Wednesday, January 2, 2013

ரிமோட் என்ற மாயாஜாலம்


அருள்... பொருள்... இன்பம்... 9

என் காலைப்பொழுது கமகமவென்று மணப்பதே செய்தித் தாள்களால்தான். என்னதான் தொலைக்காட்சிகள் செய்திகளுக்கென்றே தனியாக செயல்பட்டாலும் வாசித்து ஒரு செய்தியை அறிவதில் உள்ள நிறைவு தொலைக்காட்சிப் பெட்டியில் எனக்கு கிடைப்பதில்லை. செய்திக் காட்சிக்கு இணையாக செய்தி வரிகள், ‘வாசித்துக்கொள்’ என்றபடியே கீழ்ப்பரப்பில் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும் போது வாசிப்பதே முதலிடம் வகிப்பதாக தோன்றுகிறது. தற்போது தொலைக்காட்சிக்குள் நூற்றுக்கணக்கான அலைவரிசைகள். பக்திக்கு, விஞ்ஞானத்துக்கு, விளையாட்டுக்கு என்று மனித வாழ்வின் தேவைக்கு ஆட்பட்ட சகலமும் காட்சிகளாக கண்முன்னே விரியத் தயாராக உள்ளது.

கையில் ரிமோட் கருவியோடு, கட்டை விரலின் சக்தியோடு உட்காரவோ படுக்கவோ ஒரு இடம் கிடைத்து விட்டால் போதும் உலகை நாம் சுற்றிவரத் தேவையே இல்லை. அது நம்மைச் சுற்றி வந்து விடுகிறது. ஒரு பத்து ஆண்டுக்குள்தான் இந்த பெரும் மாற்றத்தை நமது மண் கண்டிருக்கிறது. தொலைக்காட்சி நம்வரையில் தோன்றி முப்பது ஆண்டுக்கும் மேல் ஆகி விட்டாலும் அதில் பலப்பல அலைவரிசைகள் கிடைக்கத் தொடங்கி இருப்பது என்பது இந்த பத்து ஆண்டுகளாகத்தான். அதேபோல் மிகப் பெரிய அளவு திரைகளோடு தொலைக்காட்சி பெட்டிகள் பெருகி இருப்பதும் இந்த காலக் கட்டத்தில்தான். அலைவரிசையை மாற்றவோ அல்லது ஒலி ஒளி அளவை கூட்டவோ குறைக்கவோ இதனருகே செல்லத் தேவையே இல்லை. ரிமோட் நம் கையில் இருந்தால் போதும்.

விஞ்ஞானம் குண்டூசியில் இருந்து விண்கலம் வரை எவ்வளவோ கண்டுபிடித்துள்ளது. ஆனால் பாமரன் முதல் படித்தவன்வரை அனைவருக்கும் பார பட்சமில்லாமல் பெரிய அளவில் பயன்படும் ஒரே சாதனம் இந்த ரிமோட்தான்! ஐயப்பன்போல் அமர்ந்துகொண்டு, இல்லாவிட்டால் ஷீரடி பாபா போல அமர்ந்துகொண்டு, அதுவுமில்லாவிட்டால் ரங்கநாதர்போல பள்ளிகொண்டு நீங்கள் இதைவைத்துக்கொண்டு உலகைக் காணலாம். ஒரு காட்சி உங்களுக்கு அலுப்பைத் தருகிறதா? எதற்கு இருக்கிறது கட்டை விரல்? ஒரே அமுக்கு... திரையில் அடுத்த காட்சி தோன்றும்! முந்தைய காட்சி உங்களைப் பொறுத்தவரை இருந்தும் இல்லாமல் போகும். அதை உருவாக்கியவர் கள் ஏங்கிப் போவார்கள்.

அலைவரிசைகளில் எதற்கு முதலிடம், தொடர்களில் எதை அதிகம் பார்க்கிறார்கள் போன்ற கணக்கெடுப்புகளை இன்று நம் கட்டை விரல்களே தீர்மானிக்கின்றன. நாம் அமுக்குவது ரிமோட் பட்டன்களை மட்டுமல்ல - காட்சியாளர்களின் தோள்களையும்தான்! இம்மட்டில் நாம் எல்லோருமே சர்வாதிகாரிகளைப் போன்றவர்கள். அதனால்தான் இந்த தொலைக்காட்சியை யாராலும் வெறுக்க முடியவில்லை. இன்று இது இல்லாத வீடே இல்லை.
ஒருகாலத்தில் பெரிய திரை எனப்படும் சினிமாதான் உலகின் மிகப்பெரும் ஆளுமைக்குரிய சக்தியாக இருந்தது. இதில் தோன்றும் நடிகர், நடிகை களுக்கான மவுசு எனப்படும் விளம்பரம் எனப்படும் புகழ் இன்றுவரை குறைந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் சக்தியின் உச்சம்தான், அவர்களில் பலர் அரசியல் அதிகாரத்துக்குள் நுழைந்து முதல்வர் வரை வந்திருப்பதும்...

ஒரு குச்சி மிட்டாயில் ஆரம்பித்து ஆடை அணிகலன்வரை அனைத்துக்கும் இவர்கள் முகமும் சிபாரிசும் தேவைப்பட்டது, தேவைப்படுகிறது. இவர் களும் கோடிக்கணக்கில் சம்பாதித்து பங்களா கார் என்று செழிப்பாகத்தான் இருந்தார்கள். இருக்கிறார்கள். ஆனா, ஆவன்னா அறியாதவர்கள்கூட இவர்களை அறிந்து வைத்திருக்குமளவுக்கு இவர்கள் எண்ணையும் எழுத்தையும்விட சக்தி பெற்றவர்களாக இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர். இவர்களில் பொருளாதார நசிவுகளில் இருப்பவர்களும் உண்டு. அதற்கு வேறு மாதிரியான காரணங்கள்! இவர்களுக்கான நியாயங்களும் சரி, சிரமங்களும் சரி, மனித வாழ்வில் மிகமிக வேறுபட்டவை,உருவத்தால் இவர்கள் மனிதர்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கை முறையில் மனித வாழ்வின் பல ஜீவாதாரங்களுக்கு இடமே கிடையாது.
நாம் தெருவில் போகும்போது பெரிதாக நம்மை யாரும் கவனிக்கவோ, இல்லை பாராட்டவோ, இல்லை வெறுக்கவோ மாட்டார்கள்.

இம்மூன்றும் இவர்களுக்கு மிக சகஜமாக நிகழும். நம் பெண்களுக்கு பாதுகாப்பு நிமித்தம் ஒரு மூங்கில் தடுப்பு போதுமானது. இவர்களுக்கோ இரும்பு அரணே தேவைப்படுகிறது. நாம் நம் உடல் குறித்துக் காட்டும் அக்கறை மிகமிகக் குறைவு. இவர்களுக்கோ அது குறித்து அக்கறை கொள்ளாவிட்டால் வாழ்க்கையே கிடையாது. நம் அகவாழ்வில் நமக்கு பொருள் மிகுதி; இவர்களுக்கோ புற வாழ்வில் பொருள் மிகுதி. நாமும் உழைக்கிறோம். கணக்குப் பிள்ளை, ஆசிரியர், வாகன ஓட்டுநர் என்று.... இப்பணிகளில் பயன்படுபவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஒரு ஆசிரியர் தன் வாழ்நாளில் 2000 மாணவர்களுக்குத்தான் வகுப்பெடுக்கிறார். ஒரு வாகன ஓட்டுநர் சில எஜமானர்களிடம் பணியாற்றி அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் மட்டுமே பயன்படுகிறார்.

மொத்தத்தில் நம் உழைப்பின் பயன் சிலருக்கும், அபூர்வமாக பலருக்கும் பயன்படுகிறது. அதுமட்டுமல்ல. நம்மைப்போலவே உழைப்பதற்கு லட்சக்கணக்கானவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஒரு நடிகன் இவ்விஷயத்தில் மிக மாறுபடுகிறான். இவனது உழைப்பு கோடிக் கணக்கானவர்களுக்கானதாக உள்ளது. அடுத்து அது களிப்பு எனப்படும் மகிழ்ச்சியை மட்டுமே தருவதாகவும் உள்ளது. அதனா லேயே மதிப்பும் ஊதியமும் ஒரு சாமான்ய மனிதனின் அதிகபட்ச ஊதியத்தைவிட மிக அதிகமானதாகவும் இவனுக்கு உள்ளது. பெரிதும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுபவர்களே ஹீரோக்களாக, ஹீரோயின்களாக வரமுடிகிறது. இது ஒரு ஆச்சரியமான அமைப்பு. இதை விதி என்றும் கூறலாம் நிலை என்றும் கூறலாம்.

வாழ்க்கை நம் வசம் இல்லாத ஒன்று என்னும் நம்பிக்கையாளர்கள், இதை விதி என்பார்கள். இதற்கு எதிரானவர்கள் நிலை என்பார்கள். அந்த நாளில் மூன்று மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஆமை போல வரிசை நகர்ந்திட படபடக்கும் இதயத்தோடு நகர்ந்து டிக்கெட் கவுண்டருக்குள் கைவிடும் போது டிக்கெட் தீர்ந்து விட்டது என்று அதைத் தருபவர் கவுண்டரை அடைத்துவிட்ட நிலையில் அப்படியே, அதே இடத்தில் அமர்ந்து கொண்டு அடுத்த காட்சிக்கு காத்திருந்தது எல்லாம் இப்போது ஞாபகத்துக்கு வருகிறது. இன்றைய யதார்த்தம் அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. ஒரு ரயில் பயணத்தில் நான் பயணம் செய்த முதல்வகுப்பு பெட்டியில் எங்கள் நான்கு பேரிடமும் லேப்டாப் இருந்தது.

பெட்டிக் கதவை அடைத்துவிட்ட நிலையில் ஓடும் ரயில் பெட்டிக்குள் நான்கு பேரும் நான்கு திசையில், நான்கு திரைப்படங்களை பார்க்கத் தொடங்கி னோம். சிறிது நேரம் அமர்ந்துகொண்டு, சிறிது நேரம் படுத்துக்கொண்டு, அதன்பின் நான்கு பேருமே சி.டிக்களை மாற்றிக்கொண்டு நான்கு படங்களை யும் பார்த்து முடித்தோம். அதில் சில பாடல் காட்சிகளை திரும்பத் திரும்ப ரசித்தோம். ஒரு பெரியது இப்படிச் சிறியதாகி அற்பமாக பத்து ரூபாய்க்குள் அடங்கிவிட்டது என்பது வளர்ச்சிக்குரிய ஒன்றா, இல்லை வீழ்ச்சிக்குரிய ஒன்றா என்பது பட்டிமன்றம் வைத்து விவாதிக்க வேண்டிய ஒரு விஷயம் என்பது மட்டும் எனக்கு விளங்கியது. கூடவே இந்தப் பெரிய திரை மலிவாகி சின்னத் திரையாகி அதுவும் மிகமிகவே மலிந்து வரும் இந்த விஷயம் என்னை கடவுளர்கள் குறித்தும் சிந்திக்க வைத்தது.

கடவுள் ஏன் நேரில் தோன்றுவதில்லை; தோன்றினாலும் ஏன் ஒரு சிலருக்கு மட்டுமே காட்சி தருபவராக இருக்கிறார் என்கிற என் நெடுநாள் கேள்விக்கு இந்த சின்னத்திரையே ஒரு பதிலை எனக்குள் உருவாக்கி விட்டது. மிகப்பெரும் பலம்கொண்ட பெரிய திரையே மலிந்து சின்னத்திரையாகி, அதுவும் மலிந்து அதை இயக்கும் ரிமோட்டுகளெல்லாமும் பல்போன கிழடுகளாய் உதறியும் தட்டியும் வலிந்தும் இயக்கினாலே இயங்கும் முடியும் என்கிற அளவுக்கு வீட்டுக்கு வீடு வந்து விட்டது. கடவுள் என்பவரும் அழைத்தால் வந்து போகிறவராக இருந்தால் அவருக்கும் ஒரு ரிமோட் செய்து அதையும் அநாவசியமாக படுக்கை மேலோ, சோபா இடுக்கிலோ அல்லது கட்டிலுக்கு அடியிலோதான் போட்டிருப்போம்.

சின்னத்திரையில் சேனல்கள் படும்பாட்டை விட அவரும் பெரும் பாடுபட்டு இந்த உலகை அதில் உயிர்களை குறிப்பாக மனிதனை ஆறாம் அறி வோடு படைத்தது பெரும் தவறு என்று உணர்ந்து பெரும் கோபம் கொண்டு உலகையும் அழித்திருப்பார் என்று தோன்றியது. பெரிய விஷயங்களோ, தத்துவங்களோ, சக்தி அம்சங்களோ, அவை நட்சத்திரம் போல தொலை தூரத்தில் இருந்தால் மட்டுமே மதிப்பு என்கிற ஒரு ஞானமும் ஏற்பட்டது. 

No comments:

Post a Comment