பக்தித் தமிழ் 9
அன்றைக்குச் சிவபெருமான் மீது பார்வதி தேவிக்கு ஏதோ செல்லக் கோபம். அவரோடு பேசாமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருந்தாள். ஊடல் என்று வந்துவிட்டால், கடவுளாகவே இருந்தாலும் கொஞ்சம் இறங்கிச் செல்வதுதானே முறை? சிவபெருமான் பார்வதியை நெருங்கினார், ‘‘என் மீது என்ன கோபம் தேவி?’’ என்று புன்னகையுடன் கேட்டார். ம்ஹூம், பதில் வரவில்லை. கொஞ்சம் பெரிய கோபம்தான் போலிருக்கிறது. ஆனால், எதற்காகக் கோபம் என்று சொன்னால்தானே ஏதாவது செய்து கோபத்தைத் தணிக்கலாம்? அதற்கும் பார்வதி இடம் தரவில்லை. தொடர்ந்து மௌனமாகவே எங்கேயோ ஒரு திசையைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் சிவபெருமான் குழம்பிக்கொண்டிருந்த நேரம், எங்கிருந்தோ ஒரு பலமான ஓசை கேட்டது.
அந்தக் கயிலாய மலையே பலமாக நடுங்கியது. அவ்வளவுதான், பார்வதி தேவி தன்னுடைய செல்லக் கோபத்தை மறந்தாள். பயத்தில் வேகமாக ஓடிச் சென்று சிவனை அணைத்து நின்றாள். ஒருவழியாக, ஊடல் நாடகம் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த ஊடலை முடித்து வைத்த அந்தச் சத்தம் எங்கிருந்து எழுந்தது? கயிலாயத்தையே குலுங்கச் செய்யுமளவு பலம் வாய்ந்த ஒலியை எழுப்பியவர் யார்? சிவனும் பார்வதியும் ஆவலுடன் கீழே நோக்கினார்கள். அங்கே ஒரு கடற்கரையில், கையில் வில்லுடன் கம்பீரமாக நின்றிருந்தார் ராமர். அவர் முகத்தில் கோபம். ராமர் தாமரை மலர் போன்ற முகம் கொண்டவராயிற்றே. ‘சாந்தமூர்த்தி’ என்று அவரைப் புகழ்வார்களே. அவருக்குக் கோபம்கூட வருமா? எப்போதும் கோபப்படுவதும் தவறு, கோபம் இல்லாமலே வாழ்வதும் தவறு, தேவையான நேரங்களில், தேவையான விஷயங்களுக்காகக் கோபப்பட்டுதான் தீரவேண்டும்.
சீதையைத் தேடி ராமர் பல திசைகளில் வானரப் படையினரை அனுப்பி வைத்தார். சில வாரங்கள் கழித்து, சீதை இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருக்கும் செய்தி அனுமன் மூலமாக அவருக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் உடனடியாக அங்கே சென்று தேவியை மீட்கமுடியாதபடி கடல் குறுக்கிட்டது. ஆகவே, அந்தக் கடற்கரையிலேயே தியானத்தில் அமர்ந்துவிட்டார் ராமர். அடுத்த ஏழு நாள் வருணனை நினைத்து மந்திரம் சொன்னார். ஆனால் இத்தனை மரியாதையாகக் கேட்டபிறகும், வருணன் வரவில்லை, பதில் சொல்லவில்லை, கடலும் வழிவிடவில்லை. அதனால்தான் ராமருக்குக் கடும் கோபம். ‘ஒரே அம்பில் இந்தக் கடலைத் தீய்த்துவிடுகிறேன் பார்!’ என்றபடி எழுந்து நின்றார். கையை நீட்டினார், அதில் லட்சுமணன் வில்லை வைத்தார்.
அந்தக் காலத்தில் போர் செய்வதற்கு முன்னால், வில்லின் நாணை இழுத்துப் பிடித்துப் பலமாக ஒலி எழுப்புவது ஒரு மரபு. அதைக் கேட்டு எதிரிப் படையைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் பயந்து நடுங்குவார்கள், சண்டை தொடங்குவதற்கு முன்பாகவே காலில் விழுந்துவிடுவார்கள் என்பது நம்பிக்கை. அதன்படி, ராமரும் எடுத்த எடுப்பில் வருணன் மீது அம்பு எய்யவில்லை, தன்னுடைய வீரத்துக்கு ‘ட்ரெய்லர்’ காட்டுவதுபோல், ஒருமுறை நாணை இழுத்துவிட்டார். அந்தச் சத்தம் வருணனுக்கு மட்டுமா கேட்டது? எல்லா உலகங்களையும் கடந்து கயிலாயத்துக்கே சென்று முழங்கியது, அங்கே சிவபெருமான், பார்வதியின் ஊடலையே தீர்த்துவைத்துவிட்டது.
ராமாயணக் கதையினூடே, இப்படி ஓர் அழகான நாடகத்தைப் பதிவு செய்கிறவர், கவிச்சக்கரவர்த்தி கம்பர். அந்தப் பாடல்:
வாங்கு வெம் சிலை, வாளி பெய் புட்டிலும் மலைபோல்
வீங்கு தோள்வலம் வீக்கினன், கோதையை விரலால்
தாங்கி, நாணினைத் தாக்கினன், தாக்கிய தமரம்
ஓங்கு முக்கணான் தேவியைத் தீர்த்து உளது ஊடல்
லட்சுமணன் கொடுத்த கொடிய வில்லை ராமன் தன்னுடைய கையால் வாங்கினான். அம்புகள் நிறைந்த புட்டிலையும் பெற்றுக்கொண்டான். மலை போன்ற தன்னுடைய தோள்களின் வலதுபக்கத்தில் அதைக் கட்டிக்கொண்டான். விரல்களுக்கு அணியும் கவசங்களை அணிந்துகொண்டான். போருக்குத் தயாரானான். தன்னுடைய மாபெரும் வில்லின் நாணை இழுத்துப் பிடித்துத் தாக்கினான். அவ்வளவுதான், அதனால் எழுந்த சத்தம் அனைத்து உலகங்களையும் தாண்டிச் சென்றது. பெருமையில் சிறந்த, மூன்று கண்களைக் கொண்ட சிவபெருமானின்மீது அவன் மனைவி பார்வதி கொண்ட ஊடலைக்கூடத் தீர்த்துவிட்டது! இறைவனை வழிபடுவதற்குப் பல வழிகள் இருக்கின்றன.
‘கடவுளை மனத்தில் நினைத்துக்கொண்டாலே போதும்’ என்பது ஒரு கட்சி, ‘வீட்டில் உள்ள சுவாமி படத்துக்கு வெறுமனே அறுகம்புல்லைத் தூவினால் நல்லது’ என்று ஒரு கட்சி. ‘தினமும் கோயிலுக்குப் போகவேண்டும்’ என்று ஒரு கட்சி, பிரமாண்டமான மேடை அமைத்துப் பூஜை செய்யவேண்டும்‘ என்பது இன்னொரு கட்சி, ‘ஏழை எளியவர்களுக்குத் தான தர்மங்கள் செய்யவேண்டும்’ என்று ஒரு கட்சி... இவை அனைத்தையும் பட்டியல் போடுவது சாத்தியமே இல்லை. இத்தனை கட்சிகளில் எது சரி? எது தவறு? இதைத் தீர்மானிப்பது மிகவும் சிரமமாக உள்ளது. நல்லவேளையாக, பல பெரியோர்களின் வழிபடும் முறைகள் அழகான பக்திப் பாடல்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றைக் கவனித்துக் காப்பி அடித்தாலே போதும், நம்முடைய வேலை எளிதாகிவிடும்.
