Wednesday, January 9, 2013

புத்துணர்வு முகாமில் புகுந்த காட்டு யானை


கூடலூர்,:முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமில் நேற்று திடீரென புகுந்த காட்டு யானையை கும்கி யானை அரவணைத்து வனத்துக்கே திருப்பி அனுப்பியது. சுற்றுலா பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம் கடந்த 26ம் தேதி துவங்கியது. அன்றைய தினமே, நீலகிரி மாவட்டம் முதுமலை மற்றும் கோவை மாவட்டம் டாப்சிலிப்பில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கும்(கும்கிகள்) புத்துணர்வு முகாம் துவங்கியது. ஜன. 12ம் தேதி வரை முகாம் நடக்கிறது.

முதுமலை முகாமில் உணவு வழங்குவதற்காக நேற்று மாலை வளர்ப்பு யானைகள் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. இதை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர். வசீம்(45) என்ற யானை மற்ற யானைகளிடம் இருந்து சற்று தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தது. இது குடியிருப்பு மற்றும் விளைநிலங்களில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பயிற்சி பெற்றது. அப்போது எதிர்பாராத வகையில், காட்டு யானை ஒன்று வனத்தில் இருந்து வேகமாக வந்தது.

வசீம் அருகே நின்று உடலை சிலிர்த்தவாறே காட்டு யானை அதை எதிர்க்க தயாரானது. ஆனால், வசீமோ ஆக்ரோஷம் கொள்ளாமல், அதை துதிக்கையால் அரவணைத்தவாறே, முகாமுக்குள் நுழையாமல் தடுத்தது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். சில நிமிடங்கள் வரை அங்கு நின்ற காட்டு யானை, வசீமை எதிர்த்து உள்ளே நுழைய முடியாமல் காட்டுக்கே திரும்பியது.

காட்டு யானைகள் நுழையும் அபாயம்:

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் உள்ளவை, கோயில் யானைகள். காட்டு யானைகளை எதிர்த்து பழக்கப்பட்டவை அல்ல. தேக்கம்பட்டி முகாமில் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளபோதிலும், அங்கு காட்டுயானைகள் புகும் அபாயம் நீடிக்கிறது. காட்டு யானைகள் வந்தால் சிக்கல் நேரும் என்று கூறுகின்றனர் வன உயிரின ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment