Wednesday, January 9, 2013

தேனி மாவட்டத்தின் முக்கிய இடங்கள்


 

மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட புதிய மாவட்டம். உத்தம பாளையம், பெரிய குளம், ஆண்டிப்பட்டி ஆகிய மூன்று வட்டங்களையும் எட்டு ஊராட்சி ஒன்றியங்களையும் உள்ளடக்கியது. மேற்கு மலைத் தொடர் சூழ அமைந்திருக்கும் அழகிய மாவட்டம் விவசாயம்தான் இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத் தொழில். பெரியாறுடன், முல்லையாறும் சேர்ந்து இந்த மாவட்டத்தைச் செழிப்பாக்கி வைகையில் கலக்கின்றன.

சுற்றுலாத் தலங்கள்

தேனி மாவட்டத்தில் முல்லை, வைகை, வராக நதிகள் பாய்ந்து வளம் சேர்க்கின்றன. இதனால் இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் பச்சைப்பசேல் என்று இயற்கை அழகுடன் உள்ளது. இம்மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்கள் என்று 8 இடங்கள்உள்ளது.

வைகை அணை
முல்லைப் பெரியாறு அணை
சோத்துப்பாறை அணை
சுருளி நீர் வீழ்ச்சி
கும்பக்கரை நீர் வீழ்ச்சி
மேகமலை
வெள்ளிமலை
போடி மெட்டு


ஆண்டிப்பட்டி

வருசநாடு மலைப்புற கிராமங்களை உள்ளடக்கிய வட்டம் ஆண்டிப்பட்டி வட்டம். கைத்தறியும், நெசவும் முக்கியத் தொழில்கள். கிராமங்கள் பார்க்க அழகானவை.

பாலசுப்பிரமணியர் கோயில்

இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட முருகன் கோயில், தரையைப் பிளந்து கொண்டு, தன் தேவியரோடு முருகன் காட்சிதந்து கொண்டிருக்கும் கோயில்.

போடிநாயக்கனனூர்

மேற்து மலைத் தொடர்ச்சியின் அடித்தளத்தில் அமைந்துள்ள ஊர். ஏலக்காய், காபி, மாம்பழம் ஆகியவற்றுக்கு முக்கியமான சந்தையாக விளங்குகிறது.

பொடிமேடு

4500 அடி உயரத்தில் உள்ள அழகியவனப்பகுதி. போடி நாயக்கனனூரில் இருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ளது.

தேவதானப்பட்டி

மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அம்மன் கோயில் தேவதானப்பட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயிலின் கருவறை திறக்கப்படுவதில்லை. எனினும் பூஜைகள் உண்டு.

சின்னச் சுருளி

தேனியிலிருந்து 54 கி.மீ.தொலைவில் உள்ள இந்த அருவி, கோம்பைத்தெழு கிராமத்துக்கு அருகில் உள்ளது. மேகமலை உச்சியிலிருந்து இது பிறந்து வருகிறது.

சின்னமனூர்

சங்க இலக்கியத்தில் இடம்பெற்றது. ஹரிகேச நல்லலூர் இதன் பழைய பெயர். சுற்றுப்புறக் கிராமங்களுக்கு இந்த நகரம்தான் சந்தையாக விளங்குகிறது. முல்லையாற்றின் கரையில் சிவகாமி அம்மன் கோயில் உள்ளது.

காமாட்சி அம்மன் கோயில்

இந்தக் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது. பெரிய குளத்திலிருந்து 23 கி.மீ. தொலைவில்,தேவதானப்பட்டி காமாட்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. வைகாசி மாதம் நடக்கும் திருவிழா சிறப்பானது.

கும்பக்கரை அருவி

பெரிய குளம் கும்பக்கரை அருவி இயற்கையான எழில் சூழ்ந்த பகுதி. இது ஒரு சுற்றுலாத்தலம். பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது. கொடைக்கானலில் தோன்றி, மலைவழியாக வந்து அடிவாரக் குன்றில் அருவியாகப் பொழிகிறது. பெரிய குளத்திலிருந்து பேருந்து வசதி உண்டு. தங்கும் வசதி இல்லை.

குச்சனனூர் சனீஸ்வரர் கோயில்

இந்தியாவிலேயே சனிபகவானுக்கான தனிக்கோயில் இது ஒன்றுதான். இங்குள்ள கருவறை மூர்த்தியே சனிபகவான்தான். இங்குள்ள சனிக் கடவுள் சுயம்புவாக எழுந்ததாகக் கூறப்படுகிறது.இக்கோயிலுக்கு முன்பாக, சுரபி நதி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆடி மாத சனிக்கிழமை இங்கு திருவிழா நடக்கும்.