உதாரணமாக, இரண்டு பாடல்களைப் பார்ப்போம், இவை இரண்டுமே மிகச் சிறந்த பக்தர்கள் அருளியவை. ஒன்று, திருஞானசம்பந்தர், இன்னொருவர், நம்மாழ்வார். சிவபெருமானைப் பற்றித் திருஞானசம்பந்தரே ஏராளமான அற்புதப் பதிகங்களைப் பாடியிருக்கிறார். ஆனால் நாம் இங்கே பார்க்கவிருப்பது, அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை. சேக்கிழார் பெருமான் விவரிக்கும் பாடல்கள். இவை ‘திருத்தொண்டர் புராணம்’ என்கிற ‘பெரிய புராண’த் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அப்போது திருஞானசம்பந்தர் ஊர் ஊராகப் பயணம் செய்து சிவாலயங்களைத் தரிசித்துக்கொண்டிருந்தார். ஆங்காங்கே பல சிறந்த பாடல்களைப் பாடி அருளினார். இந்தப் பயணத்தின்போது ஒருமுறை திருஞானசம்பந்தர் திருவாரூருக்கு வருகிறார். அங்கே உள்ள சிவன் கோயிலினுள் பக்திப் பரவசமாக நுழைகிறார். இந்தக் காட்சியைச் சேக்கிழார் இப்படி அழகுறப் பதிவு செய்கிறார்:
மாடு சூழ் திரு வலம் கொண்டு, வணங்கி,
கூடு காதலில் கோபுரம் பணிந்து, கை குவித்து,
தேடும் மால் அயர்க்கு அரியராய்ச் செழுமணிப்புற்றில்
நீடுவார் முன்பு நிலம் உறப் பலமுறை பணிந்தார்
பணிந்து வீழ்ந்தனர், பதைத்தனர், பரவிய புளகம்
அணிந்த மேனியோடு ஆடினர், பாடினர்,
அறிவில் துணிந்த மெய்ப்பொருள் ஆனவர் தமைக்
கண்டு துதிப்பார்,
தணிந்த சிந்தையின் விரைந்து எழு வேட்கையில்
தாழ்ந்தார்.
முதலில், கோயிலை வலம் வருகிறார் ஞானசம்பந்தர். முறைப்படி வணங்குகிறார். மனத்தில் எழுகின்ற அன்பினால், அங்குள்ள கோபுரத்தைப் பார்த்துப் பணிகிறார், கை குவிக்கிறார். அடுத்து, இறைவனைத் தரிசிக்கிறார். அவன் எப்பேர்ப்பட்டவன் என்பதை ‘தேடும் மால் அயர்க்கு அரியர்’ என்று சுருக்கமாகச் சொல்லிவிடுகிறார் சேக்கிழார். அந்தக் கதை எல்லாரும் கேள்விப்பட்டதுதான். ஒருமுறை சிவன் ஒளிப்பிழம்பாக விண்ணையும் மண்ணையும் தொட்டுக்கொண்டு நிற்க, அவருடைய முடியைத் தேடிப் பிரம்மதேவர் மேலே பயணம் செய்தார். அடியைத் தேடி மகாவிஷ்ணு தரையைத் துளைத்துக்கொண்டு சென்றார். ஆனால், அவர்கள் இருவருக்குமே சிவனின் எல்லைகள் அகப்படவில்லை. அதனால்தான், ‘தேடுகின்ற மால் (திருமால், விஷ்ணு), அயன் (பிரம்மன்) இருவருக்கும் அரிதானவன்’ என்று சிவன் புகழப்படுகிறார்.
அப்படிப் பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் கிடைக்காத அரியனாக இருந்த சிவன், இங்கே பக்தர்களுக்கு எளியனாகக் காட்சி தருகிறான். அவனைக் கண் குளிரத் தரிசனம் செய்கிறார் திருஞானசம்பந்தர். சிவபெருமானைக் கண்டதும் ஞானசம்பந்தரின் உடல் முழுவதும் பரவசத்தில் நடுங்குகிறது, நிலத்தில் உடம்பு முழுவதும் படும்படி விழுந்து வணங்குகிறார். அதுவும் ஒருமுறை அல்ல, பலமுறை விழுந்து எழுந்தார். ஆனந்த பரவசத்தில் அவரது உள்ளம் பதைக்கிறது, உடல் முழுவதும் மயிர்க்கூச்செரிகிறது. அதனைப் ‘பரவிய புளகம் அணிந்த மேனி’ என்கிறார் சேக்கிழார். அதாவது, அவர் உடம்பில் வேறு அலங்காரங்களே இல்லையாம், இறைவனைக் கண்டு புல்லரித்த கேசம்தான் அவருக்கு ஆபரணமாம்! அந்த அற்புத நிலையில், திருஞானசம்பந்தர் மகிழ்ச்சியாகப் பாடுகிறார், ஆனந்தக் கூத்தாடுகிறார். தான் என்ன செய்கிறோம் என்றே அவருக்குப் புரியவில்லை.
