Wednesday, January 2, 2013

சந்தோஷத்தில் குளம் வெட்டியவர்கள்!


அருள்... பொருள்... இன்பம்... 10

இது புயல் காலம்! எங்கு பார்த்தாலும் புயல்! தமிழ்நாட்டில் ‘நிலம்’ புயல் என்றால், அமெரிக்கா- நியூயார்க்கில் புயல், சீனாவில் புயல், ஜப்பானில், தாய்வானில், பிலிப்பைன்சில் என்று எங்கு பார்த்தாலும் ஒரே புயல்! கடந்த ஆண்டில் கடலூரில் வீசிய ‘தானே’ புயல் அந்த மாவட்டத்தையே ஒரு நூற்றாண்டுக்கு பின்னே கொண்டு சென்று விட்டது. அந்த மண்ணின் பெரும் சீதனமான பலா மரங்கள் அவ்வளவும் பெயர்ந்து விழுந்ததோடு அதை அகற்றுவதற்கே சம்பந்தப்பட்ட விவசாயி பெரும் செலவு செய்ய வேண்டியிருந்தது. அதேசமயம் இந்தப் புயலால்தான் ஏரி, குளங்கள் அவ்வளவும் நிரம்பி வழியும். ஒரு மழைக்காலத்து மழையால் ஏரி குளங்கள் நிரம்பிட மாதக் கணக்காகும். மழையும் சீராக பெய்ய வேண்டும். ஆனால், இப்படி புயல் வரும்போதுதான் வேக மாக ஏரி குளங்கள் நிரம்புகின்றன.

புயலின் கொடும் தீமைக்கு நடுவில் ஒரு நன்மையாக இதைச் சொல்லலாம். இந்த நிலம் புயலின் போதும் மழை வெளுத்து வாங்கியது. ஆனால் வீராணம் போல சில ஏரிகளைத் தவிர பெ ரும்பாலான ஏரிகளோ, கண்மாய்களோ துளியும் நிரம்பவில்லை. இத்தனைக்கும் மொத்த தமிழகமே பந்தல் போட்டதுபோல இதமான சூழலில் நான்கு நாட்களுக்கு மழை, தோரணம் கட்டியிருந்தது. ஆனால் புண்ணியமில்லை! ஏற்கனவே பெருமளவில் தண்ணீர் பற்றாக்குறை. கர்நாடகாவோடு காவிரித் தண்ணீருக்காக பெரும் சண்டை. தண்ணீரின் மதிப்பை நம்மைவிட உணர்ந்தவர்கள் இருக்க முடியாது என்பதே உண்மை. இருந்தும் வானம் கொடுத்தும் வாங்கி வைத்துக்கொள்ள நமக்கு வக்கில்லை. நம் தமிழ் மண்ணுக்குள் ஒரு காலத்தில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை, பொருணை, பரணி, அமராவதி என்று ஏராளமான நதிகள் ஓடிக்கொண்டிருந்தன.

இன்று நமக்கே நமக்கென்றும் ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்றிருப்பதும் தாமிரபரணி ஒன்றுதான். அதிலும் மணலைத் திருடி, அதன் மேனியைச் சிதைத்து, அதைக் குற்றுயிர் ஆக்கி வைத்திருக்கிறோம். காவிரியோ கன்னடத்தவர்களின் கருணையால் மட்டுமே ஓடமுடிந்த நதியாக உள்ளது. மற்ற நதிப்புலங்கள் எப்போதோ சாக்கடையாகி பன்றிகள் மேயும் தடங்கள் ஆகிவிட்டன. இந்நிலையில் பல மாவட்டங்களின் நீர்த்தேவைகளை சில அணைக்கட்டுகளும் சில கண்மாய்களும் ஏரிகளுமே பூர்த்தி செய்து வருகின்றன. இந்தக் கண்மாய், ஏரிகளையும் நம்மில் சிலர் ஆக்ரமிப்பு செய்து மெல்ல விழுங்கி விட்டனர். இது தொடர்பான ஒரு புள்ளி விவரத்தை சமீபத்தில் நாளிதழ் ஒன்றில் படித்தேன். கிட்டத்தட்ட ஒண்ணே கால் லட்சம் ஹெக்டேரில் ஏரிகள், கண்மாய்கள் இருந்த காலம் போய் இன்று அது நாற்பதாயிரம் ஹெக்டேருக்கு சுருங்கிவிட்டதாக!

அதேசமயம் அவ் வளவு ஏரிகளும் கண்மாய்களும் உள்ளது உள்ளபடி இருந்தபோது நம் மக்கள் தொகை இன்றுள்ளதில் கால்பங்கு கூட இல்லை. ஆனால் இன்று மக்கள் தொகை நான்கு மடங்கு பெருகிவிட்ட நிலையில் அந்த ஒண்ணேகால் லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு ஐந்து லட்சம் ஏக்கருக்கு விரிவாகியிருக்க வேண்டும். ஆனால் சுருங்கியிருக்கிறது. இது எவ்வளவு பெரிய கொடுமை? இருப்பதை அளந்து, கரை கட்டி, தூர் வாரி செப்பனிட்டு வைத்துக் கொண்டால்கூட போதும். நம் அன்றாடத் தேவைக்கு ஒரு வருடம் வானம் பொய்த் தாலும் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அரசாங்கத்தின் கவனம் இதன்மேல்
ஆழமாக இல்லை. ஏதோ சில வேலை வாய்ப்புத் திட்டங்கள் மூலம் அங்கும் இங்குமாய் தூர் வாரப்படுகின்றன என்கிற செய்திகளைப் படிக்கிறேன். ஆனால் அதெல்லாம் யானைப் பசிக்கு சோளப் பொறி போலத்தான்.

இளம் பிராயத்தில் பள்ளியில் சரித்திரப் பாடம் படித்தது மட்டும் மறக்காமல் மனதில் உள்ளது. அதிலும் குறிப்பாக அசோக சக்கரவர்த்தி என்றவுடன் அவர் மரம் நட்டதும், குளம் வெட்டியதும்தான் நினைவுக்கு வரும். அது எந்த அரசனாக இருந்தாலும் சரி. அவன் முதலில் பெரிதாகக் கருதி செய்ததே குளங்களை வெட்டியதுதான், மரங்களை நட்டதுதான்! அதிலும் நீர்த்தேவை என்பது உயிர்த்தேவை என உணர்ந்த சில அரசர்கள் குளங்கள் போதாது என்று அணைகள், ஆற்றில் மதகுகள் என்று கட்டி தங்கள் திண்மையைப் பறைசாற்றியுள்ளார்கள். இன்னும் கல்லணை கரிகாற் சோழனின் பொறியியல் புத்திக்கு சான்றாக கிஞ்சிற்றும் உறுதி குன்றாமல் காட்சியளிப்பதை காணமுடிகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர்த்தேவைக்காக இவ்வளவு திட்டமிட்டு நீர்நிலைகளை உருவாக்கிய நம் முன்னோர்களை நினைக்க பிரமிப்பாக இருக்கிறது.

ஏதேனும் ஒரு பிரார்த்தனை, கடவுளிடம் கோரிக்கை அல்லது போரில் வெற்றி, அதுவுமல்லாது வாரிசுகள் பிறப்பது போன்ற நிகழ்வுகளில் எல்லாம் அதன் நினைவாக, எதிரொலியாக, அன்றைய அரசர்களும் சரி, அவர்களுக்கு கப்பம் கட்டிய குறுநில மன்னர்கள், பாளையக்காரர்கள், ஜமீன்தார்கள் போன்றவர்களும் முதலில் செய்தது குளம் வெட்டியதுதான்! சமீபத்தில் ஒரு கிராமத்துக்கு நான் சென்றபோது அங்குள்ள ஒரு குளம் அந்த நாளைய குறுநில மன்னனுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை ஒட்டி வெட்டப்பட்டது என்கிற செய்தியை அறிந்து ஆச்சரியப்பட்டேன். மதுரை பெரிய தெப்பக்குளமும் திருமலைநாயக்கரால் நாயக்கர் மகால் கட்டும் மண் தேவைக்காக வெட்டப்பட்டதுதான். மண்ணை வெட்டி எடுத்துவிட்டு, அதை ஒரு பள்ளப் பிராந்தியமாக, எனக்கென்ன என்று விட்டுவிடாமல் நடுவில் நீராழி மண்டபம் கட்டி, சுற்றுச் சுவர் எழுப்பி, அதைக் குளமாக்கி, அந்தக் குளம் வற்றிவிடாமல் இருக்க வைகை ஆற்றோடு ஒரு தொடர்பையும் ஏற்படுத்திய திருமலை நாயக்கர் இன்றும் நினைக்கப்படுகிறார்.

இன்றும் எவ்வளவோ வெற்றிகளை எவ்வளவோ பேர் அடைகின்றனர். புதிது புதிதாக கோயில்களும் முளைக்கின்றன. இந்த வெற்றியாளர்கள் ஏன் பழைய முறையை பின்பற்றி அரசாங்க அனுமதியோடு ஒரு புறம்போக்கு நிலத்தில் குளம் வெட்டித்தரக் கூடாது? குளம்கூட வேண்டாம். ஒரு கிணறு வெட்டித்
தரலாமே? புதிதாகக் கூட வேண்டாம். இருக்கின்ற குளங்களை தூர் வாரித் தரலாமே? ஆக்ரமிப்புகளை அகற்றி மழைநீர் சகஜமாய் வந்து தேங்க வழி
செய்யலாமே... எல்லாவற்றையும் எப்போதும் அரசாங்கமே செய்துவிட முடியாது என்பதால்தானே ‘நமக்கு நாமே’ என்றொரு திட்டம் தொடங்கப்பட்டது?
இவ்வேளையில் புராணச் சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது. புராண காலத்தில் ரிஷ்யஸ்ருங்கர் என்று ஒரு ரிஷி இருந்தார். இவர் பெரும் சத் யசீலர். இவர் இருக்குமிடத்தில் தவறாமல் மழை பொழியுமாம்.

ஒருமுறை சீதையின் தந்தையான ஜனக மகாராஜனின் நாடான மிதிலையில் இயற்கை பொய்த்து பெரும் வறட்சி ஏற்பட்டது. அதைப் போக்க ஜனகருக்கு ரிஷ்யஸ்ருங்கரை மிதிலைக்கு அழைத்து வரும் யோசனை கூறப்பட்டது. ஜனகரும் ரிஷ்யஸ்ருங்கரை அழைத்திட, அவரும் வர, மழை பொழிந்து வறட்சி நீங்கியதாம். இன்று ஒருவேளை ரிஷ்யஸ்ருங்கர் இருந்து அவரை நாமும் அழைத்து அவர் வந்து மழையே பெய்தாலும் பயனில்லை. காரணம்? நகரங்கள் கான்கிரீட் காடுகளாகி விட்டன. பூமிக்குள் மழைநீர் நுழையவே இடமில்லை. அடுத்து இந்த நீரை திட்டமிட்டு சேமித்துக் கொள்ளும் ஒரு தீவிரம் நம்மிடம் சுத்தமாய் இல்லை. அதேசமயம் நமக்குத்தான் தண்ணீர்த் தேவையும் மிகுதியாக உள்ளது. வழி இருந்தும் அதைக் காணாதவர்களாக, உதாரணங்கள் இருந்தும் அதை உணராதவர்களாகவே நாம் உள்ளோம். இப்படி இருந்தால் அருளேது, பொருளேது, இன்பம்தானேது?

இந்திரா சௌந்தர்ராஜன் 

No comments:

Post a Comment