Wednesday, January 9, 2013

பாலைவனமாக காட்சி அளிக்கும் அமராவதி அணை பூங்கா


 

உடுமலை,: அமராவதி அணையில் தண்ணீர் இருந்தும் அதன் பூங்கா ஊழியர்களின் பராமரிப்பின்றி பாலைவனமாக காட்சியளிக்கிறது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ளது அமராவதி அணை. இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இரு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கும் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்குகிறது.சிறந்த சுற்றுலா தலமாக விளங்கும்இந்த அணைக்கு வெளியூர்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களை மகிழ்விப்பதற்காகவே அணையின் முன்பக்கம் பிரமாண்டமான புல்வெளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அதில் விதவிதமான மலர் செடிகள், மரங்கள் நடப்பட்டிருந்தன. பச்சை பசேல் என்று அனைவரையும் அது வெகுவாக கவர்ந்தது.

ஆனால் தற்போது அந்த பூங்கா இருந்த இடம் தெரியாத அளவுக்கு பாலைவனம்போல் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மலர் செடிகள் இல்லை, பசும் புல்தரை இல்லை. அனைத்தும் வெயிலில் காய்ந்து பஞ்ச பிரதேசம் போல் காட்சியளிக்கிறது. மழை பெய்யாவிட்டாலும் அணையில் போதிய தண்ணீர் உள்ளது. பூங்காவை பராமரிக்க ஊழியர்கள் இருந்தும் தண்ணீர் ஊற்றி பூங்காவை அழகுப்படுத்தாமல் காய விட்டது வேதனையளிக்கிறது என்று இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் பூங்காவில் உள்ள மரம் காற்றில் முறிந்து விழுந்து ஒரு வாரத்துக்கும் மேலாகியும் அப்புறப்படுத்தாமல் அது அப்படியே கிடக்கிறது. இநத பாராமுகம் நீடித்தால் ஏற்கனவே முதலைப்பண்ணையை மூடியதால் களையிழந்த அமராவதி அணை மேலும் மோசமாகி விடும் என சுற்றலா ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment