Wednesday, January 9, 2013

2வது சீசன் நீலகிரியில் துவங்கியது

குன்னூர், : நீலகிரியில் தற்போது 2வது சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த சீசன் நவம்பர் வரை நீடிக்கும். பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான பூங்காக்களில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது வண்ண வண்ண பூக்கள் பூத்து குலுங்குகின்றன. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 8 ஆயிரம் மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, பேன்சி, டேலியா உள்ளிட்ட மலர்கள் மலர்ந்துள்ளன. சனி, ஞாயிறு 2 தினங்கள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நேற்றும் பயணிகள் குவிந்தனர்.

இதேபோல் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, சிறுவர் பூங்கா, படகு இல்லம், தொட்டப்பெட்டா, டால்பின்நோஸ், லேம்ஸ்ராக் ஆகிய காட்சி முனைகளிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டது. வடமாநில சுற்றுலா பயணிகளும், புதுமணத் தம்பதிகளும் அதிகளவில் வந்திருந்தனர். இந்த இரண்டாவது சீசனுக்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஒரு லட்சம் மலர் செடிகளும், காட்டேரி பூங்காவில் 25 ஆயிரம் மலர் செடிகளும் நடவு செய்யப்பட்டுள்ளன. இங்கு குவிந்த சுற்றுலா பயணிகள், பூத்து குலுங்கிய மலர்களை ரசித்து பார்த்தனர். இந்த சீசனையொட்டி, தங்கும் விடுதிகள், அரசு ஓய்வு இல்லங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சீசனை நம்பியுள்ள ஏராளமான வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment