Wednesday, January 9, 2013

வால்பாறையில் பேக்கேஜ் டூர்


 

வால்பாறை, :புலிகள் காப்பகங்களில் சுற்றுலா நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் விதித்த தடை நீக்கப்பட்டது. இதனால் கடந்த 4 மாதமாக மூடப்பட்டிருந்த கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பக சுற்றுலா தலங்கள் கடந்த 27-ம் தேதி முதல் திறக்கப்பட்டது. குரங்கு அருவி, 9வது கொண்டை ஊசி காட்சி முனை, சின்னக்கல்லார், நல்லமுடி பூஞ்சோலை, மானாம்பள்ளி ஆறு, சர்க்கார்பதி, டாப்சிலிப் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களை பார்க்க 2 நாள் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட சில இடங்களை மட்டும் பார்க்க ஒருநாள் போதும். கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 500-க்கு மேற்பட்ட பயணிகள் கூழாங்கல் ஆறு, சோலையாறு அணை, கீழ்நீரார், மேல்நீரார், பாலாஜி கோயில் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட்டு சென்றுள்ளனர். இவர்கள் மூலம் தங்கும் விடுதிகள், உணவகங்கள், வாடகை கார் பிசினஸ் சூடுபிடித்துள்ளது.

சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு வழிகாட்ட சுற்றுலா துறையோ, வனத்துறையோ இதுவரை அக்கறை காட்டவில்லை.
இந்நிலையில் வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு பேக்கேஜ் டூர் திட்டத்தை அமல்படுத்த வனத்துறை முடிவெடுத்துள்ளது. குழுவாக வரும் பயணிகளை வாகனம் மூலம் வனத்துறைக்கு உட்பட்ட சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்ல உள்ளனர். இதற்கான திட்டங்களை வனத்துறையினர் வடிவமைத்து வருகின்றனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இத்திட்டம் நிறைவேறுவதன் மூலம் பயணிகள் அலைக்கழிக்கப்படாமல், பாதுகாப்பான சுற்றுலாவை மேற்கொள்ள முடியும் என்று மானாம்பள்ளி வனச்சரகர் முகமதலி கூறினார்.

No comments:

Post a Comment