அழகர்மலை (தொடர்ச்சி)
யோக நரசிம்மரை தரிசித்துவிட்டு நகர்ந்தால், அடுத்தடுத்து பூமி வராகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி நாராயணன், ஆண்டாள்-ரங்கமன்னார்- கருடாழ்வார், பார்த்தசாரதி, ருக்மிணி-வேணுகோபாலன்-சத்யபாமா, ஹயக்ரீவர் என்று திருமாலின் பல அம்சங்களை கண்குளிர தரிசிக்கலாம். இன்னொரு சந்நதியில் விஸ்வரூப கிருஷ்ணன் என்று பெயர்ப்பலகை மாட்டி கிருஷ்ண தரிசனம் செய்விக்கிறார்கள். சராசரி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கிருஷ்ணன் சிலை, விஸ்வரூபமாக இல்லாவிட்டாலும் அவனது ஆற்றல்களை நம் மனத்திரையில் ஓட்டி அந்த பிரமாண்டத்தை மனப்பூர்வமாக தரிசித்து மகிழலாம்.
அடுத்து, மேட்டுக் கிருஷ்ணன் சந்நதி. நிறையப் படிகள் ஏறி, மேலே சென்றால் பல தூண்கள் நிறைந்துள்ள மண்டபத்தில் இந்த கிருஷ்ணன் அருள்பாலிப்பதைக் காணலாம். இங்கே பக்தர் யாரையும் காணாதது வியப்பாக இருந்தது. அன்னதானம் அல்லது கோயில் பிரசாதத்துக்காக நெல் தானமளிக்க விரும்புவோர், இந்த மண்டபத்திற்கு வந்து, இரு வாய்கள் வழியாக நெல்லை, உள்ளே குதிருக்குள் கொட்டிச் சேர்க்கிறார்கள். கள்ளழகர் கோயில் சுற்றை முடித்துக்கொண்டு வெளியே வரும்போது நீண்டதொரு படிக்கட்டு மலை மேலேறிச் செல்வதைக் காணலாம். அது நூபுர கங்கை என்ற நீரூற்றுக்குப் போகும் வழி. நுழைவாயில் வளைவில், ‘நூபுர கங்கைக்குப் போகும் வழி. ராக்காயி அம்மன் கோயிலுக்குப் போகும் வழி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
பகல் வேளையிலேயே அடர்ந்த மரங்களாலும் செடி, கொடி, புதர்களாலும் போதுமான வெளிச்சம் இல்லாத அந்த மலைப்படிப் பாதையை மாலை வேளைகளில் பக்தர்கள் பயன்படுத்துவதில்லை. வெளிச்சம் இல்லாதது மட்டுமல்லாமல், கொடிய விலங்கினங்களாலும் ஆபத்து ஏற்படலாம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த நூபுர கங்கையை மலைச்சாலையில், வாகனங்களில் பயணித்தும் செல்லலாம். இதற்கு, அடிவாரத்திலேயே கட்டணம் செலுத்தி, அனுமதி சீட்டு பெற்றுக்கொள்ள வேண்டும். வாகனங்கள் செல்லும் இந்தப் பாதையில், மக்கள் நடந்தும் செல்கிறார்கள். சிலர் சிறு குடங்களிலும் பிளாஸ்டிக் பாட்டில்களிலும் நீர் நிரப்பிக்கொண்டு கீழிறங்கிச் செல்வதைப் பார்க்க முடிகிறது.
இந்த மலைப்பதையில், நடுவே ஒரு முருகன் கோயில். பழமுதிர்சோலை முருகன் என்று அழைக்கிறார்கள். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது என்று கோயிலினுள் எழுதி வைத்திருக்கிறார்கள். வெளியே சற்றுத் தள்ளி பிரமாண்டமான ஒரு நாவல் மரம். அதனடியில் ஒரு பிள்ளையார். இந்த நாவல் மரத்தின் மேலிருந்தபடிதான் முருகப் பெருமான், ஔவைப் பாட்டிக்கு ‘சுட்ட பழங்களையும் சுடாத பழங்களையும்’ உதிர்த்தானாம். அதனாலேயே பழம் உதிரும் சோலை என்றழைக்கப்பட்டு, பின்னாளில் பழமுதிர்சோலை என்றும் வழங்கப்பட்டதாம். ஆனால் இப்பகுதி, அறுபடைவீடு எனப்படும் முருகன் தலம் இல்லை என்றும், அழகர், தன்னுடைய இந்தத் திருமாலிருஞ்சோலையில் மருமகன் முருகனுக்கும் இடம் அளித்திருக்கிறார், அவ்வளவுதான் என்றும் சொல்கிறார்கள்.
வாதங்கள் எப்படி இருந்தாலும் இந்தத் திருமலையில் சைவமும், வைணவமும் தழைத்தோங்குவதைக் கண்டு இன்புற முடிகிறது. உண்மையில், தன் சகோதரி மீனாட்சியின் திருக்கல்யாணத்தில் பங்குபெறத்தானே கள்ளழகர் இங்கிருந்து புறப்பட்டு மதுரைக்குச் செல்கிறார்! ஆகவே இரு அழகர்கள் இங்கே கொலுவீற்றிருப்பது பொதுவான பக்தர்களுக்கு அற்புத தரிசனப் புண்ணியம்தான். திருமாலிருஞ்சோலை எம்பெருமானின் பேரருளுக்குப் பாத்திரமானவன், மலயத்துவசன் என்ற மாமன்னன். இவன், அர்ஜுனன் - சித்ரவாகனன் - பப்ருவாகனன் -இந்திரத்யும்னன் என்ற பரம்பரையில் வந்தவன். மதுரைக்கு அருகில் மணலூர் என்ற தலத்தில் இந்த பரம்பரையினர் அரசோச்சி வந்தனர். இந்த மலயத்துவசனின் பக்தி செலுத்தும் முறை மிகக் கடுமையானது. தினமும் இவன், காசிக்குச் சென்று கங்கையில் நீராடி, பிறகு கயை சென்று அங்கிருந்த கதாதரன் என்ற பெருமாளை சேவித்துத் திரும்புவது வழக்கம்.
இந்த தினசரி வழிபாட்டை இவன் தவறாது மேற்கொள்ளும் பொருட்டு, அகத்திய முனிவர் இவனுக்கு ஒரு புஷ்பக விமானத்தைத் தயாரித்துத் தந்திருந்தார். அந்த விமானத்தில்தான் அவன் இவ்வளவு தொலை தூரம் போய் வந்துகொண்டிருந்தான். ஒருநாள், அவ்வாறு அவன் புறப்பட்டபோது, சிறிது தூரத்திலேயே விமானம் சட்டென்று விண்ணில் நின்றது. அதுமட்டுமல்லாமல், அப்படியே கீழே இறங்கியது. அவ்வாறு அந்த விமானம் இறங்கிய இடம், திருமாலிருஞ்சோலை. தரையில் இறங்கிய விமானத்தில் திகைப்புடன் அமர்ந்திருந்த மலயத்துவசனை ஓர் அசரீரி ஈர்த்தது: ‘‘மன்னவனே, பக்தியில் நீ காட்டும் ஈடுபாடு பாராட்டத்தக்கது. ஆனால் பெருமாள் தரிசனத்துக்காக தொலைதூரம், வெகுநேரம் நீ மெனக்கெடுவது எதற்காக? அங்கே நீ கங்கையில் நீராடுகிறாய்; இங்கே உனக்காக கங்கைக்கு ஒப்பான நூபுர கங்கை என்ற சிலம்பாறு ஓடுகிறதே.
அங்கே கதாதரனை வணங்கும் நீ, இங்கேயே இருக்கும் கள்ளழகரை வணங்கலாமே!’’ மனம் தெளிந்தான் மன்னன். தூரமும் நேரமும் பெரிதும் மிச்சப்படும் என்பதோடு, இங்கே கூடுதல் நேரம் இறைவழிபாட்டில் செலவிடலாமே என்று பெரிதும் மகிழ்ந்தான். அதற்குப் பிறகு மன்னன் திருமாலிருஞ்சோலைக்கே தினமும் வந்தான்; நூபுர கங்கை எனப்படும் சிலம்பாற்றில் நீராடி, அழகரை தரிசித்துப் பேறு பெற்றான். இந்த நூபுர கங்கை கங்கைக்கு ஒப்பானது என்று புராணம் சொல்கிறது. எம்பெருமான் திரிவிக்ரம அவதாரம் எடுத்து, விண்ணை ஒரு காலால் அளந்தபோது, அந்த பாதத்துக்கு பிரம்மன் திருமஞ்சனம் செய்தான். அந்த நீரே கங்கையாகப் பெருகியது. அவ்வாறு பெருகிய நீர், சிறிதளவு, பெருமாள் அணிந்திருந்த சிலம்பில் பட்டுத் தெறித்து, தென்னாட்டை நோக்கி சிலம்பாறாகப் பெருகி ஓடிவந்தது. ஆகவே கங்கைக்கு ஒப்பான பெருமை கொண்ட ஆறு இது என்று போற்றுவதில் தவறில்லையே!
சிலப்பதிகாரம், ‘இட்ட சித்தி எய்துவீர் ஆயின், இட்ட சித்தி எய்துவீர் நீரே’ என்று இந்த சிலம்பாறு என்ற நூபுர கங்கையை, ‘இட்ட சித்தி’ என்று குறிப்பிடுகிறது. திருமாலை தரிசித்துவிட்டு திருவரங்கம் செல்கிறான் மாடலன் என்பவன். அவன், வழியில், மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்த கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரையும் சந்திக்கிறான். புலம்பெயர்ந்து நல்வாழ்வை எதிர்பார்த்துச் செல்லும் கோவலன், கண்ணகிக்குத் துணையாக வந்த கவுந்தி அடிகள் ஆகியோரை ஆறுதல்படுத்தும் நோக்கத்துடன், அந்த மலையில் அமைந்திருக்கும் மூன்று தீர்த்தங்களைப் பற்றிச் சொல்கிறான்: ‘‘இங்கிருந்து இடப்பக்கமாக நீங்கள் சென்றால், திருமால்குன்றத்தைக் காண்பீர்கள். அங்கே ஒரு சுரங்கப் பாதை இருக்கிறது. அந்தப் பாதை வழியாகச் சென்றால், மூன்று தீர்த்தங்களைக் காண்பீர்கள். புண்ணிய சிரவணம், பவகாரிணி, இட்டசித்தி என்று பெயர்கள் கொண்டவை அவை.
முதலாவதான புண்ணிய சிரவணப் பொய்கையில் நீராடினால், இந்திரன் எழுதிய ‘ஐந்திர வியாகரணம்’ என்ற நூலறிவை நீங்கள் பெறுவீர்கள்; பவகாரிணியில் மூழ்கி எழுந்தால், பிறவி பற்றிய ஞானம் உண்டாகும்; இட்டசித்தியில் நீராடினால் எண்ணியதெல்லாம் கைகூடும்.’’ இந்த இட்டசித்திதான் சிலம்பாறு என்ற நூபுர கங்கை.