அவர் ஏன் இவ்வளவு தூரம் உணர்ச்சிவயப்படவேண்டும்? எல்லாரும்தான் கோயிலுக்குப் போகிறோம், கடவுளைப் பார்க்கிறோம், அது ஒரு பெரிய விஷயமா? நீங்களும் நானும் பார்க்கிற கடவுளும் திருஞானசம்பந்தர் போன்ற ஞானிகள் பார்க்கும் கடவுளும் ஒருவர் அல்ல. சேக்கிழார் அதனை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்துகிற அழகைப் பாருங்கள்: ‘அறிவில் துணிந்த மெய்ப்பொருள், அதாவது இத்தனை நாளாக ஞானசம்பந்தர் தன்னுடைய மனத்துக்குள் உருவாக்கி வைத்திருந்த கடவுளின் உருவம். அது இப்போது இங்கே கண்ணெதிரில் தெரிகிறது. அதனால்தான் அவருக்கு இத்தனை பரவசம், மகிழ்ச்சி! அந்த ஆனந்தத்தில், அவர் இறைவனைத் துதிக்கிறார், உள்ளத்தில் மேலும், மேலும் பொங்கிக்கொண்டிருக்கிற விருப்பத்தோடு வணங்குகிறார். செம்மையான சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பாடத் தொடங்குகிறார்.
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. அது இப்போது நம் கண்ணெதிரே நிகழ்வதுபோல் வெறும் வார்த்தைகளாலேயே வீடியோ படம் பிடித்துக் காட்டிவிடுகின்றன இந்தப் பாடல்கள். பக்தி என்பது வெறுமனே கரம் குவிப்பது அல்ல, அவனுக்குள் ஒருவனாக நாமும் ஒன்றிவிடுவதுதான் என்று தெளிவாக்குகின்றன. அதெல்லாம் சரி, ஆண்டவனைப் பார்க்கும்போது எல்லாருக்கும் அப்படி ஒரு பரவசம் வந்தே தீருமா? ஒருவேளை வராவிட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது, நம்மாழ்வாரின் அற்புதமான பிரபந்தப் பாடல் ஒன்று. அதைப் பார்ப்பதற்கு முன்னால் ஒரு சின்னக் கதை.
ஒரு வீட்டில் ஏதோ விசேஷம், அதை முன்னிட்டு ஒரு பஜனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அக்கம்பக்கத்திலிருந்து பலர் அதில் கலந்து கொண்டார்கள். அங்கே ஓர் இளைஞன். கொஞ்சம் முற்போக்கான சிந்தனைகளைக் கொண்டவன். அவனுடைய அம்மாவை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தான். ‘‘வாடா, உட்கார்ந்து நீயும் நாலு பாட்டுப் பாடு!’’ என்றார் அம்மா. ‘‘அதெல்லாம் முடியாது’’ என்றான் அவன். ‘‘இவங்க பாடறது என்ன பாஷைன்னே எனக்குப் புரியலை, அப்படியே புரிஞ்சாலும் இந்தப் பூஜைக்கெல்லாம் அர்த்தம் தெரியலை, இதெல்லாம் தெளிவாத் தெரிஞ்சுக்காம, காரணம் புரியாம ஆட்டுமந்தை மாதிரி நான் அவங்க பின்னாடி போகமாட்டேன்.’’ ‘‘எனக்கு மட்டும் இதுக்கெல்லாம் அர்த்தம் தெரியுமாடா?’’ என்கிறார் அம்மா. ‘‘எல்லாரும் செய்யறாங்க, நானும் செய்யறேன். அவ்ளோதான்.’’
