Wednesday, January 9, 2013

36 ஆண்டுகளாக கவர்ந்து வந்த முதலைப்பண்ணை மூடப்பட்டது


உடுமலை, :உச்சநீதிமன்ற உத்தரவை தொடர் ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணையில் 36 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை கவர்ந்து வந்த முதலைப் பண்ணை மூடப்பட்டது. இதனால் அமராவதி அணையின் மவுசு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இதன் அருகே 1976ம் ஆண்டில் முதலைப் பண்ணை துவக்கப்பட்டது. முதலைகளை காப்பாற்றும் வகையில் மாணவ, மாணவிகள், பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த பண்ணை அமைக்கப்பட்டது.

தற்போது இப்பண்ணையில் 94 முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 26 கிலோ மாட்டிறைச்சி, 9 கிலோ மீன்கள் இரையாக வழங்கப்படுகிறது. இங்குள்ள முதலைகள் நன்னீர் மற்றும் சதுப்பு நிலப்பகுதியில் வாழும் இனத்தை சேர்ந்தவை. பெண் முதலை 8 அடி நீளம், ஆண் முதலை 10 அடி நீளம் வரை வளரக்கூடியவை. முதலைப்பண்ணையை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் நுழைவு கட்டணமாக 50 காசு வசூல் செய்யப்பட்டது. சீசன் காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நுழைவு கட்ட ணம் மூலம் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும்.

மற்ற மாதங்களில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். முதலைகளை பராமரிக்க இத்தொகை செலவிடப்பட்டது. நாட்டில் உள்ள புலிகள் சரணாலயத்தில் புலிகளை காக்கும் வகையில் எந்தவித சுற்றுலா நடவடிக்கையும் இருக்கக் கூடாது என சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் புலிகள் காப்பகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன் படி அமராவதி வனச்சரகத்தில் உள்ள அமராவதி அணை முதலைப்பண்ணையும் நேற்று மூடப்பட்டது.

முதலைகளை பார்க்க நேற்று ஆவலுடன் சென்ற சுற்றுலா பயணிகள் அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். முதலைப்பண்ணை இருந்ததால்தான் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். தற்போது அதுவும் மூடப்பட்டதால் அணையின் மவுசு குறைந்துவிட்டது. 

No comments:

Post a Comment