Wednesday, January 9, 2013

அண்ணாவை பெரியாருக்கு அடையாளம் காட்டிய திருப்பூர்


திருப்பூரில் கடந்த 1934ம் ஆண்டு செங்குந்தர் (நெசவாளர்) மாநாடு நடைபெற்றது. நொய்யல் ஆற்றின் தென்கரையில் இப்போது வளர்மதி பாலத்தின் தென்புறம் உள்ள கிழமேல் சாலையில், எம்ஜிபி முதல் கஜலட்சுமி திரையரங்கு வரை அப்போது காலி இடமாக இருந்தது. அங்கு தான் பொது நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த மாநாடும் அந்த இடத்தில்தான் நடத்தப்பட்டது.

அந்த மாநாட்டின் சிறப்புச் சொற்பொழிவாளர் பெரியார் ஈ.வெ.ரா. இந்த மாநாட்டிற்கு அண்ணாவும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது அண்ணாவுக்கு வயது 25. (இதுதான் அண்ணாதுரை எனும் பெயரில் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி) அந்த மாநாட்டில் அண்ணா பேசுவார் என்று அறிவிக்கப்பட்டதும் ஒரு குள்ளமான உருவம் அழகான தமிழில் அடுக்குமொழியில் இனிய குரலில் அற்புதமாக பேசியதில் அடிக்கடி பலத்த கரவொலியும், மகிழ்ச்சி ஆரவாரமும் ஏற்பட்டன. அண்ணாவுக்கு அது கன்னிப் பேச்சு.

பெரியாருக்கோ வியப்பு. பேசி முடித்ததும் அண்ணாவை அருகில் அழைத்து உட்காரவைத்து, நல்லாப் பேசுனீங்க. ஊரு காஞ்சிபுரமா? என்ன உத்தியோகம் பார்க்கிறீங்க?“ என்று கேட்டார். அதற்கு, உத்தியோகத்தைத் தேடிக்கிட்டிருக்கேன் அய்யா“ என்று சொன்னார். சரி என்னோட வந்திடுங்க ஈரோட்டுக்கு“ என்றார் பெரியார். ஊருக்குப் போய் வீட்டில் கலந்து பேசி பிறகு வருகிறேன்“ என்றார் அண்ணா. இதுவே பெரியார் அண்ணா முதல் சந்திப்பு.

அதுவரை பெரியாரை குடியரசு பத்திரிகை மூலமே அறிந்து வைத்திருந்த அண்ணாவுக்கு, பெரியாரை நேரில சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தது திருப்பூர். இந்த சந்திப்புக்கு பிறகுதான் பெரியாரின் கனிவான கவனிப்புக்கு உள்ள னார் அண்ணா.
திராவிட இயக்க வரலாற்றில் புதிய பரிணாமம் உருவாக அடித்தளமாக திருப்பூர் அமைந்துளளது என்பதில், திராவிட இயக்க உணர்வாளர்கள் இன்றும் பெருமை கொள்கின்றனர்.

திருப்பூர் ரயில் நிலையம் முன்பு இருவருக்கும் ஒரே இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பெரியார், அண்ணா இருவருக்கும் ஒரே இடத்தில சிலை அமைக்கப்பட்டுள்ளது திருப்பூரில் மட்டும்தான். இருவரது சந்திப்பும் நிகழ்ந்து 75 ஆண்டுகள் (1934-2009)நிறைவடைந்ததை நினைவு கூறும் வகையில், கடந்த 2009ம் ஆண்டில் இங்கு சிலை அமைக்கப்பட்டது.

No comments:

Post a Comment