மாவூத்து வேலப்பர் கோயில்

ஆண்டிப்பட்டியிலிருந்து 20 கி.மீ. தொலைவில் வருசநாட்டின் குன்றடுக்கில் அமைந்துள்ளது. குன்றின் உச்சியில் குமரன் கோயில் கொண்டுள்ளார். மாமரங்கள் அடர்ந்த பகுதி என்பதால் இதற்கு மாவூத்து என்று பெயர் வந்துள்ளது. இந்தக் குன்றத்துக் கோயில் காலை 7.30-8.30 மணி வரையிலும், மாலை 4.30-5.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

சோத்துப்பாறை அணை

சோத்துப்பாறை அணைக்கட்டு் பெரிய குளத்திலிருந்து 12 கி.மீ. தோலைவில் உள்ளது. வராகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இது. அழகான சுற்றுலா அணை.

மேகமலை

கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் உள்ள மலை. தேயிலை மற்றும்ஏலக்காய் விவசாயம் இங்கு முக்கியமானது.

கைலாச நாதர் குகைக் கோயில்

சுருளி அருவிக்கு மேலே 800 மீ. உயரத்தில் இந்தக் குகைக் கோயில் உள்ளது. சிலப்பதிகாரத்தில் இந்த மலையைப் பற்றி பாடப்பட்டுள்ளது. இந்த அருவியின் நீர், நோய்களைத் தீர்க்கக் கூடியது என்று நம்புகிறார்கள்.

சுருளி-அபுபக்கர் மஸ்தான் தர்கா

சுருளியில் உள்ள இந்த அபுபக்கர் மஸ்தான் தர்கா புனிதப் பயணம் செய்பவர்களுக்கு ஒரு திருத்தலம். 1630களில் வாழ்ந்த இஸ்லாமியச் சித்தர் அபுபக்கர் மஸ்தான். இவருடைய சமாதிதான் இது.

தீர்த்தத்தொட்டி

மதுரை-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேனி மற்றும் போடி நாயக்கனூருக்கு இடையே அமைந்துள்ளது. இந்த இயற்கையின் நீரூற்று. இங்கு சுப்பிரமணியர் கோயிலும் உள்ளது.

புலி அருவி

தேனியிலிருந்து போடிக்கும், போடி மேட்டுக்கும் இடையில் மூணாறு சாலையில் அமைந்துள்ள இந்த அருவியின் நீர், மிக இனிமையானது.

வைகை அணை

தழிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம். ஆண்டிப் பட்டிக்கு அருகே முல்லையாற்றின் குறுக்கே இந்த அணைக் கட்டு கட்டப்பட்டுள்ளது. தேனியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.இந்த அணைக்கட்டில் குழந்தைகள் பூங்கா, விலங்குகள் காப்பகம் போன்ற சுற்றிப் பார்க்கத்தக்க அம்சங்கள் நிறைய உள்ளன.

சுருளி அருவி

கம்பத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது சுருளி மலை. சுருளி மலை பச்சிலைகளுக்குப் பெயர் பெற்றது. மலைப்பாதையின் உட்புறத்தில், 1/2 கி.மீ. தொலைவில் உள்ளது. சுருளி அருவி வேலப்பர் இந்த மலையில் எழுந்தருளி உள்ளார். சுருளி அருவியைச் சுற்றி 18 குகைகள் உள்ளன.

பெரிய குளம்

தேனி மாவட்டத்தின் முக்கிய நகரம் பெரிய குளம். கொடைக்கானலின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம், தேனியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது.சேலத்துக்கு அடுத்து மாம்பழம் அதிகமாக விளையும் பகுதி. கொடைக்கானலைப் போலவே எப்போதும் குளுகுளுவென்றிருக்கும் இந்த ஊருக்கு தழிழக நகரங்கள் அனைத்துக்கும் சாலைவழி இணைப்பு உண்டு. தங்கும் விடுதிகள் உண்டு.

வீரபாண்டி

தேனியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த இடத்தில் 14 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் வீரபாண்டிய மன்னனால் கட்டப்பட்ட கௌமாரியம்மன் கோயில் உள்ளது. கண்ணீஸ்வரமுடையாருடன் உறை கௌமாரி அம்மனை வழிபட்டால், கண்நோய் தீரும் என்பது நம்பிக்கை.

வீரப்ப அய்யனார் கோயில்

தேனியிலிருந்து 3 கி.மீ. க்கு அப்பால், அல்லி நகரத்திலிருந்து 3 கி.மீட்டரில் அய்யனார் எழுந்தருளியுள்ளார். சித்திரை முதல் நாள் இங்கு திருவிழா சிறப்பாக இருக்கும்.

வெள்ளிமலை

தேனியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் வருசநாடு மலைத்தொடரில் உள்ள அடர்காட்டுப் பகுதியான இங்கு பூக்களும் தாவரங்களும் மண்டிக் கிடக்கின்றன.

No comments:

Post a Comment