‘‘அது தப்பும்மா, காரணம் புரியாம ஒரு வேலையைச் செஞ்சா பலன் எப்படிக் கிடைக்கும்?’’ ‘‘அட அசடே’’ என்று அவன் அம்மா சிரித்தார். ‘‘டாக்டர் ஒரு மருந்து கொடுக்கறார், அதோட கெமிக்கல் ஃபார்முலா, அது நம்ம உடம்புல எப்படி வேலை செய்யுதுன்னு எல்லாம் தெரிஞ்சாதான் உடம்பு குணமாகுமா என்ன? அவர் சொல்றார், அப்படியே செஞ்சா பலன் உண்டு, அதுமாதிரிதாண்டா இதுவும்!’’ விஷயம் புரிந்துவிட்டதல்லவா? இப்போது கிட்டத்தட்ட இதேமாதிரி ஒரு கருத்தை நம்மாழ்வார் எப்படிக் காட்சிப்படுத்துகிறார் என்று பார்ப்போம்:
மைப் படி மேனியும் செந் தாமரைக்
கண்ணும் வைதிகரே
மெய்ப்படியால் உன் திருவடி சூடும்
தலைமையினார்,
எப்படி ஊர் ஆம் இலைக்கக் குருட்டு ஆம்
இலைக்கும் என்னும்
அப்படி யானும் சொன்னேன், அடியேன்
மற்று யாது என்பனே!
ஒரு கிராமத்தில் பல பசுக்கள். இடையர்கள் மேய்ச்சலுக்காக அவற்றைப் பக்கத்தில் உள்ள ஒரு காட்டுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவையும் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு ஊர் திரும்புகின்றன. அந்தக் கூட்டத்தில், ஒரு பசுவுக்கு மட்டும் கண் தெரியாது. அக்கம்பக்கத்தில் மற்ற பசுக்கள் நடப்பதை கவனித்து அதுவும் தட்டுத்தடுமாறி நடந்து வருகிறது. சிறிது நேரத்தில், அவர்களுடைய கிராமம் நெருங்கிவிட்டது. வீட்டை, வயலை, தோட்டத்தை, தொழுவத்தைப் பார்த்த உற்சாகத்தில் பசுக்கள் ‘‘ம்ம்மா’’ என்று சத்தமாகக் குரல் எழுப்புகின்றன. இதைக் கவனித்துக்கொண்டே இருந்த ஒருவன் கேட்கிறான், ‘‘என்னய்யா இது? மத்த பசுக்களெல்லாம் தங்கள் வீட்டைப் பார்த்துட்டுக் கத்துது, நியாயம். அந்தப் பசுவுக்குதான் கண்ணே தெரியாதே, அது எப்படிக் கத்துது?’’
‘‘அட முட்டாளே’’ என்று பக்கத்தில் இருந்தவர் அவன் முதுகில் தட்டுகிறார், ‘‘பசுவுக்குக் கண்தான் தெரியாது, காது கேட்குமில்லையா? மத்த பசுங்க கத்தினதும், நம்ம வீடு வந்துடுச்சுன்னு அது புரிஞ்சுகிச்சு, அதனால அதுவும் கத்துது.’’ ‘‘நீல நிற மேனியும் செந்தாமரைக் கண்ணும் கொண்ட இறைவனே, நானும் அந்தக் குருட்டுப் பசுவைப்போல்தான்’’ என்கிறார், நம்மாழ்வார். ‘‘உன்னுடைய திருவடியை வணங்கும் தகுதி எனக்கு இல்லை, ஆனால் அப்படிப்பட்ட தகுதியைக் கொண்ட பெரியவர்களை எனக்குத் தெரியும். அவர்கள் என்ன செய்கிறார்களோ, அதைப் பார்த்து நானும் அப்படியே செய்கிறேன், அவர்கள் சொல்வதைக் கேள்வி கேட்காமல் திருப்பிச் சொல்கிறேன், அவ்வளவுதான்!’’
No comments:
Post a Comment