தமிழ்த் திவ்ய சூரிசரிதம்,
‘நூபுர கங்கையின் அரவம் மிடைந்த பாங்கர்
அனைத்துலகும் புகழ் திருமாலிருஞ்சோலைப் பேர்
அம்மலையின் அழகன் இவன், மதுரை மூதூர்
தனைப் புரந்த முன் மலயத்துவசன் செல்வம் தானாகி
அடைபவருக்கு ஐந்துருவுமாகி சுந்தரவல்லிகை தனக்குச் சுரக்கும் இன்பச் சுந்தரனாம்’
என்று வர்ணிக்கிறது. அதாவது, ‘பேரிரைச்சலுடன் வீழ்கிறது நூபுர கங்கை எனும் ஆற்றருவி. இப்படி விழும் அருவியைக் கொண்டிருக்கும் கானகம், ஓர் உயர்ந்த மலையையும் கொண்டிருக்கிறது. இந்த மலைமீது திருக்கோயில் கொண்டிருக்கிறான், அழகன். மலையத்துவசன் பெற்ற பெருநிதி இவன். உலகத்து அழகையெல்லாம் தானே உறிஞ்சி மயக்கும் தோற்றம் கொண்டுத் திகழ்கிறான் இந்த அழகன். இந்தப் பேரழகன், சுந்தரவல்லித் தாயார் கண்டு பெருவிருந்தாக அனுபவிக்கும் பாங்காகவும் தாயார் பெருமை கொள்ளும் வகையிலும் அமைந்திருக்கிறான்’ என்கிறது. பல படிகள் ஏறி இந்த நூபுர கங்கையை அடையலாம். எங்கிருந்து உருவாகிறது, எப்படிப் பெருகுகிறது என்ற மர்ம முடிச்சு மனதில் விழுகிறது. வியப்பு மேலிட அருகே சென்றால், ஒரு கட்டுப்பாடு கருதி, ஒரு அறையை அந்த ஊற்றைச் சுற்றி உருவாக்கியிருப்பதைக் காணமுடிகிறது.
கம்பித் தடுப்புகள் அமைத்து பக்தர் வரிசை ஒழுங்குபடுத்தப்படுகிறது. பொங்கிவிழும் ஊற்றில் உடலைக் காட்டி, முற்றிலுமாக நீராடும் பக்தர்கள் சிலசமயம், பின்னால் நின்று காத்திருப்பவர்களை மனதில் கொள்ளாது, நீரூற்றிலேயே நேரம் பார்க்காது ஊறித் திளைத்துவிடுவதால், அனைவருக்கும் உரிய நேரத்திற்குள் நீராடும் வாய்ப்பு கொடுப்பதற்காக அங்கே ஒரு ஊழியர் பிளாஸ்டிக் குழாய் மூலமாக நீரை பக்தர்கள் மீது பீய்ச்சியடிக்கிறார். அந்த அறை அமைப்பில், இரும்புக் கம்பிகளால் ‘ராக்காயி அம்மன் தீர்த்தம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
துவாதசி திதி அன்று இந்த நூபுர கங்கையில் நீராடுவது அனைத்து வகையான பாவங்களிலிருந்தும் நம்மை விடுவிக்கும் என்கிறார்கள். குறிப்பாக ஐப்பசி மாதம் வளர்பிறை துவாதசி திதியன்று நீராடினால், கவலையற்ற வாழ்க்கை, எதையும் எதிர்கொள்ளும் ஆக்கபூர்வமான மனதிடம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலான பரமபத பதவியும் கிடைக்கும் என்பது ஆழமான நம்பிக்கை. கிழக்கு-மேற்காக 16 கிலோமீட்டர் நீளம், ஆயிரம் அடி உயரம் என்று திகழும் அழகர் மலையின் கிரீடமாக விளங்குகிறது இந்த நூபுர கங்கை. கங்கை நதியின் மூலம் அறியமுடியாதிருப்பது போலவே இந்த நூபுர கங்கையின் பிறப்பிடமும் ஆராய்ச்சிக்குட்பட்டது. திடீரென பொங்கிப் பிரவாகமெடுக்கும் இந்நதி, பெருமாளின் சிலம்பில் பட்டுத் தெறித்த நீர்த்துளி என்ற புராணச் செய்தியிலிருந்து இந்த ரகசியம் இன்னும் அறியப்படாததாகவே இருக்கிறது என்றே தெரிகிறது.
இந்த நூபுர கங்கையில் அழகனை நினைத்தபடி மனமும் குளிர நீராடிவிட்டு, படியேறி மேலே சென்றால், ராக்காயி அம்மன் வரவேற்கிறாள். பேரழகுடன் திகழும் இந்த அம்மன், இந்த நூபுர கங்கையின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். அன்னையின் ஆசியைப் பெற்று கீழிறங்கி வரலாம்.

No comments:
Post a Comment