைபிடிக்க வைத்திருப்பது, பாராட்டத்தக்க உத்தி. தாயார் தரிசனத்துக்குப் பிறகு பிராகாரத்தில் ஒரு குறுகலான வழியைக் காணலாம். இரண்டே படிகள் கொண்ட, ஒரு சமயத்தில் ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய அந்த வழியில் சென்றால், திடீரென்று ‘ஹோ’வென்று விரிகிறது ஒரு பெரிய மண்டபம்!

தாயாரிடம் ஆசி பெற்றுக்கொண்டு, அந்தப் பிராகாரத்தை மேலும் வலம் வந்தால், இடது பக்கத்தில் பல படிகள் கொண்ட கட்டைக் காணலாம். அதில் ஏறி சக்கரத்தாழ்வாரை சந்திப்பதுதான் வழி பாட்டு முறை. அந்தக் குறுகிய வழி, பூஜைகளை நிறைவேற்றும் பட்டர்களும் கோயில் நிர்வாகிகளும் சென்று வருவதற்கானது என்று தெரிந்தது. அங்கே சக்கரத்தாழ்வார் சந்நதி கொண்டிருக்கிறார். இவரையும் வலம் வந்து ஆனந்த தரிசனம் கண்ட நிறைவில் நடை பயின்றால், தனி சந்நதியில் யோக நரசிம்மர் சற்று கோபமாகவே உற்று நோக்குகிறார். பிரகலாதனை மட்டுமல்லாமல், இந்த பூவுலகத்தையே காக்க, ஹிரண்யனை வதைத்து, கோரத்தாண்டவம் ஆடிய நரசிம்மர், வெகு காலத்துக்கு அந்தக் கோப வெப்பம் தணியாமலேயே இருந்தார் என்கிறது புராணம்.

பிரகலாதன், மஹாலட்சுமி, சரபேஸ்வரர் என்று ஆளாளுக்கு தம் பங்காக அவரது கோபத்தைத் தணிக்க முயற்சித்தார்கள் என்றும் ஆனாலும் அவர்கள் கண்ணோட்டத்தில் அவர் கோபத்தீ தணிந்ததுபோலத் தோன்றினாலும், இன்னும் வதைக்கப்பட வேண்டிய அரக்கர்களை நினைத்தாரோ என்னவோ நரசிம்மர் உள்ளத்துக்குள் கோபம், தணல் கட்டி, கனன்றுகொண்டுதான் இருந்தது. இந்தத் தலத்தில் அந்தக் கோபத்தை மனித முயற்சியாலும் தணிக்கும் வழிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது நரசிம்மர் அமர்ந்திருக்கும் பீடத்துக்கு மேல் விதானத்தில் ஒரு துவாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.

அதன் வழியே தினமும் இவருக்கு எண்ணெய், பால், தயிர் மற்றும் நூபுர கங்கை தீர்த்தத்திலிருந்து எடுத்துவரப்படும் நீராலும் திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது. அவ்வாறு செய்யும்போது அவர் சிரசிலிருந்து கோபாக்கினி ஆவியாகி மேலே செல்வதாக ஐதீகம். எந்த மனிதரின் நல்வாழ்வுக்காக தீயோரை அழிக்கக் கடுங்கோப விரதம் கொண்டிருக்கிறாரோ, அந்த நரசிம்மர், அதே மக்கள் தன் கோபத்தைத் தணிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் கண்டு, மனம் குளிர்கிறார். அதனாலேயே இவர் யோக நரசிம்மராகவும் திகழ்கிறார்.    

No comments:

Post a Comment