Wednesday, January 9, 2013

அமராவதி முதலைப்பண்ணை திறப்பு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்



உடுமலை, : ஆனைமலை புலிகள் காப்பகம் திறக்கப்பட்டதைதொடர்ந்து 4 மாதமாக மூடப்பட்டுக் கிடந்த அமராவதி முதலைப்பண்ணையும் நேற்று திறக்கப்பட்டது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் முதலைகளை பார்த்து ரசித்தனர். நாடு முழுவதும் புலிகள் காப்பக பகுதிக்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க தடை விதித்து கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து ஜூலை 26ம் தேதி முதல் புலிகள் காப்பக பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, உடுமலை, அமராவதி வனச்சரக பகுதியிலும் இந்த தடை அமலுக்கு வந்தது.

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணை அருகே உள்ள முதலை பண்ணையை பார்க்கவும், சின்னாறு வனத்தில் டிரெக்கிங் செல்லவும், அங்குள்ள வனத்துறை விருந்தினர் விடுதியில் தங்கவும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், புலிகள் காப்பக பகுதியில் 20 கிமீ சுற்றளவில் மட்டும் சுற்றுலா பயணிகளை விதிமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதன் தொடர் நிகழ்வாக, 4 மாதங்களுக்குப்பின் நேற்று அமராவதி முதலை பண்ணை திறக்கப்பட்டது.

அதை அறிந்ததும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் கூறுகையில், சுற்றுலா இடங்களை பார்க்க ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வசூலிக்கப்படும். வனத்தில் வாட்ச் டவர்களில் ஏறி இயற்கை அழகை ரசிக்கலாம். வழக்கம்போல் டிரெக்கிங் அழைத்து செல்லப்படுவார்கள். சின்னாறு விருந்தினர் விடுதியிலும் தங்கலாம். சின்னாறு ரோட் டில் உள்ள ஏழுமலையான் கோயிலுக்கு இனி இரவிலும் பக்தர்கள் செல்லலாம் என்றார்.

No comments:

Post a Comment